வடக்கு மாகாண சபையின் பத­விக்­காலம் முடி­வ­தற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்­கின்ற நிலையில், வடக்கின் அர­சியல் களம் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

முத­லா­வது வடக்கு மாகா­ண­ச­பையின் பத­விக்­காலம் முடி­வுக்கு வர­வுள்ள நிலை­யிலும் கூட, வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட 6 மாகாண சபை­க­ளுக்கும், எப்­போது தேர்தல் நடத்­தப்­படும் என்­பது நிச்­ச­ய­மற்ற நிலை­யி­லேயே இருக்­கி­றது.

தேர்தல் முறை தொடர்­பாக கட்­சி­க­ளுக்­கி­டையில் இன்­னமும் கருத்­தொற்­றுமை ஏற்­ப­டாத நிலையில், தேர்­தலை எப்­படி – எப்­போது நடத்து­வது என்று இன்­னமும் முடி­வெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இதனால் இழு­பறி நிலை நீடிக்கும் சூழலே தென்­ப­டு­கி­றது.

வடக்கு மாகா­ண­சபைத் தேர்தல் எப்­போது என்று நிச்­ச­ய­மற்ற நிலை காணப்­பட்­டாலும், தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்கு கட்­சிகள் இப்­போதே தயா­ராகத் தொடங்கி விட்­டன. அதற்­கான கூட்­ட­ணி­களை அமைப்­ப­திலும் நாட்டம் காட்டத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

வடக்கு மாகா­ண­சபைத் தேர்தல் என்று வரும்­போது, இப்­போது முக்­கி­ய­மான- தவிர்க்­கப்­பட முடி­யாத ஒரு­வ­ராக மாறி­யி­ருக்­கிறார் முதலமைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன்.

இதனால், அவர் தொடர்­பா­கவும், அவரைச் சுற்­றியும் முடி­வு­களை எடுப்­பது, வடக்கு மாகா­ண­சபைத் தேர்­தலில் போட்­டி­யிட விரும்பும் கட்சி­களின் முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாக மாறி­யி­ருக்­கி­றது.

முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக மீண்டும் விக்­னேஸ்­வ­ரனை நிறுத்­து­வது குறித்து முடி­வெ­டுப்­பதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் சிக்கல்கள் நீடிக்­கின்­றன.

அதே­வேளை, அவரைத் தமது அணிக்குள் கொண்டு வந்து போட்­டி­யிட வைப்­பதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கும் சிக்­கல்கள் இருக்­கின்­றன.

முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக விக்­னேஸ்­வ­ரனை கூட்­ட­மைப்பு மீண்டும் போட்­டியில் நிறுத்­தாது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் நீண்ட நாட்­க­ளா­கவே கூறி வந்­தி­ருக்­கிறார்.

எனினும், அது தமது தனிப்­பட்­ட­க­ருத்தே என்றும் கட்­சியின் முடிவு அல்ல என்றும் கூட, அவர் அண்­மையில் சில சந்­தர்ப்­பங்­களில் கூறி­யி­ருக்­கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான பங்­காளிக் கட்­சி­யான தமிழ ரசுக் கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில், அதன் தலைவர் மாவை சேனா­தி­ரா­சாவை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிறுத்த வேண்டும் என்ற விருப்பம் கட்­சிக்குள் பர­வ­லாக உள்­ளது.

தமிழரசுக் கட்­சியில் உள்ள பெரும்­பா­லா­ன­வர்கள் அதனை விரும்­பு­கி­றார்கள். கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளான ரெலோ மற்றும் புளொட்டும் கூட மாவை சேனா­தி­ரா­சாவை நிரா­க­ரிக்­காது.

ஆனால், விக்­னேஸ்­வ­ரனா- மாவை சேனா­தி­ரா­சாவா என்று ஒரு தெரிவுப் போட்­டியை முன்­வைக்கும் போது தான் அந்தக் கட்­சி­க­ளுக்கு முடி­வெ­டுப்­பதில் சிக்­கல்கள் உள்­ளன.

மீண்டும் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக விக்­னேஸ்­வ­ரனை நிறுத்­து­வதா இல்­லையா என்று முடி­வெ­டுக்கும் விட­யத்தில், தமிழரசுக் கட்சியோ, அதன் பங்­காளிக் கட்­சி­களோ எழுந்­த­மா­ன­மாக முடிவை எடுக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த மாகா­ண­சபைத் தேர்­தலில் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்ட போது, இருந்த நிலையில் விக்­னேஸ்­வரன் இருந்திருப்பாரே­யானால், அவரை ஒதுக்கி விட்டு மாவை சேனா­தி­ரா­சாவை நிறுத்­து­வது ஒன்றும் கடி­ன­மான காரி­ய­மில்லை.

