ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் இடம்பெற்று இன்றுடன் 10 வருடங்களாகின்றன.
எனினும் இத்தனை நாட்களாகியும் இந்த விவகாரத்தில் இன்னும் நீதியும் நியாயமும் மெளனம் காக்கிறது. ஏன், இவ்வளவு நாட்களாகியும் நீதி நிலைநாட்டப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது என எல்லோருக்கும் எழும் கேள்விகளுக்கு பதில் தேடும் போது தான், இந்த கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், திரைமறைவில் குற்றவாளிகளைக் காக்கும் காய் நகர்த்தல்களும் நீதியை பெற்றுக்கொடுக்க போராடுகின்றவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் தாராளமாக இடம்பெறுவதும் அவதானிக்கப்பட்டது.
இந்த காய் நகர்த்தல்கள், மிரட்டல்கள் இன்று நேற்றிலிருந்து அல்லாமல் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக இடம்பெறுவதை இந்த விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களினூடாக உறுதி செய்ய முடிகின்றது.
குற்றப் புலனாய்வுப் பிரிவு, கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு இந்த காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசேட விசாரணை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது.
அதில் “இந்த விவகாரத்தில் இரண்டாம் சந்தேக நபர் கொமாண்டர் சுமித் ரணசிங்க, கடந்த 2013 ஆம் ஆண்டு மாலை வேளை ஒன்றில் தனது சட்டத்தரணி அசித் சிறிவர்தனவுடன் அப்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகரும் தற்போது சி.ஐ.டி. பணிப்பாளருமான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை சந்திக்க வந்தார்.
சம்பத் முனசிங்க
அப்போது அவரால் புரியப்பட்ட யுத்த பங்களிப்பு குறித்து விளக்கப்பட்ட நிலையில், பின்னர் இந்த கடத்தல்களை லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்க ( முதலாவது சந்தேக நபர்) செய்ததாகவும் பின்னர் அவர் அவர்களை தன்னிடம் கையளித்ததாகவும் பின்னர் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதாகவும் கூறினார்.
எனினும் இதற்கு சம்பத் முனசிங்கவே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் தன்னை விடுவித்து இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சட்டத்தரணி ஊடாக ரணசிங்க பேச்சுவார்த்தை நடத்தினார்”எனவும் அறிவித்திருந்தனர்.
அத்துடன் அதே மேலதிக விசாரணை அறிக்கையில், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாக அக்காலத்தில் பதவி வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோவும் இவ்விவகாரத்தில் சந்தேக நபர்களைப் பாதுகாக்க பல அழுத்தங்களை தமக்கு பிரயோகித்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டிருந்தது.
இந்த இரு விடயங்கள் தொடர்பிலும் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி கோட்டை நீதிமன்றில் வாதப் பிரதிவாதங்கள் வெளிப்பட்டன.
இந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் திரை மறைவு நடவடிக்கைகளும் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்களுடன் கூடிய செயற்பாடுகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளதை அவை வெளிப்படுத்தின.
அன்றைய தினம் அதாவது, கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி நீதிமன்றுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க மற்றும் இவ்விவகாரத்தில் விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க ஆகியோருடன் ஆஜராகியிருந்தார்.
அப்போது, சட்டத்தரணி அசித் சிறிவர்தன மேலதிக விசாரணை அறிக்கையினூடாக தன்னை தொடர்புபடுத்தி கூறப்பட்டுள்ள விடயங்களை மறுத்து நீதிவானுக்கு விடயங்களை தெளிவுபடுத்தினார்.
“குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு போனது உண்மை. ஆனால் குற்றப் புலனாய்வுப் பிரிவு கூறுவதைப் போல், குற்றங்களிலிருந்து எவரையும் பாதுகாக்க நாம் செல்லவில்லை.
இவ்வளவு நாள் இது குறித்து எதுவும் பேசாதவர்கள், சி.ஐ.டி.யிலிருந்து இந்த விசாரணைகளை மாற்றுமாறு நான் கோரிய பின்னரேயே எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
நான் அப்படி நடந்து கொண்டிருந்தால் அது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொலிஸ் பதிவுப் புத்தகத்தில் பதிவிட்டிருக்கலாம்.
அல்லது என்னை தண்டனை சட்டக் கோவை பிரகாரம் கைது செய்திருக்கலாம். அப்படி எதுவும் நடக்காமையானது குற்றப் புலனாய்வுப் பிரிவு கூறுவதைப் போன்று எதுவும் நடக்கவில்லை என்பதற்கு சான்று” என சட்டத்தரணி அசித் சிறிவர்தன கூறினார்.
