“வன்னிக்குப் போகவேணும். காலையில யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு வாங்கோ. அங்கயிருந்து போகலாம்” என்றார் சுரேஸ். மறுநாள், சொன்ன இடத்துக்கு, சொன்ன நேரத்துக்கு வந்து சேர்ந்தார் சிறி.
சொன்னமாதிரியே அங்கே பயணத்துக்குத் தயாராக நின்றார் சுரேஸ். மிக எளிமையாகச் சாறத்தோடு நின்ற சுரேசைக் கண்டதும் சிறிக்குச் சற்று ஆச்சரியம்.
இருவரும் பஸ்ஸில் ஏறிப் பயணமாகினார்கள். போகுமிடத்தில் ஒரு சிறிய கடையில் சாப்பிட்டனர். தேநீர் குடித்தார்கள்.
வன்னியில் இறங்கி, தெரிந்த வீடொன்றிலிருந்து சைக்கிளை வாங்கி, அதிலேயே இருவரும் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச்சேர்ந்தனர்….
இது வேறு யாருமல்ல. ஒருவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். மற்றவர் சுகு என்ற ஸ்ரீதரன். இது நடந்தது ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.
இப்பொழுது இவ்வாறு ஒரு சம்பவம் நிகழுமா?
சுரேசும் சுகுவும் ஒன்றாகச் சந்திப்பதும் ஒன்றாகப் பயணம் செய்வதும் நிகழலாம். ஆனால், அது பஸ்ஸிலோ ரெயினிலோ சைக்கிளிலோ என்பதாக இருக்காது.
சுகு இப்போதும் சைக்கிளில்தான் திரிகிறார். சாதாரணமாகச் சிறிய கடைகளில்தான் பொருட்கள் வாங்குகிறார். தேநீர் குடிக்கிறார்.
சாப்பிடுகிறார். தனியே நண்பர்கள், தோழர்களிடம் செல்கிறார். சிறிய சந்திப்புகள், கூட்டங்கள் எல்லாவற்றுக்கும் சென்று கலந்து கொண்டு தன்னுடைய கருத்துகளைச் சொல்கிறார்.
அவருடைய தொடர்புகளும் உறவும் சாதாரணமாகவே உள்ளது. போராட்ட கால வாழ்க்கையின் தொடர்ச்சியைப்போல…
ஆனால், சுரேஸ் போன்றவர்கள் அப்படியல்ல. சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அசோக் என்ற முருகேசு சந்திரகுமார் போன்ற எல்லோருமே இந்தப் போராட்ட வாழ்க்கையின் சுவட்டுக்கு அப்பால் சென்று விட்டனர்.
இவர்களில் எவருமே இனி வாழ்வில் என்றும் சைக்கிளில் பயணிப்பர் என்று சொல்வதற்கில்லை. சைக்கிளில் மட்டுமல்ல, பஸ்ஸில் சனங்களோடு ஏறிப் பயணம் செய்வார்கள் என்றும் சொல்வதற்கில்லை.
இவ்வளவுக்கும் இவர்கள் இப்போது அரசியலில் அதிகாரமெதையும் கொண்டிருப்பவர்களுமில்லை.
இவர்களே இப்படியென்றால், அதிகாரத்திலும் செல்வாக்கிலும் உள்ளவர்களின் கதையைக் கேட்க வேணுமா? எல்லோரும் பிரமுகர்களாகி விட்டனர்.
சனங்களின் வாழ்க்கைக்கும் தலைவர்களின் வாழ்க்கைக்கும் இடையில் வேறுபாடுகளும் மாறுபாடுகளும் உருவாகி விட்டன.
சாறம் கட்டியபடி, சைக்கிளோடி, அரசியல் செய்தவர்கள், சனங்களோடு கூடி வாழ்ந்தவர்கள், சனங்களின் ஆதரிப்போடு, அந்த வீடுகளில் உண்டு, உறங்கியவர்கள் எல்லாம் இன்று சனங்களோடு பஸ்ஸிலோ, ரெயினிலோ பயணிக்கத் தயாரில்லை.
இப்போது சனங்களோடு நின்று ஆஸ்பத்திரிகளில் மருந்தெடுக்கமாட்டார்கள். சாதாரண கடைகளில் தனியே சென்று பொருட்களை வாங்குவதில்லை.
