கான்பூர்: குடிப்பழக்கம் உடைய நபர் ஒருவர் ஐபிஎல் சூதாட்டத்தில் தனது மனைவியை பெட் வைத்து இழந்த கொடுமை உ.பி. மாநிலம் கான்பூரில் நடந்துள்ளது.
கணவரின் கேடு கெட்ட செயலால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார், அந்தப் பெண்ணை சூதாட்டத்தில் வென்ற நபர்களைத் தேடி வருகின்றனர்.
மகாபாராதத்தில்தான் மனைவி திரவுபதியை பெட் கட்டி இழந்து நின்றான் தர்மர் என்று படித்திருக்கிறோம். ஆனால் நிஜத்திலும் அதுபோல ஆங்காங்கு நடக்கத்தான் செய்கிறது.

இதோ இப்போது கான்பூரில் ஒரு குடிகார கணவர், தனது மனைவியை சூதில் தோற்று அவரை பெரும் துயரத்துக்குள்ளாக்கியுள்ளார்.

கான்பூரின் கோவிந்த் நகரைச் சேர்ந்த அந்த நபர் ஒரு குடிகாரர். நல்ல சொத்து சுகத்துடன் வாழ்ந்து வந்தவர். ஆனால் குடிப்பழக்கத்தாலும் சூதாட்டத்தில் ஈடுபட்டும் தனது சொத்துக்களை அழித்து விட்டார்.

இவர் குடித்து அழித்ததை விட குடித்து விட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு அதில் இழந்த சொத்துக்கள்தான் அதிகம். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் தொடர்பான சூதாட்டத்திலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

அதில் ஒரு கட்டத்தில் சூதில் வைக்க பணமோ, பொருளோ இல்லாததால், தனது மனைவியையே பெட் வைத்துள்ளார். அதில் அவர் தோற்றார். இதனால் சூதில் வென்றவர்கள், இனி உன் மனைவி எங்களுக்குச் சொந்தம் என்று கூறியுள்ளனர்.

அத்தோடு நிற்காமல் அந்தப் பெண்ணுக்குப் போன் செய்து உன்னை உனது கணவர் சூதில் தோற்று விட்டார். இனி எங்களுக்குத்தான் நீ சொந்தம் என்றும் பேசவும் ஆரம்பித்துள்ளன்.

பல்வேறு “அழைப்புகளையும்” அவர்கள் விடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் உடனடியாக போலீஸில் புகார் கொடுத்தார். புகாரைப் பதிவு செய்த போலீஸார் தற்போது அந்தக் கும்பலைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோவிந்த்நகர் காவல்துறை அதிகாரி அஜய் பிரகாஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில், தனது கணவர் பெரிய குடிகாரர் என்றும் தினசரி குடித்து விட்டு வந்து அடிப்பார் என்றும், தநது பெற்றோர் வீட்டிலிருந்து ரூ. 7 லட்சம் வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தி வந்தார் என்றும் அப்பெண் கூறியுள்ளார் என்றார்.
இந்தத் தம்பதிக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆனது முதலே மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார் அந்த நபர். இப்பெண் ஒரு அழகுப் பொருள் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார்.

Share.
Leave A Reply