ஆனால், முத­ல­மைச்­ச­ரா­ன­தற்குப் பின்னர், விக்­னேஸ்­வ­ரனைச் சுற்றி உரு­வா­கி­யுள்ள விம்பம், அத்­த­கை­ய­தொரு முடிவை எடுக்க முடியாத சூழலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

Mavai-Senathirajah

இப்­போது விக்­னேஸ்­வ­ரனைப் பிடித்து வெளியே தள்ளி விட்டு, மாவை சேனா­தி­ரா­சாவை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிறுத்­தினால், தமக்குத் தாமே புதை­கு­ழியைத் தோண்­டிய நிலை­யாகி விடும் என்­பது தான் கூட்­ட­மைப்­புக்கு இப்­போது உள்ள சிக்கல்.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு தமிழரசுக் கட்சி கடு­மை­யான அழுத்­தங்­களைக் கொடுத்த போதும், அவர் கூட்­ட­மைப்பை விட்டு வெளி­யே­று­வ­தாகச் சொல்­ல­வில்லை.

ஏனென்றால், அவ்­வாறு அவர் வெளியே சென்றால், தமிழரசுக் கட்­சிக்குள் இருக்­கின்ற முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான தரப்­பி­ன­ருக்கு அது சாத­க­மாக அமைந்து விடும்.

அத்­த­கைய வாய்ப்பை வழங்­காமல், தொடர்ந்தும், உள்­ளுக்குள் இருந்து கொண்டே, அவர்­க­ளுக்கு நெருக்­க­டியைக் கொடுத்துக் கொண்­டி­ருக்­கிறார் விக்­னேஸ்­வரன். முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனைப் பொறுத்­த­வ­ரையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான ஒரு அர­சியல் கட்­ட­மைப்பை உரு­வாக்க முனைந்­தி­ருந்தார்.

அதற்­கான அடிப்­படை வேலை­க­ளையும் கூட அவர் முன்­னெ­டுத்­தி­ருந்தார்.

அத­னையும் தாண்டி அவரை தமது கட்­சிக்குள் உள்­வாங்­கியோ, அல்­லது அவ­ரது தலை­மையில் ஒரு கூட்­ட­ணியை அமைத்தோ, கூட்­ட­மைப்­புக்குமாற்­றான ஒரு அணியை உரு­வாக்­கு­வ­தற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி தயா­ராக இருக்­கி­றது.

அவ்­வா­றான அணி­யுடன் இணை­வ­தற்கு, ஈபி­ஆர்­எல்எவ் தயா­ராக இருக்­கின்ற அதே­வேளை, ரெலோவில் ஒரு பகு­தி­யி­னரும், அத்­த­கைய அணி­யுடன் இணையும் வாய்ப்­புகள் உள்­ளன.

கூட்­ட­மைப்பில் உள்ள தமிழ் அரசுக் கட்­சியின் பங்­கா­ளி­களும் கூட வலு­வான மாற்று அணி ஒன்று விக்­னேஸ்­வ­ரனின் தலை­மையில் உரு­வானால் அதில் இணைந்து கொள்ளக் கூடும்.

கூட்­ட­மைப்­புக்கு வெளியே இவ்­வா­றான மாற்று வாய்ப்­பு­களை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கொண்­டி­ருப்­பது தான், அவர் பற்றி முடிவுகளை எடுப்­பதில் கூட்­ட­மைப்புத் தலை­மைக்கு உள்ள பிர­தா­ன­மான சிக்­க­லாகும்.

அவரைத் தூக்கி வெளியே போட்­டு­விட்டால், எந்தக் குற்ற உணர்வும் இல்­லாமல் விக்­னேஸ்­வ­ரனால், மாற்று அணிக்குத் தலைமை தாங்க முடியும்.

கூட்­ட­மைப்பை உடைத்துக் கொண்டு போய் விட்டார், விடு­தலைப் புலி­களின் தலை­வரால், உரு­வாக்­கப்­பட்ட கூட்­ட­மைப்பை சிதைத்து விட்டார் என்ற அவப்­பழி ஏற்­ப­டு­வதை விக்­னேஸ்­வரன் விரும்­ப­வில்லை.

அது தனது அர­சியல் வாழ்­வுக்கும், தனிப்­பட்ட வாழ்­வுக்கும் கறையை ஏற்­ப­டுத்தி விடும் என்­பதை விக்­னேஸ்­வரன் உணர்ந்­தி­ருக்­கிறார்.

அதனால் தான், நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை போன்ற கடு­மை­யான அழுத்­தங்­க­ளையும் தாண்டி, அவர் இன்­னமும் கூட்டமைப்புக்குள்ளேயே இருக்க முயற்­சிக்­கிறார்.

சம்­பந்­தனோ, விக்­னேஸ்­வ­ரனோ அடுத்த மாகா­ண­சபைத் தேர்­தலில் முத­ல­மைச்சர் வேட்­பாளர் தொடர்­பாக தமது முடி­வு­களை அறி­விக்­காமல் இழுத்­த­டித்து வரு­வ­தற்கு இது தான் காரணம்.

