ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், 2 பில்லியன் யுவான்களை கொடையாக வழங்க முன்வந்திருக்கிறார். அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்புகின்ற எந்த திட்டத்துக்கு வேண்டுமானாலும் செலவிடலாம்
இலங்கையில் தமது செல்வாக்கை அல்லது தலையீடுகளை உறுதிப்படுத்திக் கொள்வதில், சீனாவும் இந்தியாவும், கடுமையான போட்டியில் தான் குதித்திருக்கின்றன என்பதை இரண்டு நாடுகளினதும் அண்மைய நகர்வுகள் தெளிவாக உணர்த்தி வருகின்றன.
ஒன்றுக்கு ஒன்று சளைக்காமலும், விட்டுக் கொடுக்காமலும், நகர்வுகளை முன்னெடுத்து வருவதைக் காண முடிகிறது.
இலங்கையில் பொருளாதார ரீதியான தலையீடுகளை மாத்திரமன்றி, அதனை தமது பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்தி வரும் சீனாவுக்கு இந்தியாவும் கடுமையான போட்டியைக் கொடுத்து வருகிறது.
இத்தகைய தருணத்தில், இந்தியாவின் எதிர் நகர்வுகளைத் தோற்கடிக்கும் நகர்வுகளுக்கு சீனாவும் விடாப்பிடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை கைப்பற்றிய சீனாவுக்குப் பதிலடியாக, மத்தல விமான நிலையத்தை வளைத்துப் போடும் இந்தியாவின் நகர்வு அமைந்திருந்தது.
மத்தல விமான நிலையம் தொடர்பாக, இந்திய அதிகாரிகள், கொழும்பில் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருந்த காலப்பகுதியில், சீனத் தூதுவர் செங் ஷி யுவான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கச் சென்றிருந்தார். இது நடந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகி விட்டன.
பொலன்னறுவவில், சிறுநீரக நோய்க்குச் சிகிச்சை வழங்கும் முழு வசதிகளையும் கொண்ட மருத்துவமனை ஒன்றை அமைக்கும் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கான இறுதிக்கட்ட ஒழுங்குகள் பற்றிக் கலந்துரையாடுவதே சீனத் தூதுவரின் வெளிப்படையான நோக்கம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்குச் சென்றிருந்த போது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, பொலன்னறுவவில் இந்த மருத்துவமனையை அமைத்து தருவதாக சீனா உறுதியளித்திருந்தது.
இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி பொலன்னறுவவில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சீனத் தூதுவர் செங் ஷியுவானும் பங்கேற்றிருந்தார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றிய போது தான், அந்த விடயத்தை வெளியே உடைத்துப் போட்டார்.
அதாவது மூன்று வாரங்களுக்கு முன்னர், சீனத் தூதுவர் தனது இருப்பிடத்துக்கு காவி வந்த செய்தி தான் அது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், 2 பில்லியன் யுவான்களை கொடையாக வழங்க முன்வந்திருக்கிறார்.
அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்புகின்ற எந்த திட்டத்துக்கு வேண்டுமானாலும் செலவிடலாம் என்பது தான், சீனத் தூதுவர் காவிச் சென்ற செய்தி.
சீன ஜனாதிபதி வழங்க முன்வந்தது ஒன்றும் கடன் அல்ல, திருப்பி செலுத்தத் தேவையில்லாத நன்கொடை அது. அதுவும் சாதாரணமான அளவு அல்ல. 2 பில்லியன் யுவான் என்பது, கிட்டத்தட்ட 295 மில்லியன் டொலருக்குச் சமமானது. இலங்கை ரூபாவில், சுமார் 4800 கோடி.
பொதுவாக, நாடுகளின் தலைவர்களின் பயணங்களின் போது தான் இந்தளவு பெரிய நன்கொடைகள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம்.
ஆனால், சீன ஜனாதிபதி, அத்தகைய எந்தப் பயணங்களும் இடம்பெறாத சூழலில், இந்த நன்கொடையை அறிவித்திருப்பது ஆச்சரியம்.
