ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால், மஹிந்த ராஜபக் ஷ இன்னமும் மாறவில்லை என்று குறிப்பிடலாம்.
தான் மாறாமல் இருப்பதாகவும் இந்தியாவின் மனோநிலையை மாற்ற முனைவதாகவும் தான் அவரது கருத்துக்கள் அமைந்திருக்கின்றன
தரகர்கள் பொதுவாக, வியாபாரங்களில் தான் அதிகம், ஆனால், அரசியலிலும் தரகர்கள் இருப்பதுண்டு. இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், போன்றவர்களை அவ்வாறானவர்கள் எனக் குறிப்பிடலாம்.
ஒரு பக்கம் வணிகப் பெரும்புள்ளியாக இருந்து கொண்டே, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுக்குமிடையே தரகு வேலைகளையும் செய்து ஆட்களை கவர்ந்திருக்கிறார்கள். அதிகார மாற்றங்களுக்கும் துணை போயிருக்கிறார்கள்.
அதுபோலவே, இந்தியாவின் அரசியல் கோமாளி என்று வர்ணிக்கப்படும் சுப்ரமணியன் சுவாமியும் இப்போது, ஒரு தரகு அரசியல்வாதியாகத் தான் மாறியிருக்கிறார்.
அவரது தரகு வேலை, இந்தியாவுக்கும் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையில் மீண்டும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்காக நடந்தேறியிருக்கிறது.
சுப்ரமணியன் சுவாமி தலைவராக இருக்கும் விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் கருத்தரங்கில் உரையாற்ற புதுடெல்லிக்கு அழைக்கப்பட்ட மஹிந்த ராஜபக் ஷவுக்கு, அங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள், சுப்ரமணியன் சுவாமி வெறுமனே அரசியல் கோமாளி மாத்திரமல்ல என்பதையும் வெளிக்காட்டியிருக்கிறது.
‘தி ஹிந்து’ நாளிதழுக்காக தனது மகள் சுகாசினி ஹைதர் மற்றும் அமித் பரூவா போன்ற பிரபல ஊடகவியலாளர்களை வைத்தும், News X தொலைக்காட்சிக்கு பிரியா ஷேகல், strategic News International தொலைக்காட்சிக்கு, நிதின் கோஹலே ஆகியோரைக் கொண்டும், செவ்விகளை காணவைத்து, மஹிந்தவை இந்திய செய்தி வட்டாரங்களில் பரபரப்பாகப் பேச வைத்திருக்கிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச வைத்தார். அடுத்த பக்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும், அதன் தலைவர் ராகுல் காந்தியும், மன்மோகன் சிங்கும், சந்தித்துப் பேசும் நிலையையும் உருவாக்கியிருக்கிறார்.
இவை எல்லாவற்றையும் எதற்காகச் செய்கிறார் சுவாமி? இந்தக் கேள்விக்கான விடை எளிதானது. அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே சுவாமியின் திட்டம். இலக்கு.
அது தான் விடை. தனியான கட்சியை உருவாக்கி, உள்ளூராட்சித் தேர்தலில் பலத்தை நிரூபித்து விட்ட மஹிந்த ராஜபக் ஷவுக்கு, எப்படியும் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
தனது சகோதரர் நிச்சயம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியில் இருக்கிறார் என்று பட்டும்படாமல் சொல்லியிருக்கிறார் அவர்.
இதில் வெற்றி பெற்று ஆட்சிமைப்பதற்கு குறைந்தபட்சம் இந்தியாவின் ஆதரவு அவருக்குத் தேவைப்படுகிறது. ஏனென்றால், 2015இல் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியை இழப்பதற்கு இந்தியாவும் ஒரு காரணியாக இருந்தது. இந்தியப் புலனாய்வுத் துறையும் அமெரிக்காவும் தம்மைத் தோற்கடித்து விட்டது என்று அவர் ஆட்சியை இழந்த பின்னர் பலமுறை கூறியிருந்தார்.
எனவே, மீண்டும் ஒருமுறை அவ்வாறு நடக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அவருக்கு இப்போது இருக்கிறது.
ஆட்சியை இழந்த பின்னர், மஹிந்த ராஜபக் ஷ, தன்னை சீனாவின் நண்பன் என்று காட்டிக் கொள்வதற்கு பலமுறை பீஜிங்கிற்குச் சென்று வந்தார்.