சில வேளை­களில் சில கட்­சிகள் தமக்கு வேண்­டா­த­வர்­களை வெளியே தூக்கிப் போட்டு விடும். ஏனென்றால், அவர்­களால் வேறு கட்­சியில் தாக்குப் பிடிக்க முடி­யாது. அவர்­களைத் தாங்கிப் பிடிக்­கவும் வேறு கட்­சிகள் முன்­வ­ராது என்ற துணிச்சல் தான் அதற்குக் காரணம்.

ஆனால் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அவ்­வாறு முடி­வெ­டுக்க முடி­யாது. விக்­னேஸ்­வ­ரனும் வெளியே போகும் முடிவை இல­கு­வாக எடுக்க முடி­யாது.

இவர்­களின் இந்த இழு­பறி நிலை­யினால் சிக்­க­லுக்­குள்­ளா­கி­யி­ருப்­பது தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி போன்ற, கட்­சிகள் தான்.

தேர்தல் என்­றாலும் சரி, போர் என்­றாலும் சரி முதலில் தெரிவு செய்ய வேண்­டி­யது எதி­ரியைத் தான். எதி­ரியைத் தெரிவு செய்தால் தான், எதி­ரிக்குப் போட்­டி­யான – சம­தை­யான பலத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முடியும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற கட்­சிகள் தரப்­பு­க­ளுக்கு முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை எந்த இடத்தில் வைப்­பது என்ற குழப்பம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

அவரைத் தமது மாற்று அணிக்குத் தலைமை தாங்க வைக்கும் கனவில் இருந்து வந்த இந்தத் தரப்­பு­க­ளுக்கு, அவர் காலை வாரி விட்டு விடு­வாரா என்ற பயம் தொற்றிக் கொள்ள ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

kajenthirakumar

அண்­மையில் யாழ்ப்­பா­ணத்தில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை தமது கட்­சி­யுடன் இணைந்து கொள்­ளு­மாறும், அல்­லது புதிய கட்­சியை ஆரம்­பித்தால் அவ­ருடன் கூட்டு வைத்துக் கொள்ளத் தயா­ராக இருப்­ப­தா­கவும் கூறி­யி­ருந்தார்.

இந்த விட­யத்தில் முத­ல­மைச்சர் விரை­வாக முடி­வெ­டுக்க வேண்டும் என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

ஆனால் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனோ அவ­ரது இந்தக் கோரிக்­கைக்கு சாத­க­மாகப் பதி­ல­ளிக்கத் தயா­ராக இல்லை. தேர்தல் வரும் போது யாருடன் கூட்டு என்று முடிவு செய்­யலாம். அதற்கு ஒன்றும் அவ­ச­ரப்­படத் தேவை­யில்லை என்று நழு­வி­யி­ருக்­கிறார்.

இந்­த­நி­லையில் தான், கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான தரப்­பாக தம்மை அடை­யா­ளப்­ப­டுத்த முனையும் சக்­தி­க­ளுக்கு பெரும் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை மீண்டும் கூட்­ட­மைப்பு தமது வேட்­பா­ள­ராக நிறுத்­தினால், அவர்­களின் எல்லா வியூ­கங்­களும் உடைந்து போய் விடும்.

அதா­வது விக்­னேஸ்­வ­ரனின் தலை­மைத்­துவம், அவ­ரது கொள்­கை­களை முற்­று­மு­ழு­தாக ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி போன்ற தரப்­புகள், அவரை எதிர்த்து எவ்­வாறு தமது பிர­சா­ரத்தை முன்­னெ­டுக்கப் போகின்­றன என்­பது சிக்கல்.

அதனால் தான் எப்­ப­டி­யா­வது அவரை வெளியே கொண்டு வந்து விட்டால், அவருக்கு இருக்கின்ற ஆதரவு அலையையும், தமது வாக்கு வங்கியையும் வைத்து வடக்கு மாகாணசபையையும் கைப்பற்றி மாற்று அணியாகவும் உருவெடுத்து விடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற தரப்புகள் தமது எதிரியாக யாரை முன்னிறுத்தப் போகின்றன- எவ்வாறான பிரசார வியூகத்தை வகுக்கப் போகின்றன என்பதை இப்போது முடிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

கூட்டமைப்பும், விக்னேஸ்வரனும் எடுக்கப்போகும் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எதிரியை இவ்வாறு காத்திருக்க வைப்பதும் கூட அவர்களைப் பலமிழக்கச் செய்வதற்கான ஒரு உத்தி தான்.

இதனைக் கூட்டமைப்பு சரியாக கையாளுமானால், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமக்குப் போட்டியாக இருக்கக் கூடிய தரப்புகளை இலகுவாகத் தோற்கடித்து விட முடியும் என்பதில் சந்தேகமில்லை.

– சத்திரியன்

Share.
Leave A Reply