இரண்டு முக்கியமான விடயங்கள் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்த சூழலில் தான், சீன ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியானது.
முதலாவது மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன், இணைந்து இயக்குவது தொடர்பான பேச்சுக்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த சூழல்.
இரண்டாவது, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் பிரசாரங்களுக்கு சீன நிறுவனம், 7.6 மில்லியன் டொலரை வழங்கியது என்ற குற்றச்சாட்டு சூடு பிடித்திருந்த சூழல்.
ஜனாதிபதித் தேர்தலில் சீன நிறுவனத்திடம் நிதி பெறவில்லை என்று பாராளுமன்றத்தில் அடித்துச் சொல்லும் திராணி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இல்லாத நிலையில், இந்த விவகாரத்தை இனிமேலும் தோண்டிக் கொண்டிருக்கக் கூடாது என்ற சமிக்ஞையை கொழும்புக்கு வெளிப்படுத்தும் நோக்கில் தான், இந்த 4800 கோடி ரூபா நன்கொடை அறிவிப்பு வெளியிடப்பட்டது என்ற பரவலான ஒரு கருத்து உள்ளது.
அதாவது. மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த போது, அவருக்கு மாத்திரம் நன்கொடைகளை வழங்கவில்லை, தற்போதைய ஜனாதிபதிக்கும் கூட அத்தகைய நன்கொடைகள் வழங்கப்படுகின்றன என்று கணக்கை சமப்படுத்தும் யுக்தியாகவும் இதனைப் பார்க்கலாம்.
ஆனால், மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 4800 கோடி ரூபா நன்கொடை, அவரது தனிப்பட்ட அல்லது தேர்தல் செலவுக்காக அளிக்கப்பட்ட ஒன்று அல்ல. நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களில் ஏதாவது ஒன்றுக்குப் பயன்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக் ஷவுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும், 7.6 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அதுபற்றிய அரசாங்க கணக்கு வழக்குகளும் கிடையாது.
இங்கு, ஒன்றை மறைக்க இன்னொன்றைத் தூக்கிப் போடும் யுக்தியை சீனா கையாண்டிருக்கலாம். ஆனால், இதுமாத்திரம் தான் சீனாவின் திட்டம் என்று எவரேனும் கருதினால் அது தவறானது. அதற்கு அப்பாலும் நோக்கங்கள் இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
இந்த நன்கொடைப் பொதியுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்க சீனத் தூதுவர் சென்றிருந்த போது தான், இந்திய அதிகாரிகள் குழு மத்தல விமான நிலையம் தொடர்பாக, கொழும்பில் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருந்தது.
மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை இந்தியா கொள்வனவு செய்வதென்ற அடிப்படையில் இந்த பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறு இரண்டு நாடுகளும் பங்குகளைப் பிரித்துக் கொள்வதற்காக, மத்தல விமான நிலையத்தின் பெறுமதியை மதிப்பீடு செய்திருந்தன. இலங்கை அரசாங்கத்தின் மதிப்பீடுகளின் படி, மத்தல விமான நிலையத்தின் பெறுமதி 326 மில்லியன் டொலர் என்று பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க கூறியிருந்தார்.
இதன்படி பார்த்தால், 70 வீத பங்குகளுக்காக இந்தியா, 228 மில்லியன் டொலரை வழங்க வேண்டியிருக்கும்.
ஆனால், இந்திய விமான நிலைய அதிகாரசபை இந்த மதிப்பீட்டை ஏற்கவில்லை. அவர்களின் மதிப்பீட்டின் படி, விமான நிலையத்தின் பெறுமதி 293 மில்லியன் டொலர் தான்.
இந்தப் பேச்சுக்கள் இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றன. இறுதியான முடிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இதற்கும், மத்தல தொடர்பாக எந்த திட்டத்தையும் ஆலோசிக்கவில்லை என்று வேறு இந்தியா மற்றொரு குண்டைத் தூக்கிப் போட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.