ஆனால் ஒருமுறையேனும், புதுடெல்லிக்கு அவர் பயணம் மேற்கொண்டதில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர், அவர் புதுடெல்லியில் கால் வைத்திருக்கிறார் என்றால், அதற்கு ஒரே காரணம், இந்தியாவின் பக்கத்தில் இருந்து தனக்கு மீண்டும் ஒரு தடைக்கல் போடப்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை தான். புதுடெல்லியில் அவர் ஊடகங்களுக்கு அளித்திருந்த செவ்விகளில் இந்தியாவுடனான உறவுகள் குறித்த விடயத்துக்கே அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
அவர் செவ்வியளித்த ஊடகங்கள் அனைத்திலுமே, தம்மை இந்தியா தவறாகப் புரிந்து கொண்டு விட்டது என்ற பாணியிலேயே பதிலளித்திருக்கிறார்.
இரண்டு தரப்புகளுக்கும் உள்ள தவறான புரிதல்களைக் களைவதற்கே தாம் புதுடெல்லி வந்திருப்பதாக செவ்விகளில் அவர் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்.
அத்துடன், 2015இல் தாம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருந்தது என்ற முன்னைய குற்றச்சாட்டை புதுப்பித்துக் கொள்ளவும் அவர் தயாராக இல்லை.
புதுடெல்லிக் கருத்தரங்கில், பேசும் போது, உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளே தம்மை தோற்கடித்தன என்று குறிப்பிட்ட போதும், எந்த நாட்டையும் அவர் குறிப்பிட்டுச் சொல்வதை தவிர்த்திருந்தார்.
ஊடகச் செவ்விகளில் அதுபற்றிக் கேள்வி எழுப்பிய போது, நடந்தது நடந்து முடிந்து விட்டது, கடந்த காலத்தை மறந்து விடுவோம், இனி புதிய அத்தியாயத்தை தொடங்குவோம் என்ற வகையிலேயே மஹிந்த ராஜபக் ஷவின் பதில்கள் அமைந்திருந்தன.
எனினும், Strategic News International செவ்வியின் ஒரு கட்டத்தில் அவர், கடந்த தேர்தலில் பாடம் கற்றுக்கொண்டதால் அடுத்த முறை இந்தியா தலையிடாது என்ற கருத்தையும் அவர் சூசகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அத்துடன், மஹிந்த ராஜபக் ஷ தன்னை இந்தியா தவறாகப் புரிந்து கொண்டு விட்டது என்பதையே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியிருக்கிறார்.
இந்தியாவை நெருங்கிய உறவினர் என்றும் சீனாவை நண்பன் என்றும் இருவருக்கும் இடையில் நடுநிலையான உறவைப் பேணவே தாம் முனைவதாகவும் கூறும் அவர், கடந்தகாலத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு இந்தியாவிடமே முதலில் கேட்டதாகவும் பின்னரே சீனாவிடம் சென்றதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், இந்தியா அதனை தவறாக புரிந்து கொண்டு விட்டது. அந்த தவறான புரிதல்களைக் களையவே புதுடெல்லி வந்திருப்பது போன்று கதை விட்டிருக்கிறார்.
ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால், அவர் இன்னமும் மாறவில்லை என்று குறிப்பிடலாம். தான் மாறாமல் இருப்பதாகவும் இந்தியாவின் மனோநிலையை மாற்ற முனைவதாகவும் தான் அவரது கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
News X செவ்வியின் போது அவரிடம், ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. 2014இல் இங்கு வந்த போது கடும் எதிர்ப்புகள், போராட்டங்கள் நடத்தப்பட்டன. இப்போது எதுவுமில்லை. ஏன் என்பதே அந்தக் கேள்வி.
அதற்கு மஹிந்த ராஜபக் ஷ நான் மாறவில்லை என்றும் , மக்கள் தான் மாறியிருக்கிறார்கள் என்றும் பதில் கொடுத்திருக்கிறார்.
அவரது அந்தப் பதில் ஏனைய விடயங்களுக்கும் கூடப் பொருத்தமானது தான்.
அதாவது, முன்னரும் சரி, இப்போதும் சரி தான் ஒரே நிலைப்பாட்டிலேயே இருப்பதாக அவர் சாதிக்க முனைந்திருக்கிறார்.
தவறான புரிந்துணர்வுகளை நீக்கி இந்தியாவுடன் நட்பை பலப்படுத்துவது அவரது ஆர்வமாக இருக்கிறது.
போர்க்காலத்தில் மூவரணியை அமைத்து நிலைமைகளைக் கையாண்டது போலவே, தாம் ஆட்சிக்கு வந்த பின்னரும், இந்தியாவுடனான பிரச்சினைகளை அத்தகைய பொறிமுறையை அமைத்து கையாளப் போவதாகவும் மஹிந்த ராஜபக் ஷ கூறியிருக்கிறார்.
