எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ள வட denis-wiknesvaranமாகாணசபையின் இறுதி நாட்கள் கூட பயனுள்ளதாக அமையும் என்று நம்புவதற்கில்லை.
இன்னும் இரண்டரை மாதத்துடன் ஆயுளை முடித்துக் கொள்ளவுள்ள விக்கினேஸ்வரன் தலைமையிலான இந்தச் சபையில் இப்பொழுது முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரனின் பிரச்சினை விவகாரமாகியுள்ளது.
இந்தப் பிரச்சினைக்குரிய பதிலைச் சொல்ல முடியாத நெருக்கடிக்குள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தள்ளப்பட்டுள்ளார்.
இதனால் 16.07.2018 அன்று சபை அமர்வில் டெனிஸ்வரனின் விவகாரம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டபோது அங்கே விக்கினேஸ்வரன் இருக்கவில்லை. அன்றைய சபை அமர்வில் கலந்து கொள்ள இயலாது என்று முதல் நாள் இரவு ஒரு மின்னஞ்சலில் தகவலை சபை முதல்வர் சி.வி.கே.சிவஞானத்திற்கு அறிவித்து விட்டுத் “தலைமறைவாகி” விட்டார் விக்கினேஸ்வரன். கூடவே ஏனைய அமைச்சர்களும் சபைக்கு வராமல் மறைந்து விட்டனர்.
இதனால் சபை அர்த்தபூர்வமாக இயங்க முடியாத நிலைக்குள்ளானது. அதாவது முதலமைச்சரும் அமைச்சரவை உறுப்பினர்களும் இல்லாத நிலையில் சபை தனது பொறுப்பு நிலையை இழந்திருந்தது.
இது ஒரு வகையில் சபையை திட்டமிட்டுச் செயலிழக்க வைப்பதாகவும் இதன் மூலமாகச் சபையை அவமதிப்பதாகவும், அதன் இயங்கு நிலையைக் கேள்விக்குள்ளாக்குவதாகவுமே அமைகிறது.
“விக்கினேஸ்வரனைச் நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானத்தைச் சபையில் கொண்டு வருவதற்கு ஆளும் தரப்பில் முக்கிய சக்தியாக விளங்கும் தமிழரசுக் கட்சியினர் திட்டமிட்டிருக்கின்றனர் என்பதை அறிந்ததாலேயே விக்கினேஸ்வரன் சபைக்கு வருவதைப் புறக்கணித்தார்” என அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறே விக்கினேஸ்வரனுக்கு ஆதரவான ஊடகங்களும் தெரிவித்துள்ளன. ஏன் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட்டும் ரெலோவும் கூட அப்படித்தான் சொல்கின்றன.
இதனால் இவை இரண்டும் டெனிஸ்வரன் விவகாரம் சபையில் விவாதிக்கப்படும்போது வெளிநடப்புச் செய்திருந்தன. இதைக்குறித்து ரெலோவின் சார்பான உறுப்பின் விந்தன் ஒரு சிறப்புரையையும் ஆற்றியிருந்தார்.
இதைவிடச் சிரிப்புக்குரிய சங்கதி வேறுண்டா? ஏனென்றால் டெனிஸ்வரன் விவகாரத்தை தொடக்கத்திலிருந்தே ரெலோ சொதப்பிக்கொண்டேயிருக்கிறது. இந்த விறுத்தத்தில் அது இரண்டு நாட்களுக்கு முன்பு அரசியற் குழு மட்டத்தில் கூடி வேறு ஆராய்ந்திருக்கிறது.
புளொட் வழமையைப்போல தூர விலகி நின்று விட்டது.
இததெல்லாம் ஏற்கக் கூடிய நியாயமல்ல. பிரச்சினைகளை எதிர்கொண்டு, அதற்குரிய நியாயத்தைக் கூற வேண்டும். அதை வெற்றி கொள்ள வேண்டும். இதுவே பொறுப்பானவர்களின் பணி. முதலமைச்சரின் பொறுப்பு. இதைத் தவிர்த்து விட்டு, பிரச்சினைகளைக் கண்டு ஓடி மறைவது எந்த வகையிலும் சரியானதல்ல. அது அழகும் அல்ல.