கசங்கிய உடைகளை மாறியும் அணிவதில்லை. ஊர்களில் நடக்கின்ற பொது நிகழ்வுகள், மரணச்சடங்குகளுக்குச் சாதாரணமாகச் செல்வதில்லை. அல்லது தனியாகச் செல்ல மாட்டார்கள்.
எல்லாவற்றிலும் ஒரு பந்தா, ஒரு செயற்கைத்தனம். ஒரு பிரமுகர் அடையாளம் தேவையாகி விட்டது. இதுவே இன்று அரசியல் முறைமையாகவும் அரசியல் அடையாளமாகியும் விட்டது.
போராளி வாழ்க்கையும் போராட்ட அரசியலும் பிரமுகர் அரசியலாகிய விதமும் விந்தையும் இது.
“நீங்கள் VIP யாக வேண்டுமா? யோசிக்காமல் அரசியலில் ஈடுபடுங்கள். அதிலும் போராட்டம், புரட்சி, காந்தி, காந்தியம், சேகுவேரா, ஃபிடல், பிரபாகரன், புலிகள், தமிழ்த்தேசியம், சுயாட்சி, தனிநாடு, தமிழீழம், மாவீரர்கள், எரித்திரியா, தீபெத், இப்போது கொசோவா என்று சில பெயர்ச் சொற்களைச் சொல்லத் தெரிந்து விட்டால்போதும்.
உங்களுடைய காட்டில் மழைதான்….” என்று சொல்லிச் சிரிக்கிறார் நண்பர் ஒருவர். இந்த நண்பர் 28 ஆண்டுகள் போராளியாக இருந்தவர்.
அதிலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் 1980 களின் நடுப்பகுதியில் இணைந்து 28 ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செயற்பட்டவர்.
ஒரு காலைப் போராட்டத்தின்போது இழந்திருப்பவர். போரின் பிறகு தடுப்புக்குச் சென்று இரண்டு ஆண்டுகள் அங்கே கழித்து விட்டு வந்து இப்பொழுது கோழி வளர்க்கிறார்.
நண்பரைப்போலப் போராளிகளாக இருந்தவர்களில் பலர் இப்போது கோழி அல்லது மாடு வளர்க்கிறார்கள்.
சிலர் ஓட்டோ ரிக்ஸா ஓட்டுகிறார்கள். கொஞ்சப்பேர் தேநீர்க்கடைகளிலும் அச்சகங்களிலும் கராஜ்களிலும் வயல்களிலும் வேலை செய்கிறார்கள். சிலர் படையினரின் பண்ணைகளில் பணியாற்றுகிறார்கள்.
வேறு சிலர் மேசன் வேலைக்குப்போகிறார்கள். சிலர் தச்சுவேலை பழகுகிறார்கள். இதெல்லாம் அவர்களுக்குப் பழக்கமே இல்லை என்றாலும் வேறு வழியில்லை.
ஏனென்றால் இவர்களிற் பலர் வேலைகளே இல்லாமல் நாளாந்த வாழ்க்கைக்கே கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஏதோ கிடைத்த வேலைகளில் தொற்றிக் கொள்வதும் ஈடுபடுவதும் பெருங்கொடையன்றி வேறென்ன?
இதைவிட இவர்களில் அனேகமானவர்கள் படிப்பைப் பாதியில் விட்டு விட்டு இயக்கத்தில் சேர்ந்தவர்கள். இதனால் போராட்டப் பணிகளைத் தவிர, இந்த மாதிரியான வேலைகளில் முன்னனுபவமில்லாதவர்கள்.
ஆனால், போராட்டம் இந்தப் போராளிகளின் ஆற்றலைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டது. போராட்டத்தின் மூலம் இவர்கள் பல சாதனைகளைப் படைத்திருந்தார்கள்.
இப்போதுள்ள மாகாணசபை கூட இவர்களைப்போன்றவர்களினால் கிடைத்த ஒன்றே. இதனால் ஒரு காலத்தில் இவர்கள் இலங்கை அரசியலில் தீர்மானச் சக்திகளாக இருந்தனர்.
ஆனால், இன்று இவர்களுக்கு அரசியலில் எந்த முக்கியத்துவமும் இல்லை. எந்த மாதிரியான பாத்திரமும் கிடையாது. வேண்டுமானால் எதோ ஒரு தரப்பை ஆதரிக்கலாம். அல்லது யாருக்காவது வாக்களிக்கலாம்.