எனினும் அதனை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மறுத்தார். அசித் சிறிவர்தனவை தான் அறிந்திருந்த காரணத்தால் எந்தப் பதிவையும் பொலிஸ் பதிவுப் புத்தகத்தில் இடவில்லை என்று தெரிவித்த அவர் கொமாண்டர் ரணசிங்கவுடன் என்னை சந்திக்க வந்தார்.
இந்த விவகாரத்தில் லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்க மீது அனைத்துக் குற்றங்களையும் சுமத்தி தன்னை விடுவிக்குமாறு கோரினார்.
அது மட்டுமல்ல, கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்கவைக் காப்பாற்ற சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கும் அவர் உள்ளிட்ட சந்தேக நபர்களை அழைத்துச் சென்றார் என்று குறிப்பிட்டார்.
இந்த வாதப் பிரதிவாதங்களை வைத்து பார்க்கும் போது எது உண்மை, எது பொய் என்பதற்கு அப்பால் கடந்த 2013 ஆம் ஆண்டே இந்த விவகாரத்தில் சந்தேக நபர்கள் தொடர்பில் சி.ஐ.டி. வெளிப்படுத்திக் கொண்டிருந்துள்ளமையையும் அப்போது முதலே இந்த விவகாரத்தில் நியாயத்தை அழிக்க ஏதோ முயற்சிகள் இடம்பெற்றுள்ளமையையும் ஊகிக்கக் கூடிய வகையில் விடயங்கள் வெளிப்படுகின்றன.
இந்த வாதங்களில் ஒரு கட்டத்தில், சட்டத்தரணி அசித் சிறிவர்தன, சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானி அபேசேகரவை நோக்கி, “இப்போது நீங்கள்தானே பலமிக்கவர்கள் …” என்று கூற பதிலுக்கு ஷானி அபேசேகர “எமக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொண்டே நாம் விசாரணைகளை முன்னெடுக்கின்றோம்” என்றார்.
உண்மையில் இந்த வார்த்தைப் பிரயோகங்கள் வாதத்தின் போது ஆழ்மனதில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகளாகவே மன்றில் நேரில் அவதானித்தவர்களால் பார்க்கப்படுகின்றது.
அதாவது, சட்டத்தரணி சி.ஐ.டி. பணிப்பாளர், “இப்போது நீங்கள் அதிகாரமிக்கவர்கள். நாம் அதிகாரத்துக்கு வரும் போது பார்த்துக்கொள்கிறோம்” என்னும் தோரணையில் கூறுவதாகவும் அதற்கு “எமக்கு என்ன நடக்கும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்” என்று ஷானி அபேசேகர கூறுவதனூடாக விசாரணையாளர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம், நெருக்கடி, அச்சுறுத்தல் என்பன பிரதிபலிப்பதாகவுமே தோன்றுகின்றது.
இந் நிலை மிக ஆபத்தானது. நீதி, நியாயத்தை நிலை நாட்ட ஆட்சியில் யார் இருக்கின்றார், எவர் அதிகாரமிக்கவர் என்பதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் 10 வருடங்கள் அல்ல, 100 வருடங்களானாலும் நியாயம் கிடைக்காது. மாறாக நாள் கடத்தும் செயற்பாடுகள் மட்டுமே தொடரும்.
இதே போல்தான் முன்னாள் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சவேந்ர பெர்னாண்டோ தொடர்பில் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி மேலதிக அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் பார்க்க வேண்டியுள்ளது.
சவேந்ர பெர்னாண்டோவின் தகவல்களுக்கமைய அவர் சட்ட மா அதிபர் திணைக்களத்திலிருந்த போது முப்படை தொடர்பிலான விடயங்களைக் கையாளும் பொறுப்பு அவரிடம் இருந்துள்ளது.
இக்காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட 3 மாணவர்கள் சார்பில் தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனுவில் சவேந்ர பெர்னாண்டோ பொறுப்புக் கூறத்தக்க தரப்பு சார்பில் ஆரம்பத்தில் ஆஜராகியுள்ளார்.
இங்கு தான் சிக்கல் ஆரம்பித்திருப்பதாகத் தோன்றுகின்றது.
“ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோ சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இருந்த போது இந்த விவகாரத்தில் சந்தேக நபர்களை விசாரணை மற்றும் கைது செய்வதற்கு பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்தினார்.
