காலநிலை மாற்றங்களால், அடுத்த 30 ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என்பன மோசமான நிலையை எட்டும் என்று, உலக வங்கியின் அண்மைய அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
“வெப்பநிலை, மழைவீழ்ச்சி மாற்றங்கள் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள்” என்ற தலைப்பில், அண்மையில் உலக வங்கி, ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. தெற்காசியாவில், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் குறித்து, தனித்தனியான அறிக்கைகளாக வெளியிடப்பட்டன.
இந்த அறிக்கையில், 2050ஆம் ஆண்டில், இலங்கை எதிர்கொள்ளப் போகின்ற மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் தெளிவாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த இலங்கைத் தீவிலும், வடக்கு மாகாணமே அதிக பாதிப்பைச் சந்திக்கப் போகின்றது என்ற திடுக்கிடும் தகவலையும் அந்த அறிக்கை தாங்கியிருக்கிறது.
பொருளாதார நிலை, பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக, உலக வங்கி அவ்வப்போது எச்சரிக்கைகளை விடுப்பது வழக்கம். ஆனால், அதுபற்றி யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
ஏதாவது உதவியை வழங்குவதற்காக, உலக வங்கி நிபந்தனையை விதிக்கும் போது மாத்திரமே, பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் அரசாங்கம் கூட, உலக வங்கியின் அறிக்கையைப் படித்துப் பார்ப்பது தான் வழக்கம்.
அதற்கு மாறாக, காலநிலை மாற்றமும் அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பாகவும், உலக வங்கி இப்போது வெளியிட்டுள்ள அறிக்கை, இலங்கையை, குறிப்பாக வடக்கு மாகாணத்தை அச்சத்துடன் நோக்க வைத்திருக்கிறது.
இன்னும் 30 ஆண்டுகளில் 1.5 தொடக்கம் 2 பாகை செல்சியஸ் அளவுக்கு, இலங்கையில் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதானது, அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.
பொதுவாகவே, வடக்கில் முன்னரை விட சராசரி வெப்பநிலை அதிகரித்து விட்டது. வடக்கில் வாழுகின்ற இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது, இந்த வெயில் வெப்பத்தின் அதிகரிப்புக் குறித்து, பேசிக் கொள்வது சாதாரணமாக இருக்கிறது.
இப்போது, வடக்கில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களில் வரட்சியும் வாட்டிக் கொண்டிருக்கிறது. அதனால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கால்நடைகளும் மடியத் தொடங்கி இருக்கின்றன.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வரட்சி இருந்தாலும், நிலத்தடி நீர் அதைப் பாதுகாத்து வருகிறது. ஆனால், நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து கொண்டிருக்கிறது. இப்போதுள்ள நிலையே இப்படியென்றால், இன்னும் 30 ஆண்டுகளில் ஏற்படப் போகின்ற மாற்றம், எத்தனை கொடியதாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்வது கடினமாக உள்ளது.
அடுத்த 30 ஆண்டுகளில், சராசரி வெப்பநிலை இரண்டு பாகை செல்சியஸால் அதிகரிக்கப் போகிறது என்ற செய்தி, சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடியதல்ல. வரட்சி, மழைவீழ்ச்சியின் போக்கில் ஏற்படக்கூடிய மாற்றங்களால், இலங்கையரின் சராசரி வாழ்க்கைத் தரத்தில், ஏழு சதவீத வீழ்ச்சி ஏற்படும் என்று கணித்திருக்கிறது உலக வங்கி.
தமது வருமானத்தில் 20 சதவீதம், குறைவடைந்தால், ஒட்டுமொத்த இலங்கையிலும் 5.7 சதவீதமானோர் வறுமை நிலைக்குள் தள்ளப்படும் சூழல் இருக்கின்ற நிலையில், அடுத்த 30 ஆண்டுகளில் பெருமளவானோர் வறுமைக்குள் தள்ளப்படும் அபாயம் காத்திருக்கிறது.
மாகாண மட்டத்தில், வடக்கு மாகாணத்தில், 11.2 சதவீத வாழ்க்கைத் தர வீழ்ச்சி எதிர்வு கூறப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த இலங்கையிலும், நீர்வளம் கிடைக்கும் வாய்ப்பு 0.4 ஆக இருக்கும் நிலையில், வடக்கு மாகாணத்தில், அது வெறுமனே 0.1 ஆக மாத்திரமே உள்ளது.