அல்லது யாருடையவோ அல்லக்கைகளாக இருக்கலாம். அவ்வளவுதான். அதற்கப்பால் சுய அடையாளத்தோடும் விடுதலை அரசியலோடும் மெய்யாகவே முயற்சித்தால், “இவர்கள் வேறு யாருடையவோ நிகழ்ச்சி நிரலில் இயங்குகிறார்கள்,” “அந்நிய சக்திகளிடம் விலைபோய் விட்டனர்” என்ற அடையாள முத்திரை குத்தப்படும்.
தேவையற்ற சந்தேகங்கள் கிளப்பி விடப்படும். அவதூறுகள் பரப்பப்படும். அதன்வழியாக இவர்களுக்கு எதிரான எதிர்ப்பு வளையம் உருவாக்கப்பட்டு இவர்கள் சமூகத்திலிருந்தே ஒதுக்கப்படுவார்கள்.
ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருப்பதையும் விடக் கொடுமையான நிலையாக அது ஆகி விடும். ஆகவே பிச்சை வேண்டாம்.
நாயைப் பிடியுங்கள் என்ற கதையாக, அரசியல் பக்கமே பார்க்கக் கூடாது என்று பேசாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
இத்தகைய ஒரு தந்திரோபாய நிலையில்தான் கடந்த முப்பது நாற்பது ஆண்டுகாலமும் படித்து, பதவிகளில் இருந்தவர்களும் ஓய்வு பெற்றவர்களும் தனிப்பட்ட ரீதியில் தொழில் அதிபர்களாக இருந்தவர்களும் நெளிவு சுழிவுகளுக்குள்ளால் தங்களுடைய காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் இப்போது அரசியலில் கோலோச்சத் தொடங்கியுள்ளனர்.
களப்பணியும் தியாகமும் போராட்ட வாழ்க்கையும் என்ற சிரமங்களில்லாமலே தலைமைத்துவத்தைப் பிடித்துக் கொள்வதும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் வாய்ப்பானதாகி விட்டது பலருக்கும்.
இப்பொழுது இதயத்திலே சுதந்திர தாகத்தையும் கையிலே விடுதலைக் கருவியையும் வைத்திருந்தவர்களின் காலம் முடிந்து விட்டது.
இவ்வாறானவர்களின் காலம் முடிவடைந்தவுடன் அல்லது கைமாறியவுடன், அந்த இடத்தில் பழையபடி பழைய பெருச்சாளிகள் வந்து குந்தி விட்டன.
அவையே இன்று அரசியல் செய்கின்றன. அவையே இன்று அதிகாரத்தைச் சுவைக்கின்றன. அதிகாரத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாகத் தமது நலன்களுக்காகப் பயன்படுத்துகின்றன.
தங்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் தலைமைகளால் மக்களுக்கு விரோதமாகவே நடக்க முடியும். மக்களின் நலனில் கைவைக்கும்போது இந்த விரோதப்போக்கு தலையெடுக்கத் தொடங்கி விடுகிறது.
ஆகவே, இந்த அரசியலானது “பொய்ப்பூ”வையே பூத்துக் கொண்டிருக்கிறது. இதுவே மக்களுடைய இன்றைய சலிப்புக்கும் நம்பிக்கையீனத்துக்கும் காரணமாகின்றன.
இதை இன்னொரு வகையில் சொல்வதென்றால், “சாறம் கட்டி அல்லது சீருடைய தரித்துப் போராடியவர்களின் காலம் போய், வெள்ளை வேட்டி அல்லது பட்டுச் சேலையுடன் “பகட்டு அரசியல்” செய்வோரின் காலம் வந்தது” எனலாம் .
ஆனால், ஒரு போதும் பகட்டு அரசியலுக்கு ஆயுள் நீடிப்பதில்லை. உடனடி மினுக்கம் மறையத் தொடங்க அதனுடைய உண்மை முகம் பளிச்செனத் தெரிந்து விடும்.
இத்தகைய மாறுபட்ட அரசியற் செயற்பாட்டுக் களத்திலும் சிந்தனை முறையிலும் ஏராளம் குத்துக் கரணங்களும் தகிடு தத்தங்களும் நிகழத் தொடங்கி விட்டன.
