இலங்கை மத்திய வங்கியில் கடந்த 2015 பெப்ரவரி முதல் 2016 மார்ச் 31 வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
அந்த அபிப்பிராயங்களில் அனேகமானவை அக்காலப்பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடிகள் நிகழ்ந்ததாக கூறுகின்றன. நிதி, அதிகார ரீதியிலான துஷ்பிரயோகங்கள், சிறப்புரிமை துஷ்பிரயோகம் என அப்பட்டியலை குற்றச்சாட்டின் அடிப்படையில் நீட்டிச் செல்லலாம்.
இந் நிலையில் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகத்தின் போது உண்மையிலேயே மோசடி இடம்பெற்றதா என ஆராய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது.
பிரதமரின் பிட்டிபன உண்மையைத் தேடும் குழு, 2015 பாராளுமன்றின் கோப் குழு, 2016 ஆம் ஆண்டின் கோப் குழு ஆகியன இந்த பிணை முறி தொடர்பில் பிரத்தியேக விசாரணைகளை செய்து அறிக்கையை பாராளுமன்றத்துக்கும் சட்ட மா அதிபருக்கும் சமர்ப்பித்திருந்த நிலையில், இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
பிட்டிபன குழுவின் அறிக்கைக்கும் கோப் குழுவின் அறிக்கைகளுக்கும் இடையில் இருந்த பல்வேறு முரண்பாடுகள் கூட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவை அமைப்பதில் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம்.
எது எப்படியோ, கடந்த ஆண்டு விசாரணைகளை ஆரம்பித்த, உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையிலான மூவர் கொண்டவிசாரணை ஆணைக் குழு அதன் இறுதி அறிக்கையை கடந்த 2017 டிசம்பர் 30 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தது.
இதனைத் தொடர்ந்து அந்த அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதில் உள்ளடங்கியுள்ள விடயங்களை மையப்படுத்தி கடந்த மூன்றாம் திகதி விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டார்.
அதில் முக்கிய விடயங்களாக பின் வரும் விடயங்களை அவதானிக்கலாம்.
1. முன்னாள் மத்தியவங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனினதும் வங்கி உத்தியோகத்தர்களினதும் வெளியிலிருந்து செயற்பட்ட சில நபர்களினதும் நிறுவனங்களினதும் பங்கேற்புடனும் பேர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவனம் சட்டத்திற்கு முரணான வகையில் இலாபத்தை ஈட்டியுள்ளமை:
2015 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் மூலம் பேர்ப்பச்சுவல் நிறுவனம் ஆகக்குறைந்தது 688 மில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளது.
இத்தொகையானது விசாரணைக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஈட்டிய இலாபமாகும். விசாரணைகளிலிருந்து வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இரண்டாம் நிலைச் சந்தையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களின் மூலம் பேர்ப்பச்சுவல் நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ள ஆகக்குறைந்த இலாபம் 11145 மில்லியன் ரூபாவாகும்.
இதனால் ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட இதனுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நட்டம் 8529 மில்லியன் ரூபா ஆகும்.
2. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் முடிவுகள் தொடர்பில் மத்திய வங்கியின் உயரதிகாரிகள் செயலிழந்த நிலையில் இருந்துள்ளனர்.
அர்ஜுன மகேந்திரன் முறைகேடான முறையிலும் தவறான முறையிலும் தீர்மானங்களை மேற்கொண்டு பிணைமுறி ஏலம் தொடர்பான செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டிருப்பதுடன் உள்ளக தகவல்களை வெளித்தரப்பினருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார் .
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு இலாபமீட்டக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
3 அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு நியமிப்பது தொடர்பான பிரதமர் ரணிலின் அதிகாரங்கள் முறையானது. எனினும் பாராளுமன்றத்தில் அர்ஜுன மகேந்திரன் மற்றும் சமரசிறி ஆகியோர் பற்றியும் அதிலும் குறிப்பாக அர்ஜுன மகேந்திரன் கொடுத்த வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து செயற்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தமை நடந்திருக்கவே கூடாதது.
இந்த விடயங்கள் கோப் விசாரணைக்குழுவின் முன்னிலையிலும் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும் பிரதமர் அர்ஜுன மகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
4. அலோசியஸ் குடும்பத்தினருக்கு சொந்தமான, அவர்களின் நிர்வாகத்தின் கீழிருந்த வோல்ட் அன் றோ நிறுவனத்தினால் பென்ட் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பென்ட் ஹவுஸ் மாடி வீட்டுக்கு மாதாந்த வாடகை செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பொறுப்புக் கூற வேண்டும். அதனால் அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட வேண்டும்., ஆணைக்குழுவின் முன்னால் பொய் சாட்சியம் அளித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் பிரகாரம் குற்றவியல் விசாரணை நடத்தப்படல் வேண்டும்.
5. ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதி முறைகேடான விதத்தில் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. அதன் உண்மையான தொகையை அறிவதற்கு சட்டரீதியான ஆய்வு (தடயவியல் தணிக்கை பரிசோதனை) மேற்கொள்ளப்பட வேண்டும். இதனுடன் தொடர்புடையோரின் பெயர்களும் உள்ளடங்குகின்றன.