இந்த விசாரணைக் கோவை தற்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் கைகளில் இருந்த போது, அவரின் ஆலோசனைக்கமைய டி.கே.பி. தஸநாயக்க உள்ளிட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருந்தனர்.
எனினும் சவேந்ர பெர்னாண்டோ அவ் விசாரணைகளைத் தடுத்தார்” என சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானி அபேசேகர கூறுகின்றார்.
எனினும் “இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. நான் இந்த விவகாரத்தின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகளின் போது பொறுப்புக் கூறத்தக்க தரப்பினர் சார்பில் ஆஜரானேன்.
எனினும் இங்கு இவர்கள் கூறுவது போன்று விசாரணைகள் எதிலும் தலையிடவில்லை. இவை முற்றிலும் பொய்யானவை” என ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோ கூறுகின்றார்.
உண்மையில் இந் நிலை மிகப் பயங்கரமானது. நீதிக்காக ஒரு தரப்பு ஏங்கும் நிலையில், சட்டத்தை நிலைநாட்டி சுயாதீனமாக செயற்பட வேண்டிய கடப்பாடுள்ள சட்ட மா அதிபர் திணைக்கள மட்டத்திலிருந்து சந்தேக நபர்களுக்கு உதவி – ஒத்தாசை புரியப்பட்டதா என்ற கேள்விகள் எழும் நிலையில், அவை சட்ட மா அதிபர் திணைக்களம் மீதான நம்பிக்கையைக் கூட தகர்க்கும் வல்லமை கொண்டவை. எனவே இது குறித்து கண்டிப்பாக உரிய விசாரணை மற்றும் நடவடிக்கை தேவை.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வாதத்துக்கு சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் ஒரு வார்த்தைப் பிரயோகம் முற்றுப்புள்ளி வைத்தது.
“இந்த விவகாரம் தொடர்பில் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பேசப்பட்டவற்றை என்னால் இங்கு வெளிப்படுத்த முடியாது” என்ற கூற்றே அது.
அப்படியானால் மேலே நாம் அதி பயங்கரமாக கருதி பேசிய விடயங்களை விஞ்சும் கலந்துரையாடல்கள் அப்போது பாதுகாப்புச் சபை கூட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
நிச்சயமாக ஷானி அபேசேகரவின் கூற்று, அவர் அதனை வெளிப்படுத்திய நிலை, விதம் தொடர்பில் பார்க்கும் போது அக் கலந்துரையாடல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க இடம்பெற்றதாகத் தோன்றவில்லை.
மாறாக சந்தேக நபர்களை பாதுகாக்கும் கலந்துரையாடலாக இருந்திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அப்படியானால் இந்த விவகாரத்தில் நீதி, நியாயம் வேண்டுமென்றே திட்டமிட்டு இழுத்தடிக்கப்பட்டு வருகின்றதா என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியாது.
இந் நிலையில் நீதி நிலைநாட்டப்படுவதை இழுத்தடிக்கத் திட்டமிட்ட சக்திகள் திரைமறைவில் செயற்பட்டுள்ளன. அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க யாருக்கு துணிச்சல் இருக்கும் என்பது தெரியவில்லை.
உண்மையில் கொழும்பு, கொட்டாஞ்சேனை, தெஹிவளை, வத்தளை மற்றும் கட்டுநாயக்க உள்ளிட்ட பல பிரதேசங்களில் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வெள்ளை வேன் கடத்தல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக தெஹிவளையில்17.09.2008 அன்று பெர்னாண்டோ மாவத்தையிலுள்ள அலி ஹாஜியார் அன்வர் என்பவரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய 5 மாணவர்களும் கடத்தப்பட்டிருந்தனர்.
இதனைவிட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆரச்சி, திருகோணமலையை சேர்ந்த தியாகராஜா ஜெகன் உள்ளிட்டோரும் கடத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படைத் தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் என்னும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றியிருந்த லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன்ட் கொமாண்டர் தரத்தை உடைய தற்போது கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக் ஷ்மன் உதயகுமார, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிறி மற்றும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் வீரரான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ் ஆகியோர் கைதாகி பிணையில் உள்ளனர்.
இக் கடத்தல்கள் அனைத்தும் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டவை என்பதை சி.ஐ.டி. கண்டறிந்துள்ள நிலையில் பெற்றோரும் அது தொடர்பில் கடற்படையினரையே குற்றஞ்சாட்டுகின்றனர். அவர்களது கண்ணீர் நிறைந்த பிரார்த்தனை கடத்தப்பட்ட தமது பிள்ளைகள், உறவுகள் தம்மை வந்து சேர வேண்டும் என்பதே.
