சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய ஆளுனர் தொடர்பாக, கொழும்பு அதிகாரமட்டத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த இழுபறியை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
மத்திய வங்கி ஆளுனர் நியமனம் தொடர்பாக கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நீண்ட கயிறிழுப்புகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றுக்காலையில், திடீரென சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அபிவிருத்தி மூலோபாய, அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரை, சந்தித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மத்திய வங்கியின் ஆளுனராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை நியமிக்கப் போவதாக தெரிவித்தார்.
இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணங்கினார். தனது அமைச்சில் ஆலோசகராக இருக்கும், இந்திரஜித் குமாரசுவாமியை விடுவிக்க அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் ஒப்புதல் தெரிவித்தார்.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் மத்திய வங்கியின் ஆளுனராக பணியாற்றிய அர்ஜுன் மகேந்திரன், பிணைமுறி தொடர்பான சர்ச்சையில் சிக்கிய நிலையில், அதுபற்றிய விசாரணைகள் முடியும் வரை அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதில்லை என்று சிறிலங்கா அதிபர் முடிவெடுத்திருந்தார்.
எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரை மீண்டும் பதவியில் அமர்த்த திட்டமிட்டிருந்தார். அதற்கு சிறிலங்கா அதிபர் ஆதரவளிக்காத நிலையில், தற்காலிக ஆளுனராக சரித்த ரத்வத்தையை நியமிக்க ரணில் விக்கிரமசிங்க யோசனை முன்வைத்திருந்தார்.
இதனை ஏற்றுக்கொள்ள விரும்பாத சிறிலங்கா அதிபர், இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்ட 5 பேரின் பட்டியல் ஒன்றை அனுப்பி அவர்களில் ஒருவரின் பெயரைப் பரிந்துரைக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியிருந்தார். அதற்கான பரிந்துரைகள் ஏதும் மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைக்கவில்லை.
இதையடுத்து, நாணயச் சட்டத்தின் கீழ், இந்திரஜித் குமாரசுவாமியை மத்திய வங்கி ஆளுனராக நியமிக்க முடிவு செய்தார். இதற்கு பதில் நிதி அமைச்சரான லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன பரிந்துரை செய்திருந்தார்.
முன்னதாக, நிதியமைச்சரே இந்தப் பரிந்துரையை செய்ய வேண்டும் என்று கருதப்பட்டது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, வெளிநாடு சென்றுள்ள நிலையில், இதுதொடர்பான முன்னணி சட்டவாளர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையை அடுத்து, பதில் நிதியமைச்சருக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் உள்ளதாக அறியப்பட்டது.
இதையடுத்தே, சிறிலங்கா அதிபர் இந்த நியமனத்தை வழங்கினார்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், சிறிலங்கா பிரதமருடன் ஆலோசித்து, நிதியமைச்சரின் பரிந்துரையுடன் மத்திய வங்கி ஆளுனரை சிறிலங்கா அதிபர் நியமிப்பார் என்று கூறப்பட்டிருந்தது.
மத்திய வங்கி ஆளுனர் நியமனத்துக்கு நிதியமைச்சரின் பரிந்துரை அவசியம் என்றும், நிதியமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பியதும் இதுபற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை வெளியான சில மணிநேரங்களில், அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய, ஊடகங்களைத் தொடர்பு கொண்டு இந்த அறிக்கையை பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இது சிறிலங்கா அதிபரின் ஒப்புதலைப் பெறாமல் வெளியிடப்பட்டதாகவும், அவர் கூறியிருந்தார்.
சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட ஊடக அமைச்சின் செயலர் நிமால் போபகே, இந்த அறிக்கை, தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்படவில்லை என்று வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்திருந்தார்.
அதேவேளை, கடந்த வியாழக்கிழமை சிறிலங்கா பிரதமரின் செயலகத்தில் இருந்து, தொலைபேசி மூலம் அழைக்கப்பட்ட நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உடனடியாக நாடு திரும்புமாறு கேட்கப்பட்டிருந்தார்.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பீஜிங் சென்றிருந்த அவர், அங்கிருந்து நிதியமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்க ரோக்கியோ சென்றிருந்தார்.
ரோக்கியோவில் இருந்த ரவி கருணாநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உடனடியாக நாடு திரும்புமாறும், அவசியம் கொழும்பில் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து அவர் தனது பயணத்தை இடைநிறுத்தி விட்டு இன்று நாடு திரும்புகிறார். எனினும், மத்திய வங்கியின் புதிய ஆளுனர் நியமிக்கப்பட்டு விட்ட நிலையில் அவரை அவசரப்பட்டு இப்போது வரவேண்டாம் என்று நேற்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை ஜூன் 29ஆம் நாள் காலை 11.46 மணியளவில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ருவிட்டரில், ஒரு வரிச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அடுத்த சில மணித்தியாலங்களில், மத்திய வங்கியின் புதிய ஆளுனரை நியமிக்கவுள்ளேன். என்று அதில் அவர் கூறியிருந்தார். எனினும், 70 மணித்தியாலங்கள் கழித்தே புதிய ஆளுனர் நியமனம் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
( இன்று வெளியான சண்டே ரைம்ஸ் வாரஇதழின் அரசியல் பத்தியில் வெளியான தகவல்களின் தொகுப்பு)