ஒட்டுமொத்தத்தில், மஹிந்த ராஜபக் ஷ புதுடெல்லியில் தனக்கான ஒரு கதவை அகலத் திறக்க முனைந்திருக்கிறார்.
இது அவருக்குச் சாதகமா -பாதகமா என்பதை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, மஹிந்த தரப்பின் நியாயங்களையும், கேட்கும் நிலை ஒன்று புதுடெல்லியில் உருவாக்கியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
சுப்ரமணியன் சுவாமி தான் இதற்கு முக்கிய காரணியாக இருந்திருக்கிறார்.
பிராந்திய அரசியல் போட்டிகள் தீவிரமடைந்திருக்கும் இந்தச் சூழலில் மஹிந்த ராஜபக் ஷ தன்னை ஒரு பலமான ஆட்சியாளராக இருப்பேன் என்பதை இந்தியாவிடம் எடுத்துக் கூறியிருக்கிறார்.
தி ஹிந்துவுக்கு அளித்திருந்த செவ்வியில் அவர், இலங்கையில் வலுவான ஆட்சி இருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.
தற்போதைய அரசாங்கம் வலுவானதல்ல என்று, அவர் கூறியுள்ளதன் மூலம், தமது அரசாங்கத்தின் மூலமே இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்பதையும் அவர் வெளிப்படையாகவே கூற முனைந்திருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷவைப் பொறுத்தவரையில், புதுடெல்லியுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறதோ- இல்லையோ என்பதல்ல பிரச்சினை.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் கூட, இந்தியா தலையிட்டு விடக் கூடாது என்பதை உறுதி செய்து கொள்வதே அவருக்கான இப்போதைய தேவையாகும்.
தம்மைப் பற்றிய தவறான புரிதல்களை இந்தியா களைந்து விட்டு ஆரத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதாகத் தெரியவில்லை. அத்தகையதொரு நிலை உடனடியாக ஏற்படுவதற்கான சூழல்கள் இருப்பதாகவும் தோன்றவில்லை.
அவ்வாறு இந்தியா திடீரென குத்துக்கரணம் அடித்தால் அது இந்தியாவின் தோல்வியாகவே பார்க்கப்படும்.
2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவின் தோல்வியை உறுதி செய்வதில் இந்தியா முக்கிய பங்காற்றியது. அண்மையில் மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா எழுதியிருந்த கட்டுரை ஒன்றில், “மஹிந்தவைத் தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய” அஜித் டோவலையும், மஹிந்த சந்திக்கப் போகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.
அப்படியிருக்க, தாமே தோற்கடித்த மஹிந்தவுடன் திடீரென கட்டியணைத்துக் கொள்வது இந்தியாவுக்கு சங்கடமாக இருக்கும். இந்தியாவின் இராஜதந்திரத்துக்கான தோல்வியாகவும் பார்க்கப்படும்.
எனவே, மஹிந்த ராஜபக் ஷவை இந்தியா ஒரேயடியாக நம்பி விடும் என்றோ கட்டி அணைத்துக் கொள்ளும் என்றோ நம்புவதற்கில்லை. மஹிந்தவுக்கும் கூட அது தேவையில்லை.
இப்போதைக்கு அவர் தான் மாறவில்லை. முன்னரைப் போலவே இருக்கிறேன், இந்தியா தான் தவறாக எண்ணிவிட்டது என்பதை நம்ப வைத்து, அடுத்த தேர்தலில் இந்தியா ஒதுங்கியிருந்தால் சரி என்ற நிலையை உறுதிப்படுத்தவே எண்ணியிருக்கிறார்.
இந்தியப் பிரதமர் உள்ளிட்ட தரப்புகளுடனான அவரது சந்திப்புகள் அதனை நோக்கியதாகத் தான் இருந்திருப்பதாக தெரிகிறது.
ஆனால், இந்தியா இந்த விடயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடும் என்று தோன்றவில்லை. மஹிந்தவின் கடந்த காலத்தையும் தற்போதைய நிலைப்பாடுகளையும் இந்தியா நன்கு அறியும்.
மஹிந்தவின் அரசாங்கத்தைக் கையாளுவதில் உள்ள சாதக பாதகங்களை எடை போடாமல் எந்த முடிவுக்கும் புதுடெல்லி வந்து விடப் போவதில்லை.
ஆனாலும், இப்போதைக்கு மஹிந்த- சுவாமி கூட்டணி புதுடெல்லியின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றி கண்டிருக்கிறது என்பது உண்மை.
இதனை முழுமையான வெற்றியாக மாற்றும் திறன், சுவாமி போன்ற அரசியல் தரகர்களுக்கு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.