இதுவே இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் தமிழ் அரசியல் வெளியிலும் நடக்கின்ற குத்து வெட்டுகளும் முரண்களும் குழிபறிப்புகளுமாகும்.
இதுவே தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கை தொடர்பிலும் அரசியல் தீர்வு முயற்சிகளிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற சறுக்கல்களாகும். மாகாணசபைக்குள் நடக்கின்ற அடிதடிகளும் ஒத்துழையாமை இயக்கங்களும் இதன் விளைவுகளே.
இந்தளவுக்கு உள் முரண்பாடுகளில்லை என்றாலும் பகட்டு அரசியலைத் தவிர, அர்ப்பணிப்பு அரசியலையோ செயற்பாட்டு அரசியலையோ கொண்டிருக்காத நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போன்றவையும் உள்ளன.
இதேவேளை ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்ட அரசியலிலும் ஏராளம் தவறுகளும் பலவீனங்களும் இருந்தன என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
அவற்றின் பலவீனமே இன்றை நிலைக்குக் காரணமாகும். அவை விட்ட தவறுகளினால் ஏற்பட்ட வெற்றிடத்தில், பொருத்தமற்ற சக்திகள் முளைக்கத் தொடங்கி விட்டன. “பயிர்ச்செய்கை பாழடைந்து விட்டால், அந்த இடத்தில் புல்லும் பூண்டுமே முளைக்கும்” அல்லவா. அதுதான் இங்கே நிகழ்ந்திருக்கிறது.
ஆனால், என்னதான் தவறுகளையும் பலவீனங்களையும் கொண்டிருந்தாலும் விடுதலைப் போராட்ட அரசியலில் ஈடுபட்ட போராளிகளிடம் தம்மை அர்ப்பணிக்கின்ற – மக்களுக்காகப் பாடுபடுகின்ற, தாம் கூறிக்கொண்ட கொள்கைக்காகவும் லட்சியத்துக்காகவும் தியாகம் செய்கின்ற இயல்பும் உண்மைத் தன்மையும் இருந்தது.
அது அவர்களுடைய நேர்மையாகும். அது அந்த அரசியலுக்கு மதிப்பையும் பலத்தையும் கொடுத்தது. அதனால்தான் அந்த அரசியலுக்கு இன்னும் பெறுமானம் இருக்கிறது.
இன்றைய அரசியல் எத்தகைய தெளிவும் உறுதியுமில்லாமல் தளம்பிக் கொண்டிருப்பதற்குக் காரணம், அகத்திலும் புறத்திலும் எத்தகைய தெளிவும் உறுதிப்பாடும் இல்லை என்பதுவே.
இப்போது அரசியலில் இருக்கின்ற எவரிடமாவது, நீங்கள் முன்னெடுக்கின்ற அரசியலை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கான உங்களுடைய செயற்பாட்டு முறை என்ன? அதில் உங்கள் பங்களிப்பு என்ன? என்று கேட்டால், தலையைச் சொறிவார்களே தவிர, பதிலைச் சொல்வதற்கான திராணி இருக்காது.
இதுதான் இன்றைய தமிழ் அரசியல் தரப்பின் நிலை. இது சமகாலத் தமிழ் அரசியல் வரலாற்றின் மிகப் பெரிய அவலமும் சோகமுமாகும்.
இதனால்தான், 2009 க்குப் பிறகு தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் தொடர்பாக எத்தகைய முன்னேற்றங்களையும் காண முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்ப்பிரதேசங்களின் வளர்ச்சியும் சரி, தமிழ் மக்களுடைய வாழ்க்கையும் சரி, எத்தகைய வளர்ச்சியையும் பெற முடியாமல் தேங்கிப்போயுள்ளது.
இதற்குள் காட்டப்பட்ட ஆலாபனைகள் எல்லாம் மெல்ல மெல்ல வெளுக்கத் தொடங்கி விட்டன.
இந்த தேக்கத்துக்கான காரணத்தை, வீழ்ச்சியை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கும் இந்த அரசியலுக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டுமாக இருந்தால், இந்த இடத்தில் நாம் ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்க வேண்டும்.
நவீன இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமிழ் அரசியற் தலைமைகள் ஒடுக்குமுறை செய்யும் அரசையும் சிங்களப் பேரினவாதத்தையும் எதிர்த்து நிற்கின்ற ஒரு போக்குப் பின்பற்றப்பட்டு வந்தது.
