என்ஜின்கள் செயலிழந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தை வயலில் மோதி தரையிறக்குவது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு 10 வினாடிகளே இருந்ததாக விமானி தெரிவித்தார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து நோயாளிகளை ஏற்றிக்கொண்டு குர்கான் நோக்கி வந்த ஏர் ஆம்புலன்ஸ் ரக சிறிய விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக தெற்கு டெல்லியில் உள்ள நஜப்கர் அருகில் உள்ள ஒரு வயலில் தரையிறக்கப்பட்டது.
என்ஜின்கள் செயலிழந்தபோதும் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
விமானத்தை தரையிறக்கிய பரபரப்பான தருணம் குறித்து விமானி அமித் குமார் கூறியதாவது:-
விமானத்தில் போதிய அளவுக்கு எரிபொருள் இருந்தது. முதல் என்ஜின் செயலிழந்தபோது, எப்படியும் மற்றொரு என்ஜின் மூலம் விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கான சாத்தியக்கூறு இருந்ததால் தொடர்ந்து சென்றோம்.
ஆனால் அடுத்த 10 நிமிடங்களுக்குள் இரண்டாவது என்ஜினும் செயலிழந்துவிட்டது.
அப்போது விமான நிலையத்திற்கு வெளியே 15 கி.மீ. தொலைவில் இருந்தோம். அதனால், சேர வேண்டிய இடத்தை சென்றடைய முடியாது என்று தெரிந்துவிட்டது.
இந்த சிக்கலான தருணத்தில், இரண்டுவிதமாக யோசிக்காமல் மக்கள் நெருக்கம் உள்ள நஜப்கர் நகரத்தை நோக்கி திருப்பினோம்.
நகரை நெருங்கியபோது சுமார் 3000 அடிக்கும் குறைவான உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தது.
அப்போது பயணிகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே என்னிடம் இருந்தது. எனவே, தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினோம்.
தரையை தொடுவதற்கு 10 வினாடிகள் இருந்தபோது, காயிர் கிராமத்திற்கு மேல் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்தோம். அங்கு மின்கம்பங்கள் எதுவும் இல்லை, வயல்வெளி தெரிந்தது.
இதனால் அங்கு தரையிறக்க முடிவு செய்தோம். எங்கள் திட்டப்படி வெட்டவெளியில் மோதியபடி விமானம் தரையிறங்கியது. பயணிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எனது நோக்கம் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இவர் 2011ம் ஆண்டு முதல் விமானியாக பணியாற்றி வருகிறார். விபத்தில் சிக்கிய விமானத்தில் இவருடன் துணை விமானியாக ரோகித் சிங் என்பவர் பணியாற்றினார்.