ஈழப் போரட்டத்தின் எச்ச சொச்சங்களையும் அழிப்பதற்கான மேலதிக முயற்சிகள் புலம்பெயர் நாடுகளிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் இப்போது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளன.
வியற்னாமில் அமெரிக்க உளவாளியாகச் செயற்பட்டு அந்த மக்களின் போராட்டத்தை அழிக்க முற்பட்டவர் ரிச்சார்ட் ஆர்மிதாஜ். எழுபதுகளில் நிக்கரகுவா மக்களின் போராட்டத்தைச் சீர்குலைப்பதற்காக சண்டினிஸ்டா விடுதலை இயக்கத்திற்கு எதிராக கொண்டூராஸ் எதிர்ப்புரட்சிகர அமைப்பின் ஊடாக கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் ஆர்மிதாஜ்.
richard_armitage
இந்த அமைப்பின் குண்டுவெடிப்பு நடவடிக்கைகள், போதைபொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களை வழி நடத்தியவர். வியட்னாமிய மொழியைச் சரளமாகப் பேசத்தெரிந்த ரிச்சார்ட் ஆர்மிதாஜ் இற்கு இப்போது தமிழ் மொழி தெரிந்திருக்குமா என்ற சந்தேகங்கள் எழுவது வழமையானதே.
முள்ளிவாய்க்கால் அழிவுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் புலம்பெயர் அமைப்புக்களுடன் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட ஆர்மிதாஜ் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை இனவெறியாக மாற்றி இலங்கை அரசைப் பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
வணங்காமண் என்று பெயரிடப்பட்ட கப்பலை வன்னிக்கு அனுப்பிவைப்பதாக மக்களை ஏமாற்றிய முயற்சிகளின் பின்னணியில் ஆர்மிதாஜ் செயற்பட்டார்.
தெற்கில் சிங்களப் பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் ஆர்மிதாஜ் உடன் இணைந்து செயற்பட்ட புலம்பெயர் பினாமிகள் காணப்பட்டதாக ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இலங்கை அரசாங்கம் தெற்கிலிருந்து அமோக ஆதரவைப் பெற்றுக்கொண்டமைக்கு இக்குண்டு வெடிப்புக்களும் பிரதான காரணம்.
இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை ஆரம்பத்துவைத்த முக்கிய நபர்களில் ஆர்மிதாஜ் பிரதானமானவராகச் செயற்பட்டார்.
ஐரோப்பாவில் அன்டன் பாலசிங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சுதாகரன் நடராஜா ஆர்மிதாஜ் இன் செல்லப்பிள்ளை போன்று செயற்பட்டார்.
வன்னி மனிதப் படுகொலைகள் நிறைவுற்றதும் கோதாபயவிற்கு வாழ்த்துத் தெரிவித்து இலங்கை அரசுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஆர்மிதாஜ் 2011 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் அமெரிக்கப் பயணத்தின் போது உள்ளக ஆதரவை வழங்கினார்.
US Deputy Secretary of State Richard L. Armitage
இரண்டு வாரங்களின் முன்னர் இலங்கை சென்ற ஆர்மிதாஜ், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர்களைச் சந்தித்தார்.
2001 ஆம் ஆண்டிற்கும் 2005 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அமெரிக்க அரசின் துணை அரசதுறைச் செயலாளராகச் செயற்பட்ட ஆர்மிதாஜ் (United States Deputy Secretary of State ) ஆர்மிதாஜ் இன்டர்னாசனல் என்ற அமைப்பின் தலைவராகச் செயற்பட்டுவருகின்றார்.
அழிவு நடக்கும் நாடுகளிலெல்லாம் தலைகாட்டும் ஆர்மிதாஜின் இன்றைய திட்டமிடல் தமிழ்ப் பேசும் மக்களைக் கையாள்வதும் அழிப்பதுமாகும். அதற்குப் புலம்பெயர் நாடுகளிலுள்ள தனி நபர்களும் அமைப்புக்களும் பயன்படுத்தப்படுகின்றன.
சுதாகரன் நடராஜா
கடந்த மே மாதம் 11ம் திகதியன்று ஆர்மிதாஜ் இன்டர்னாசனல் ஐச் சேர்ந்த காரா புலு என்பவருடன் இணைந்து சுதகாரன் நடராஜா உட்பட பலர் கருத்தரங்கு ஒன்றை நிகழ்த்தினர்.
இலங்கையில் நீதியும் சமாதானமும் என்ற இக் கருத்தரங்கை ஆர்மிதாஜ் உடன் தொடர்புடைய தமிழ் தன்னார்வ நிறுவனமான பேர்ள் ஒழுங்கு செய்திருந்தது.
இதற்கு முன்பதாக ரீ.சீ.சீ அமைப்பின் ஆதரவில் சுதாகரன் நடராஜா ஏற்பாடு செய்திருந்த அமெரிக்க ஆதரவுக் கருத்தரங்கு ஒன்று லண்டனில் நடைபெற்றது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் சர்வதேச ஊடகவியலாளர் சங்கம் நடத்திய விழா ஒன்றில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் சுதா நடராஜாவும் கலந்துகொண்டார்.
சீ.வீ.விக்னேஸ்வரனைப் பின்னணியிலிருந்து இயக்கும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த விமலன் என்பவர் பேர்ள் அமைப்புடன் இணைந்து செயற்படும் ஒரு நபர்.
தவிர, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40 வது ஆண்டு விழாவை நடத்திய குழுவினரிருந்த பலர் ஆர்மிதாஜ் வலைப்பின்னலில் இணைந்து செயற்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இலங்கையில் குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் சுய நிர்ணைய உரிமையையும், மக்கள் சார்ந்த அரசியலையும் முன்வைத்து மக்களை அணிதிரட்டும் தந்திரோபாயம் அவசியமானது.
அதற்கான முன்னணிப்படையாக கட்சிச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பப்படுவதும், அதனை சந்தர்ப்பவாத அரசியலிலிருந்து விடுவித்து முன் நகர்த்திச் செல்வதும் அவசியமானது.
புலம்பெயர் நாடுகளில் புலிகள் இயக்கத்தின் சின்னங்களை முன்வைத்து அமெரிக்க – ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு மக்களைக் காட்டிக்கொடுக்கும் குழுக்கள் அழிக்கப்படும் போதே புரட்சிகரக் கட்சியின் தோற்றம் சாத்தியமானது.
புலம்பெயர் குழுக்கள் அமெரிக்க அடிவருடிகளாகச் செயற்படுகின்றன. அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தை இயக்கிவருகிறது.
ஆக, இன்று இலங்கை அரசாங்கத்தின் பின்னால் புலம்பெயர் குழுக்கள் அணிவகுத்துள்ளன.
புலம்பெயர் குழுக்கள் கடந்த தசாப்தத்தில் ஏற்படுத்திய அழிவுகளிலிருந்து முற்போக்கு ஜனநாயக அரசியல் தளத்தை விடுவிப்பதும், அதனை மக்களின் விடுதலையை நோக்கி முன் நகர்த்துவதும் சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு மனிதனதும் வரலாற்றுக் கடமை!