“உள்நோக்கங்களுடன் திட்டமிட்டுச் செய்யப்படும் குயுக்தியான செயற்பாடுகளுக்கு தெரிந்து கொண்டும் ஏன் வீணாகத் தலையைக் கொடுக்க வேண்டும்? இப்படியான ஒரு செயலைத்தான் தமிழரசுக் கட்சி விக்கினேஸ்வரனுக்கு எதிராகத் திட்டமிட்டிருக்கிறது.
இதைத் தவிர்ப்பதில் என்ன பிழை என்றே விக்கினேஸ்வரன் முடிவெடுத்திருக்கிறார். இதில் எங்கே தவறிருக்கிறது?” என்று யாரும் கேட்கலாம்.
இது தனியே தமிழரசுக் கட்சிக்கும் விக்கினேஸ்வரனுக்கும் இடையிலான அதிகாரப் பிரச்சினையோ, அரசியல் சம்மந்தப்பட்ட விவகாரமோ அல்ல. அதற்கும் அப்பால், மாகாணசபை என்ற மக்கள் ஆணை மன்றின் விசயம்.
ஆகவே, இந்தப் பிரச்சினையை விக்கினேஸ்வரன் முகம் கொண்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் இந்தப்பிரச்சினையின் சூத்திரதாரியே அவர்தான்.
டெனிஸ்வரனைப் பதவி நீக்கம் செய்தவர் விக்கினேஸ்வரனே. அந்தப் பதவி நீக்கம் தவறான முறையில் செய்யப்பட்டது என வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதும் விக்கினேஸ்வரனுக்கு எதிராகவே.
அந்த வழக்கின் தீர்ப்பில் மறுபடியும் அமைச்சுப் பொறுப்பை வழங்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்று தீர்ப்பளித்திருப்பதும் விக்கினேஸ்வரனை – முதலமைச்சரை – குறிப்பிட்டே.
அதாவது விக்கினேஸ்வரனே (முதலமைச்சரே) அமைச்சுகளுக்கான அமைச்சர்களைத் தெரிவு செய்து, ஆளுநருக்குப் பெயர்களைச் சமர்ப்பித்திருந்தார். இதன்படி ஒரு அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யும்போதும் அதைப்பற்றிய விவரத்தை முறைப்படி ஆளுநருக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.
இதைப்பற்றிய தெளிவான வரையறுப்புகள் அரசியமைப்பிலும் மாகாணசபை முறைமையிலும் கூறப்படவில்லை என்றாலும் நடைமுறை இதுவேயாகும்.
அமைச்சர்களைத் தெரிவு செய்கின்றவருக்கே (முதலமைச்சருக்கே) அதை நீக்குவதற்கான உரிமையும் உள்ளது. ஆனால், அதை தெரிவு செய்யும்போதும் நீக்கும்போதும் ஆளுநருக்குத் தெரிவிக்க வேணும் என்பது நியதி. எனவே இதன்படி நீதிமன்றத்தீர்ப்பு முதலமைச்சரைக் குறித்தே உள்ளது.
இதன்படி விக்கினேஸ்வரனே இந்தப் பிரச்சினை தொடர்பான விவாதத்தில் பதிலளிக்கும் பொறுப்பாளியாவார். அவர் சபையில் கலந்து கொண்டு, தன்னுடைய தரப்பின் நியாயத்தை முன்வைத்திருக்க வேணும்.
வேண்டுமானால் அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தீர்ப்புத் தொடர்பாக அப்பீல் செய்திருப்பதைப் பற்றிக் கூறியிருக்கலாம். அல்லது அதற்கும் மேலான தன் தரப்பு நியாயத்தைச் சொல்லியிருக்க முடியும்.
ஆனால், அப்படிச் செய்யவில்லை விக்கினேஸ்வரன். இது அவருடைய தவறு. இந்தத் தவறை மட்டுமல்ல, இதற்கு முதலும் அவர் பல தவறுகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார்.
தனக்கு மக்கள் மத்தில் செல்வாக்குண்டு என்ற எண்ணத்தில், தான் எதைச் செய்தாலும் எதைப்பற்றி எப்படிச் சொன்னாலும் அதையெல்லாம் கேள்விக்கிடமில்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு ஒரு பெரிய விசுவாசிகள் கூட்டம் இருக்கிறது என அவர் நம்புகிறார். ஆகவே தொடர்ச்சியாகத் தவறுகளைச் செய்வதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை.
