வ்வொருவருக்கும் எதாவது ஒன்றின் மீது பயமிருக்கும், அந்த பயத்தின் அளவு கூடவோ குறையவோ இருக்கலாம். அந்த பயமே அளவுக்கு அதிகமானால் அதுதான் ஃபோபியா. பயம் பற்றிய பயம் அதிகமாகி, Phobophobia வருமளவுக்கெல்லாம் யோசித்து, ஹாலிவுட்டில் பல படங்கள் ஃபோபியாக்கள் குறித்து வெளியாகிவிட்ட நிலையில் இந்தியில், ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகியிருக்கிறது “ஃபோபியா”.

ராதிகா ஆப்தே, ஒரு நாள் இரவில் டாக்ஸியில் தனியாக வீடு திரும்புகிறார், அந்த நேரத்தில் அவருக்கு நிகழும் அசம்பாவிதம் ஒன்றால் மனநிலை பாதிக்கப்பட்டு, புதிய இடம், புதிய மனிதர்கள், திறந்த வெளி, ஆட்கள் நிறைய கூடும் இடம் என்று எதைக் கண்டாலும் பயப்படும் Agoraphobia அவருக்கு ஏற்படுகிறது.

அது குணமாக வேண்டி, நண்பனுக்குத் தெரிந்த அப்பார்ட்மெண்டில் தனியாக வசிக்கும் ராதிகாவின் பயத்தின் உச்சகட்டம் என்னவென்பதையும், ஃபோபியாவிலிருந்து ராதிகா விடுபட்டாரா என்பதையும் பயங்கர அச்சத்தோடு சொல்கிறது மீதிக் கதை.

அகோரோஃபோபியாவை விளக்க படத்தின் ஒரு காட்சியைச் சொல்லலாம்.  அப்பார்ட்மென்டில்  வசிக்கும் ராதிகா ஆப்தே கதவைத் திறந்து காரிடாரில், இருபது அடி தள்ளி இருக்கும் குப்பைத் தொட்டியில் குப்பையை வீசவே நடுங்குகிறார்.

தன் வீட்டின் வாசலிலிருந்து காலை வெளியே எடுத்துவைப்பதற்குள் உடல் நடுங்கி, வியர்த்து ஊற்றுகிறது. யாரோ வரும் சத்தம் கேட்க உடனே வீட்டுக்குள் ஓடி ஒளிந்துகொள்கிறார்.

உடைகளை ஒன்றோடொன்று முடிச்சுப் போட்டு, அதை வீட்டில் அலமாரி ஒன்றில் கட்டி, மறுமுனையை தன் இடுப்பில் கட்டிக் கொண்டு வெளியே வருகிறார்.

ஐந்தடி தூரம் இருக்கும்போது கயிற்றின் நீளம் காரணமாக நின்றுவிட, அந்த இடத்திலிருந்து குப்பைகளை தூக்கிப்போட்டு குடுகுடுவென வீட்டிற்குள் ஓடி விடுகிறார்.

ராதிகா ஆப்தே மட்டுமல்லாமல், இந்தப் படத்தைப் பார்க்கும் அனைவரையும் அச்சத்தில் உறையவைக்கும் அளவிற்கு திரைக்கதையில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார் இயக்குநர் பவன் க்ருபாளினி.

ராகினி எம்.எம்.எஸ், தர் – தி மால் படங்களைத் தொடர்ந்து இது இவருக்கு மூன்றாவது படம்.  ஃப்ரிட்ஜ் ஃப்ரீஸரில் விரல்கள், பாத் டப்பிற்குள்ளிருந்து  ரத்தக் கால்கள் வெளிவருவது,

பயந்தபடியே ஒரு பெண் அறைக்குள் தவழ்ந்து செல்வது என்று  நடக்காதவைகளை கற்பனை செய்துகொண்டு பயப்படும் காட்சிகளில் ராதிகா அதிர்ச்சியாகிறார் என்றால், அதன்பின்னர் அவற்றை நிஜமாக்கியிருக்கும் காட்சிகளில் இயக்குநர் நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.

phobiaமுழு படமும் வீட்டுக்குள்ளேயே நடக்கிறது. இருந்தாலும் படத்தின் விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை.

ராதிகாவின் காதலனாக வரும் சத்யதீப், நிக்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் தயாமா இருவருமே பயத்தையும், கோவத்தையும் கச்சிதமாக காட்டியிருக்கிறார்கள்.

படம் முழுவதும் ராதிகா ஆப்தேவே முழுக்க முழுக்க நிறைந்திருக்கிறார். ஆனாலும் ஒரு சின்ன இடத்தில் கூட பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாமல், காட்சிக்கு காட்சி வெரைட்டியாக பயப்படுகிறார் ராதிகா.

தனித்தனியாக அவர் கைகள், கால்கள் கூட பயத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. ராதிகா ஆப்தே நடிக்கிறாரா.. நிஜமாகவே பயப்படுகிறாரா என்பதைப் பிரித்தறியாத அளவுக்கு இருக்கிறது அவரது நடிப்பு.

அடுத்து கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் ராதிகா ஆப்தே, இந்த நிலைக்கு வருவதற்கு, அவர் கடந்து வந்த படிகள் ஏராளம்!

பயத்தை மீறி, உயிரை காப்பாற்றிக்கொள்ள வீட்டிற்கு வெளியே மாடிபடிகளில் ராதிகா நடந்துவரும் காட்சியின் நாமும் அவருடனே பயணிக்கும் உணர்வைத் தருகிறது ஜெயகிருஷ்ணாவின் சினிமாடோக்ராஃபி, அந்த நேரத்தில் தனக்கு நடந்த சம்பவங்களை நினைத்துப்பார்க்கும்  இடங்கள், ஃபோபியாவிலிருந்து  விடுபடும் இடங்கள் என்று படத்திற்கான ஃபினிஷிங் வரையிலும் நச்.  கச்சிதமான சவுண்ட்ஸ், ஷார்ப் எடிட்டிங் என்று படமே திகில் தரும் பக்கா பேக்கேஜ்.

கடைசி காட்சியை,  ஓர் ஓவியத்தில் ஃப்ரீஸ் செய்து பின்.. அதிலிருந்து கேமரா நகர்ந்து வரைந்தது யார் என்று காண்பித்ததன் மூலம் பல பக்க வசனங்களில் விளக்க வேண்டியதை நச்சென்று சொல்லாமல் சொன்ன விதம் க்ளாப்ஸ் அள்ளுகிறது.

ஃபோபியா – தவிர்க்காமல் பார்த்து பயப்பட வேண்டிய படம்!

Share.
Leave A Reply