6. தண்டனை பெற்றுக் கொடுப்பதற்காக பேர்ப்பச்சுவல் நிறுவனத்தின் அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன மற்றும் அறிக்கையில் பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இனங்காணப் பட்டிருப்பவர்களுக்கு எதிராக குற்றவியல் மற்றும் சிவில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படல்.
அரசுக்கு ஏற்பட்ட நட்டத்தினை ஈடு செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படல் . அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல்.
7. இலங்கை மத்திய வங்கியில் எதிர்காலத்தில் இவ்வாறான செயல்கள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கும் ஆணைக்குழுவின் தற்கால பரிந்துரைகளை செயற்படுத்தக்கூடிய வகையிலும் பழைய சட்டத்தை இரத்துச் செய்து புதிய நாணயச் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தல்.
பதிவு செய்யப்பட்ட பங்குப் பத்திரங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தல். நாணய சபை உறுப்பினர்களையும் மத்திய வங்கி ஆளுநரையும் நியமிப்பதற்கு அரசியலமைப்புப் பேரவையின் அனுமதியைப் பெறல். அரச கடன் திணைக்களத்தின் செயற்பாடுகளை கடும் கண்காணிப்புக்குள் கொண்டுவரல்.
7. மத்திய வங்கியின் கணக்காய்வு செயற்பாடுகள் உரிய முறையில் நடைபெறாது இருப்பதால் அதன் கணக்காய்வு பிரிவினை முற்றிலும் மாற்றியமைத்தல்.
மத்திய வங்கிக்கென பிரத்தியேக சட்ட பிரிவினை ஸ்தாபித்து அதனை வினைத்திறன் மிக்கதாக ஆக்குதல். 2008 முதல் 2015 வரையில் இடம்பெற்ற பிணைமுறி வழங்கல் தொடர்பில் ஆராய்வதற்கான உரிமை இவ் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெறாமையினால் அதைப்பற்றிய விசாரணை மேற்கொள்ளல்.
8. பேன் ஏசியா வங்கியுடனான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் அதன் முன்னாள் தலைவரின் செயற்பாடுகள் ஆகியன ஆராய்ந்து பார்க்கப்படல்.
9. பொதுவாக குறிப்பிட்ட பணத்தை மீளப் பெறுதல் வழமையான சட்டத்தின்கீழே செயற்படுத்தப்படுகின்றது. ஆயினும் அதிக காலம் எடுப்பதால் அதற்கு மாற்று வழியாக இந்த பணத்தினை மீளப்பெறுவதற்கு பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை நிறைவேற்ற வேண்டும். அதற்கான பாராளுமன்ற அங்கீகாரத்தினைப் பெற்று துரிதமாக பணத்தை மீளப் பெற்றுக்கொள்ளல்.
10. ஆணைக்குழுவை முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்து செலவினங்களையும் பேர்ப்பச்சுவல் நிறுவனத்திடமிருந்து அறவிட்டுக்கொள்ளல்.
இந்த 10 விடயங்களுமே ஜனாதிபதியின் கூற்றின் பிரகாரம் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் இறுதி அறிக்கையின் முக்கிய விடயங்கள்.
ஜனாதிபதியின் கூற்றின் பிரகாரம், மத்திய வங்கி பிணை முறி விநியோகத்தில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது. மேலே கூறியது போன்று நிதி, அதிகாரம் சார் மோசடிகள் இவ்வாறு இடம்பெற்றுள்ளன.
அதற்கு பொதுவாக எல்லா தரப்பாலும் குற்றம்சாட்டப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், அவரது மருமகன் அர்ஜுன் அலோசியஸ், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆணைக் குழு, இம்மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என பெயர்குறிப்பிட்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.
எனினும் இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக பெரிதும் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விடயம், ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைய சிந்திக்கச் செய்கின்றது.
தலையை தடவி கொட்டுதல் என்பது போல அர்ஜுன மகேந்திரனை நியமித்தது சரி என கூறிவிட்டு பின்னர் பாராளுமன்றில் மகேந்திரனை காக்கும் வண்ணம் பேசியமை தவறு என கூறுவது பிரதமர் விடயத்தில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பை சட்ட மா அதிபரிடம் ஒப்படைப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
ஏனெனில் ஜனாதிபதி விசேட உரையில், அறிக்கையை சட்ட மா அதிபரிடம் கொடுத்துவிட்டேன். அவர்கள் ஆராய்ந்து யார் யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பர் என சிலேடையாக சொல்லியிருந்தார்.
ஒரு வேளை பிரதமருக்கு எதிராக நேரடியாக நடவடிக்கை எடுங்கள் என கூறாமல் ஜனாதிபதி மைத்திரி சிலேடையாக கூட இவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கலாம்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற குறித்த மோசடியால் அரசுக்கு ஏற்பட்ட நட்டத்தின் மொத்த தொகை 11145 மில்லியன் ரூபா.