டெனிஸ்வரன் விவகாரத்தில் கூட கடந்த வாரங்களில் அவர் சபையிலும் சபைக்கு வெளியிலும் தெரிவித்திருப்பவை இந்தத் தவறுகளுக்கும் பொய்களுக்கும் ஒரு வலுவான சான்றாகும்.
குறிப்பாக டெனிஸ்வரனின் விவகாரம் தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பறிக்கை தனக்கு கிடைக்கவில்லை என்று விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
வழக்கோடு சம்மந்தப்பட்ட இரண்டு தரப்பினருக்கும் தீர்ப்பறிக்கை கிடைக்கும் வகையில் ஆவன செய்ய வேண்டிய கடமை நீதிமன்றுக்கு உண்டு. அப்படியென்றால், அதை நீதிமன்று உரிய முறையில் செய்யவில்லையா? இதைப்பற்றிய விக்கினேஸ்வரனின் பதில் என்ன? ஏற்கனவே தன் வாழ்வின் பெரும்பகுதியை நீதித்துறையில் செலவழித்த விக்கினேஸ்வரனுக்கு இது பற்றித் தெரியாதிருக்குமா?
உண்மையில் நீதிமன்றத்தீர்ப்பறிக்கை அவருக்குக் கிடைக்கவில்லை என்றால், அவர் அடுத்து என்ன செய்திருக்க வேண்டும்? பொறுப்புள்ள முதலமைச்சர் என்றுணர்ந்திருந்தால், பொதுவெளியில் தன் மீது வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் எழுந்திருக்கும் அரசியல் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும் அவர் அதற்கு முயற்சித்திருக்க வேணும்.
அப்படி முயற்சிக்கும்போது மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின் பிரதியை அவர் பெற்றிருக்க முடியும். அதை அவர் செய்யவில்லை.
• விஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்!! -நிலாந்தன் (கட்டுரை)
• விஜயகலாவும் விடுதலை புலிகளும்!!- வீ.தனபாலசிங்கம்
ஆனால், இன்னொரு வகையில் இதைக்குறித்த கேள்விகளை நம்மிடம் விக்கினேஸ்வரனே எழுப்புகிறார். தனக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பறிக்கை கிடைக்கவில்லை என்று சொல்கின்ற விக்கினேஸ்வரன், எப்படி இந்தத் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்? அல்லது அப்பீல் செய்யத் துணிந்தார்?
இதை விட இன்னொரு விசயத்தையும் இங்கே அவதானிக்கலாம்.
“நீதிமன்றத் தீர்ப்பின்படி தன்னுடைய அமைச்சுப் பொறுப்புகளைச் செய்வதற்கு இடமளிக்க வேண்டும்” என டெனீஸ்வரன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு ஆளுநரினால் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தனக்குக் கிடைக்கவில்லை என்கிறார் விக்கினேஸ்வரன்.
ஆனால், 05.07.2018 அன்று ஆளுநர் அலுவலகத்தினால் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கடிதங்களை முதலமைச்சரின் வாசஸ்தலத்திலும் முதலமைச்சர் அலுவலகத்திலும் ஒப்படைத்ததற்கான பதிவேட்டுச் சான்றினை 16.07.2018 அன்று மாகாணசபை அமர்வில் சான்றாகக் காட்டியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராஜா. மேலும் 06.07.2018 இல் முதலமைச்சருக்கு மின்னஞ்சல் வழியாகவும் தகவல் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதைக்குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்கிறார் முதலமைச்சர். அப்படியென்றால், அவருக்குரிய தகவல்களைச் சரியாக வழங்காத அளவுக்கு அவருடைய இருப்பிடத்திலும் முதலமைச்சர் அலுவலகத்திலும் யாரோ சதிகாரர் இருக்கிறார்களா? அவ்வாறானதொரு நிலைமை அங்கெல்லாம் உள்ளதா? இதற்கு விக்கினேஸ்வரன் எப்படி இடமளித்துக் கொண்டிருக்கிறார்?