காணாமல் ஆக்கப்பட்ட ரஜீவ் நாகநாதனின் தாய் சரோஜினி நாகநாதன் தனது துயரத்தை இவ்வாறு கூறுகின்றார்.
“கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி எனது மகன் கடத்தப்பட்டார். எனக்கு இருந்தது ஒரே ஒரு மகன். உயர் கல்விக்காக வெளிநாடு செல்லவிருந்த நிலையில் அவர் கடத்தப்பட்டார்.
திலகேஸ்வரன், டிலான் ஆகிய தனது இரு நண்பர்களுடன் அவர் வீட்டிலிருந்து காரில் சென்றபோதே தெஹிவளையில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார்.
கடற்படையினரால் அவர் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தொலைபேசியினூடாக எங்களுடன் கதைத்தும் உள்ளார். அவர் பேசும் தொலைபேசி இலக்கத்துக்கு நாமே “ரீலோட்”டும் செய்துள்ளோம்.
மகனை விடுவிக்க என்னிடம் ஒரு கோடி ரூபா கப்பம் கோரப்பட்டது. நான் 75 இலட்சம் ரூபாவுடன் நாரம்மலைக்கு செல்ல முற்பட்ட போது அப்போதைய அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவின் அறிவுறுத்தலுக்கமைய நான் அங்கு செல்லவில்லை.
பீலிக்ஸ் பெரேரா அப்போது கடற்படைத் தளபதி கரண்ணாகொடவுடன் பேசி எனது மகனை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். எனினும் இன்று வரை எனது மகன் விடுவிக்கப்படவில்லை.
இன்று அரசியல்வாதிகள், கடத்தல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய தஸநாயக்க என்னும் கடற்படை அதிகாரியைக் கைது செய்ததும் தஸநாயக்கவின் மனைவியும் பிள்ளைகளும் அழுவதாகப் பேசுகின்றனர்.
உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். கடந்த 8 வருடங்களாக நாம் அழுத அழுகையும் உங்களிடம் விடுத்த வேண்டுகோள்களும் உங்களுக்குத் தெரியவில்லையா? எமது பிள்ளைகளுக்காக நாமும் இப்படித்தானே 8 வருடங்களாக அழுதுகொண்டிருக்கின்றோம்.
எனது மகனை கடத்திச் சென்று முதலில் வெலிசறை முகாமில் வைத்திருந்தனர். பின்னர் சைத்திய வீதியிலுள்ள மறைவிடத்திலும் பின்னர் திருமலை இரகசிய முகாமிலும் வைத்திருந்தனர்.
இவை சம்பத் முனசிங்க, ஹெட்டி ஆரச்சி மற்றும் ரணசிங்க ஆகியோரின் கீழேயே இடம்பெற்றன. இதனை மகன் எனக்கு தொலைபேசியில் கதைக்கும் போதே தெரிவித்தார். தயவுசெய்து எமது பிள்ளைகளை எம்மிடம் தாருங்கள்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
கடத்தப்பட்ட ஐவரில் உள்ளடங்கும் டிலான் மொஹம்மட் என்னும் மாணவனின் பெற்றோர் கூறுகையில்:
“எமது பிள்ளையைக் கடத்தியவர்கள் கடற்படையினர் என்பது தெரியவந்த போது மிகவும் கவலையாக இருந்தது. ஏனெனில் நாமும் இராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
எனது கணவர் ஓய்வுபெற்ற இராணுவ வீரர். எனினும் இவ்வாறான கடத்தல்களை ஒருபோதும் உண்மையான இராணுவ வீரர்கள் புரியமாட்டார்கள்.
எமது பிள்ளைகள் புலிகள் இல்லை. அதனை நான் அடித்துச் சொல்வேன். எனது மகன் புலி என நிரூபித்தால் நான் எனது முறைப்பாட்டை மீளப் பெற்றுக்கொள்வேன். அப்பாவிகளைக் கடத்தி காணாமல் ஆக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்.
எமது பிள்ளைகளை கடத்தியோரை நாம் அடையாளம் காணவில்லை. ஆனால் புலனாய்வுப் பிரிவினரே கடற்படை அதிகாரிகளின் சாட்சியங்களுக்கு அமைவாகவே அவற்றை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். அதன்படி கைது செய்யப்பட்டுள்ளவர்கள் எமது பிள்ளைகளை கடத்தியமைக்கு பொறுப்புக் கூற வேண்டும்” என்கிறார்.