இதனுடைய பிரதான நோக்கம், ஒடுக்கும் தரப்பிற்கு நெருக்கடிகளைக் கொடுப்பதாகும். இதையே தமது அரசியல் வழிமுறையில் பிரதான உபாயமாகக் கொண்டிருந்தன.
இதற்காக அவை செலுத்திய விலையும் மேற்கொண்ட வழிமுறைகளும் உச்சமானது. இதுவே தமிழ் அரசியலின் அடையாளமாகவும் பலமாகவும் காணப்பட்டது. கருதப்பட்டது.
ஆனால், இதற்குள்ளிருந்த எல்லைமீறிய எதிர்ப்பும் விட்டுக்கொடாத போக்கும் கிடைத்த வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் தவற விட்டதும் உண்டு.
அது அரசியற் தந்திரோபாயங்களைக் கையாளத் தவறிய விளைவுகளாயின. ஆனாலும் தமிழ் அரசியலை முன்கொண்டு சென்றதில் இந்த எதிர்ப்பரசியலுக்கு ஒரு பெரும் பங்குண்டு.
ஆனால், இன்றைய அரசியல் போக்கோ இதற்கு முற்றிலும் மாறானதாக மாறி விட்டது. இப்பொழுது தலைமைப்பொறுப்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அரசையும் சிங்களப்பேரினவாதத்தையும் காப்பாற்றுவதற்காகவே பாடுபடுகிறது.
இதற்காக அது தமிழ் மக்களை எதிர்க்கவும் மக்களுக்கு வரலாற்றுத் துரோகமிழைக்கவும் துணிந்து விட்டது என்று கூறுமளவுக்கு தன்னுடைய செயற்பாடுகளை மாற்றியமைத்துள்ளது. இது தனிப்பட்ட ரீதியில் அந்தக் கட்சியின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டல்ல.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தல்களின்போது தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் செய்த பிரகடனங்களையும் அதன் தலைமைப்பீடம் இன்று சொல்லிக் கொண்டிருக்கும் வார்த்தைகளையும் மதிப்பீடு செய்வதன் மூலம் வெளிப்படும் உண்மை இது.
இந்த நிலை ஏன் வந்தது? இது ஒன்றும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளைக் கொண்ட ஆழ்ந்த ரகசியமல்ல.
மேல்நிலைச் சிந்தனையாளர்களின் கூட்டின் வெளிப்பாடே இது. கொழும்பு மைய அரசியற் சிந்தனையின் விளைவு இது. இது தமிழ் அரசியல் வரலாற்றுக்குப் புதியதும் அல்ல. தமிழரசுக் கட்சியின் தந்தை என வர்ணிக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் காலத்திலேயே இந்தப் போக்குக் காணப்பட்டது.
அன்றைய தமிழ் அரசியல் தலைமைகளும் கொழும்பு மைய அரசியலையே கொண்டிருந்தன. ஆகவே கொழும்பு மையத்தில் இருந்து செயற்படுவதற்குத் தோதாக அவை சிந்திக்க முற்படுகின்றன.
அவ்வளவுதான். ஆனால், இவற்றுக்கான அரசியல் அங்கீகாரமும் ஆதரவும் தமிழ் மக்களிடத்திலிருந்து கிடைக்க வேண்டும் என்பதால், இவை வடக்குக் கிழக்கின் அரசியல் உணர்வைப் பேசு பொருளாக்கும். இது தேர்தலுக்கு மட்டுமே. தீர்வுக்கோ பிற அரசியல் முன்னெடுப்புக்கோ அல்ல.
ஆகவே வாக்களித்த மக்களுக்கு விசுவாசமா? வாரி வழங்கும் அரசாங்கத்துக்கு விசுவாசமா? என்ற விவாதங்கள் எல்லாம் பயனற்றவை. இந்த அரசியல் வரலாற்றை விளங்கிக் கொண்டு செயற்படுவதே எதிர்கால அரசியலுக்கு அவசியமானது.
இல்லையென்றால், குண்டுச் சட்டிக்குள்தான் தமிழ் அரசியற் குதிரைகள் ஓடிக் கொண்டிருக்கும்.
– கருணாகரன்-
நன்றி.
செய்தி மூலம்: தேனி இணையம்