இன்னொன்று மேன்முறையீட்டுத்தீர்ப்புத் தொடர்பாக முதலமைச்சர் சபைக்கு ஏற்கனவே அளித்த விளக்கம் ஏறக்குறைய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பற்றிய பிழையான சித்திரத்தை சபைக்கும் மக்களுக்கும் அளிப்பதாக உள்ளது.
இதன் மூலம் சபையைப் பிழையான திசையில் வழி நடத்த முற்பட்டிருக்கிறார் விக்கினேஸ்வரன். இது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பையும் முதலமைச்சரின் உரையையும் ஒப்பிட்டுப்பார்ப்பவர்களுக்கு இதன் உண்மை விளங்கும். இது ஒரு வகையில் மறைமுகமாக நீதிமன்றத்தீர்ப்பை அவமதிப்பதாகும்.
இதைக்குறித்து சபையில் உரிய ஆவணங்களை ஆதாரமாக முன்வைத்து சபைக்கு விளக்கமளித்திருக்கிறார் தவராஜா. பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இதை அவர் செய்திருப்பது பாராட்டுக்குரியது.
இதைத் தவராஜா சபையில் ஒவ்வொன்றாகத் தெளிவாக்கிக் கொண்டிருந்தபோது ஏனைய உறுப்பினர்கள் ஆச்சரியமாக வாயைப் பிளந்து கொண்டிருந்தனர் என்று சொன்னார் ஒரு ஊடகவியலாளர். இதற்குக் காரணம், இந்த விடயங்களைப் பற்றி மாகாணசபை உறுப்பினர்கள் உரிய ஆவணங்களைத் தேடி வாசித்து, தமக்குத் தேவையான விளக்கத்தையும் அறிவையும் பெற்றுச் செல்வதில்லை என்பதுவேயாகும்.
முதலமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் இல்லாத சபை, பொறுப்புக் கூறுதலில் இருந்து வழுவிய சபையாகவே அமைந்துள்ளது. தமக்கு நெருக்கடி என்பதற்காக இப்படித் தலைமறைவுக்குச் செல்வது ஆட்சி அதிகாரத்திலிருப்போருக்கு அழகல்ல. அது ஆட்சி மரபுக்குரியதும் அல்ல. மறுவளமாக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
உண்மையில் இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் எந்த மாதிரியான சாட்டுப்போக்களையும் சொல்லிக் கொண்டிருக்காமல், சபைக்குப் பொறுப்புக் கூறுதல் அவசியம். இந்தப் பொறுப்புக் கூறலைச் செய்யாத போது நாம் ஏனைய தரப்புகள் மீது குற்றம் காணவும் கடிந்து கொள்ளவும் முடியாது. அதற்கான தார்மீக நியாயத்தை இழந்து விடுகிறோம்.
ஆனால், இதையெல்லாம் தமிழ் மக்கள் சீர்தூக்கிப் பார்க்கப்போவதில்லை. அவர்கள் அப்படிப் பார்ப்பதற்கு விசுவாசிகளும் அபிமானிகளும் பரிசுத்த ஆவிகளும் விடவும் மாட்டார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை தங்களுக்குப் பிடித்தமானவரை எப்படியும் நியாயப்படுத்தி, அவருடைய தவறுகளுக்கெல்லாம் மறைப்புக்கட்டி அல்லது வெள்ளை அடித்து, அவரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே முக்கியமானதாக இருக்கும். தமிழ் அரசியல் அபிமான அரசியலாக உணர்ச்சியின் தளத்திலேயே பயணித்துக் கொண்டிருப்பதன் விளைவே இது.
நிச்சயமாக விக்கினேஸ்வரனை நீதிமன்றம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினாலும் இவர்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அப்படி நீதிமன்றத்தில் குற்றவாளியாக இனங்காணப்படும் விக்கினேஸ்வரன் மக்களிடம் பெரு வெற்றியைப் பெறுவார்.
அனுதாப அலை வாக்குப் பெட்டிகளை நிரப்பும். உணர்ச்சி அரசியலின் விளைவு இது. இதற்காகவே விக்கினேஸ்வரன் தொடர்ந்து தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறார்.
இந்தப் பலமே விக்கினேஸ்வரனைத் தவறிழைக்க வைக்கிறது. இதுவே தமிழர் அரசியலின் பலவீனமும் கீழ்மையுமாகும்.
– கருணாகரன்-