இதில் ஊழியர் சேமலாப நிதி, மஹாபொல புலமைப்பரிசில் நிதி, தேசிய சேமிப்பு வங்கியின் நிதி இலங்கை காப்புறுதி நிறுவன, காப்புறுதி கூட்டுத்தாபன நிதியம், ஆகியவற்றின் தொகை 8529 மில்லியன் ரூபாவாகும்.
அதாவது 8.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் நிதி. எஞ்சிய தொகை தனியார் துறையினருக்கு சொந்தமானது. 70 இலட்சம் தனியார் துறையின் வியர்வையில் சேமிக்கப்பட்டவையே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாய
உண்மையில் இந்த மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களுடன் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் சம்பந்தம் ஒன்றும் இரகசியமல்ல. எனவே அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற பரிந்துரை நியாயமானது.
எனினும் ஜனாதிபதி பட்டும் படாமலும் சொன்ன பிரதமர் விடயத்தில் கேள்விகள் தொடர்கின்றன. ஏனெனில், இந்த பாரிய மோசடி இடம்பெறும் போது மத்திய வங்கிக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தவர் பிரதமர் ரணில்.
அப்படியானால் அவரது பொறுப்பு இங்கு தட்டிக்கழிக்கப்பட முடியாதது. பிரதமரை மீறி ரவி கருணாநாயக்கவோ அல்லது வேறு ஒருவரோ மத்திய வங்கியில் ஆதிக்கம் செலுத்தி இருப்பார் என்று யாராவது நினைப்பார்களானால் அது முட்டாள் தனமானது.
எனவே தான் அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு நியமித்த பிரதமர் அதன் பின்னர் பிணை முறி தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எழும் போது அவரை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக பாராளுமன்றத்தில் 2015.03.17 அன்று, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரது கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் மத்திய வங்கியின் ஆளுநர் இதனுடன் தொடர்புபடவில்லை.
குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை. மத்திய வங்கி ஆளுநர் கேள்வி கோரல் மனு நடவடிக்கைகளில் தலையீடு செய்யவில்லை.’ என காப்பாற்றும் பதில்களை கொடுத்திருந்தார்.
இந்த மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் மீது விரல் நீட்ட நியாயமான காரணங்கள் அல்லது சந்தேகங்கள் உள்ளன.
குறிப்பாக காலா காலம் நிதியமைச்சின் கீழ் இருந்த மத்திய வங்கியை பிரதமர் தனக்கு கீழ் கொண்டு வந்தமை, சிங்கப் பூர் பிரஜையை ஆளுநராக நியமித்தமை, அவரைக் காப்பாற்ற அவரின் பதவிக் காலத்தை நீடிக்க முயற்சித்தமை, குற்றச்சாட்டு எழுந்து பூதாகரமானபோது கூட அவரை அகற்றாது அவரின் பதவிக் காலம் நிறைவுறும் வரை காத்திருந்தமை போன்றன பிரதமர் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களாகவுள்ளன.
அதே போல் 2016 கோப் குழுவில் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக பலமான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்ட சமயம், மனோ கணேசனின் கட்சி சார்பில் கோப் குழுவை பிரதி நிதித்துவம் செய்த வேலு குமாரை அதில் இருந்து விலகச் செய்து, அவருக்கு பதிலாக சுஜீவ சேனசிங்கவை உள் நுழைத்த விடயமும் இங்கு கவனிக்கத்தக்கது.
ஏனெனில் சுஜீவ சேனசிங்கவுக்கும் அலோசியஸுக்கும் இடையிலான தொடர்புகள் ஆணைக்குழு விசாரணையின் இடை நடுவே வெளிப்படுத்தப்பட்டமை, பிணைமுறி மோசடி நடக்கவே இல்லை என அவர் புத்தகம் எழுதியமை போன்றன அவரது கோப் குழு பிரவேசத்தை சந்தேகப்பட வைக்கின்றது.
எது எப்படி இருப்பினும் தற்போது ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கை சட்ட மா அதிபரிடம் உள்ள நிலையில், அடுத்து வரும் நான்கு வாரங்களின் பின்னர் அதிரடி கைதுகள் நிகழ வாய்ப்புக்கள் உள்ளன.
குறிப்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சிகளை நெறிப்படுத்திய சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா தலைமையிலான 10 பேர் கொண்ட சட்டவாதிகளின் கைகளிலேயே இந்த வழக்கு தொடரும் பணியும் ஒப்படைக்கப்பட்டால், அவர்களது ஆலோசனைக்கு அமைய பலர் கைதாகலாம். குற்றவியல் சட்டத்தின் கீழ் அது சாத்தியப்படும்.
அதேபோன்று பிரதானமாக சட்ட மா அதிபர் நட்டத்தை மீள அறவீடு செய்வதை நோக்காக கொண்டு செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அவசரமாக சட்ட திருத்தங்கள், புதிய சட்டவாக்கம் தொடர்பில் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இவையனைத்தையும் தாண்டி ஜனாதிபதி சொல்லாத அதிர்ச்சிகள், இந்த விசாரணை அறிக்கை மக்கள் மயப்படும் போது வெளிப்படவும் வாய்ப்புக்கள் உள்ளதாக உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அறிக்கை மக்கள் மயப்படும் வரை இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம்.
எம்.எப்.எம்.பஸீர்