இங்கு, ஆச்சரியமான வகையில், ஒரு விடயம் இருக்கிறது. அதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட 295 மில்லியன் டொலர் நன்கொடையும், இந்திய விமான நிலைய அதிகார சபையினால், மத்தல விமான நிலையத்தின் பெறுமதியாக மதிக்கப்பட்ட, 293 மில்லியன் டொலருடன் கிட்டத்தட்ட சமமாக இருக்கிறது.
அவ்வாறாயின், இந்த நன்கொடையைக் கொடுத்து, மத்தல விமான நிலையம் கைமாற்றப்படுவதை தடுப்பதற்கு சீனா எத்தனித்ததா – இன்னமும் எத்தனிக்கிறதா என்ற கேள்விகள் உள்ளன.
முன்னதாக, சீனா, மத்தல விமான நிலையத்துக்காகப் பெறப்பட்ட கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கோ, வட்டித் தொகையை குறைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கோ செவி சாய்க்கவில்லை.
இந்த விவகாரத்தினால் சீன அதிகாரிகளுக்கும், நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில், பகிரங்க வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றன.
ஆனால், இது வர்த்தக கடன், இரண்டு நாடுகளும் இணங்கிப் பெற்ற கடன். அதில் எந்த தளர்வுக்கும் இடமில்லை. அவ்வாறு கேட்பதும் நியாயமில்லை என்று சீனா உதாசீனம் செய்திருந்தது.
இப்போது, சீனா மத்தல விமான நிலையத்தின் பெறுமதிக்கு இணையான நன்கொடையை வழங்க முன்வந்திருக்கிறது. அதுவும், ஜனாதிபதி விரும்பும் ஏதாவது ஒரு திட்டத்துக்கு அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஒரு தூண்டிலைப் போட்டிருக்கிறது.
இருந்தாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நன்கொடையை மத்தல விமான நிலையத்துக்குப் பெறப்பட்ட கடனைத் தள்ளுபடி செய்வதற்காக பயன்படுத்தப் போவதாக கூறவில்லை.
அதனை, வீடமைப்புத் திட்டம் ஒன்றுக்குப் பயன்படுத்த அவர் முடிவு செய்திருக்கிறார். இந்தக் கொடையை மத்தல விமான நிலையத்தின் கடனை அடைப்பதற்குப் பயன்படுத்தினால், எதுவும் தேறாது.
ஏனென்றால், மத்தல விமான நிலையம் இப்போதைக்கு வருமானம் தரும் ஒன்றாக மாறும் சாத்தியங்கள் இல்லை.
ஆனால், தலா 10 இலட்சம் ரூபாவில் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தில் இதனை முதலீடு செய்தால், 48,000 பேருக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கலாம். அந்த வகையில், இது புத்திசாலித்தனமான முடிவு தான்.
ஆனால், இந்தியா இந்த நன்கொடையை குழப்பத்துடன் நோக்குகிறது. தனக்குப் போட்டியாக- இலங்கையை வளைத்துப் போடுவதற்கு சீனா தனது நிதியைப் பயன்படுத்திக் கொள்கிறது என்ற ஆதங்கம் இந்தியாவிடம் உருவாகியிருக்கிறது.
இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் சுமார் 5000 கி. மீ. இடைவெளி இருந்தாலும், அந்த இடைவெளியை சீனா தனது பணத்தைக் கொண்டு நிரப்புகிறது என்ற கருத்துப்பட புதுடெல்லி ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
சீன ஜனாதிபதியின் இந்த மிகப் பெரிய நன்கொடை, இலங்கை எதிர்பாராதது. இதற்குப் பின்னால் என்ன பூதம் கிளம்பப் போகிறதோ என்ற குழப்பமும் அரசாங்கத்துக்கு இருக்கிறது.
அதேவேளை, மத்தல விவகாரத்தில் இந்தியாவும் குழப்பமான கருத்துக்களைத் தான் வெளிப்படுத்துகிறது. இந்த நிலையில் சீனாவின் மிகப்பெரிய கொடை அறிவிப்பு இந்தியாவுக்கு நிச்சயம் சவாலாகத் தான் இருக்கும்.
-ஹரிகரன்