தனது கணவன் மற்றும் மகன் ஆகியோர் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சம்சுன் நிஹாரா என்னும் பெண் இப்படி கூறுகின்றார்.
“தனது காதலியுடன் வேனில் போகும் போது எனது மகன் 11.09.2008 அன்று கடத்தப்பட்டார். பின்னர் வீட்டுக்கு வந்தவர்கள் எனது கணவரை 17.10.2008 அன்று கடத்திச் சென்றனர். மகன், கணவர் இருவர் தொடர்பிலும் இதுவரை தகவல் இல்லை.
என்னிடம் மகனையும் கணவரையும் விடுவிக்க கடற்படையின் “அண்ணாச்சி” என தன்னை அறிமுகம் செய்த ஒருவர் கப்பமாக 15 இலட்சம் ரூபா கோரினார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றேன்.
இறுதியில் 5 இலட்சம் ரூபா கோரி அதனை 3 இலட்சம் ரூபாவாக குறைத்துக்கொண்டு பணத்தையும் எடுத்துக் கொண்டு நாரம்மல பகுதிக்குச் சென்று கொடுத்தேன்.
அப்போதும் அவர்களை விடுவிக்கவில்லை. கொடுத்ததில் ஒரு 1000 ரூபா குறைவதாகக் கூறினர். மகனையும் கணவரையும் திருப்பித் தரவில்லை.
அண்மையிலேயே மகன் பயணித்த வேன் கைப்பற்றப்பட்டுள்ளது. அதிலும் எஞ்சின், செஸி இலக்கங்கள் வேறாக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கூறுகின்றனர். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
தயவு செய்து எனது கணவரையும் மகனையும் மீட்டுத் தாருங்கள்” என்கிறார். இவை 3 பெற்றோர்களின் கதறல்கள் மட்டுமே. இப்படி 11 பேரின் பெற்றோர்கள், உறவினர்கள் தினம் தினம் அழுது மன வேதனையில் துடித்துக்கொண்டிருக்கும் சூழலிலேயே அதிகாரம், பணம், உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு அப்பாவிகளின் உரிமையான நீதி, நியாயத்தை விலை பேசி திரைமறைவில் காய் நகர்த்தல்கள் இடம்பெறுகின்றன.
இவ்வாறான சட்டம் சார்ந்த காய் நகர்த்தல்கள் மட்டும் நீதியை தாமதப்படுத்தவில்லை. மாறாக விசாரணையாளர்கள் நீதியைக் கேட்டுப் போராடுவோரை அச்சுறுத்தி அவர்களை அடக்குவதனூடாக நியாயத்தை வழங்காமல் இருக்கவும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு இரு உதாரணங்களை எடுத்துக்காட்ட முடியும்.
ஒன்று பிரதான விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவை கொலை செய்யத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் விடயம். இன்னொன்று பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு தொலைபேசி ஊடாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்.
நிசாந்த சில்வாவை கொலை செய்ய சிறையிலிருந்து தீட்டப்பட்ட திட்டம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரிக்கும் நிலையில், சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து வாைழத்தோட்டப் பொலிஸார் விசாரிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் சந்தேக நபர்களை வெளிப்படுத்தி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட இவ்விருவரின் பங்களிப்பு அளப்பரியது.
அவ்வாறான சூழலில், பிரதான விசாரணை அதிகாரியின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸ் திணைக்களமோ அரசாங்கமோ இன்று வரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
சட்டத்தரணி ஒருவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் கூட பொலிஸார் கண்டும் காணாமலும் இருப்பதைப் போன்று நடந்துகொள்வதாகவே தோன்றுகின்றது.
இவ்வாறான பின்னணியில், தமது பிள்ளைகளையும் உறவுகளையும் கண்ணீரோடு தேடும் இந்த பெற்றோர், உறவுகளுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வருவதாகத் தோன்றவில்லை.
நியாயத்தை பெற்றுக்கொடுக்க முன்வரும் அதிகாரிகளின் பாதுகாப்புக் கூட கேள்விக்குறியாகியுள்ள நிலையில், எப்போது இந்த நியாயம் கிடைக்கும் என்ற வினா மட்டுமே இறுதியில் எஞ்சியுள்ளது.
– தாமதமாகக் கிடைக்கும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமன்.
எம்.எப்.எம்.பஸீர்