இந்தக் காலநிலை மாற்றங்களால், பொருளாதார நிலை மோசமாகப் பாதிக்கப்படும் என்று அடையாளம் செய்யப்பட்டுள்ள 10 மாவட்டங்களில், வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
மிகமோசமாகப் பாதிக்கப்படக் கூடிய மாவட்டமாக, யாழ்ப்பாணம் முதலிடத்தில் இருக்கிறது. இங்கு, 12.7சதவீத வாழ்க்கைத் தர வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாமிடத்தில் உள்ள மன்னாரில், 10.3 சதவீதமும், நான்காமிடத்தில் உள்ள கிளிநொச்சியில், 10 சதவீதமும், ஒன்பதாம், பத்தாமிடங்களில் உள்ள முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில், 8.7 சதவீத வாழ்க்கைத்தர வீழ்ச்சியும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வடக்கிலுள்ள எல்லா மாவட்டங்களிலுமே, கிடைக்கக்கூடிய நீரின் அளவு 0.1 ஆகத் தான் இருக்கப் போகிறது.
இடப்பெயர்வு, போர் என்பனவற்றால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில், காலநிலை மாற்றத்தால், ஏற்படக்கூடிய பொருளாதார வீழ்ச்சி, பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உலக வங்கியின் கணிப்பு.
மூன்று தசாப்த காலப் போரால், வடக்கு மாகாணம், பெரிதும் பாதிக்கப்பட்டது என்பதும், அந்தப் பாதிப்பில் இருந்து இன்று வரை பொருளாதார ரீதியாகவும், வாழ்க்கைத் தர ரீதியாகவும் முன்னேற முடியாத நிலையில் முடங்கிப் போயிருக்கிறது என்பதும் அப்பட்டமான உண்மை.
இலங்கை மத்திய வங்கி வெளியிடும் ஆண்டறிக்கையைப் பார்த்தால், ஒன்பது மாகாணங்களிலும், வளர்ச்சி வேகத்தில், மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பில், வாழ்க்கைத் தரத்தில் என்று எல்லாக் காரணிகளிலும், கடைசி ஒன்பதாவது இடத்தைத் தான், வடக்கு மாகாணம் இருந்து கொண்டிருக்கிறது.
போர் முடிந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகப் போகின்ற நிலையிலும், வடக்கின் பொருளார நிலையை விருத்தி செய்வதற்கான உரிய திட்டங்கள் வகுக்கப்படவில்லை. முதலீடுகள், மேற்கொள்ளப்படவில்லை. போதுமான நிதியுதவிகள் வழங்கப்படவில்லை.
அதைவிட சில திட்டங்களை முன்னெடுக்கும் போது, மனித காரணிகளாலும் தடங்கல்கள் ஏற்படுகின்றன; ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றால், பொருளாதார ரீதியாக, வடக்கு மாகாணத்தின் நிலை படுமோசமான கட்டத்திலேயே இருக்கிறது. வடக்கில் பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு எல்லோரும் போரைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்வதே வழக்கமாக உள்ளது.
இடப்பெயர்வு, இராணுவ நெருக்கடிகள், காணிகள் விடுவிக்கப்படாமை, போதிய நிதி வழங்கப்படாமை என்று பல்வேறு காரணிகளைத் துணைக்கு அழைத்து, தப்பித்துக் கொள்வதில் அரசியல்வாதிகள் வல்லவர்கள். இந்தக் காரணிகளை முற்றாக நிராகரித்து விட முடியாது என்ற போதும், பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இருந்து தப்பிப்பதற்கான ஓர் உத்தியாகவும் இவை பயன்படுத்தப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை.
போரால் பாதிக்கப்பட்ட பொருளாதார நிலை, வாழ்க்கைத் தர நிலை உள்ளிட்ட பெரும்பாலான விடயங்களின், பின்னால் நிற்கின்ற வடக்கு மாகாணத்துக்கு, இப்போது வரப் போகின்ற சவால் மிகப் பெரியது.
அடுத்த 30 ஆண்டுகளில் வடக்கின் நீர் வளத்தை பாதுகாப்பது, பெருக்குவது, பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தப்பிப்பது போன்ற விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதைப் போர்க்கால அடிப்படையில் முன்னெடுத்தால் தான், நிறைவேற்ற முடியும். ஏனென்றால், இந்த நெருக்கடியை எதிர்கொள்ளப் போகின்ற காலம் நெருங்கி வந்து விட்டது.
தற்போதைய வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தான், உலக வங்கியின் இந்த எச்சரிக்கை அறிக்கை வந்திருக்கிறது.
எனவே, வடக்கு மாகாணசபை இந்த விடயத்தில் அவசரமாக எந்த நடவடிக்கையையும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், உடனடியாகச் செயற்பட வேண்டிய கட்டாயத்தை உலக வங்கியின் இந்த அறிக்கை உணர்த்தியிருக்கிறது.
மத்திய அரசாங்கம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் என்றோ, தீர்வைத் தரும் என்றோ பொறுத்திருப்பது, காலத்தை வீணடிக்கும் செயலாகவே தெரிகிறது.
இது வடக்குக்கு வந்துள்ள மிகப்பெரிய பிரச்சினை; இதைத் தீர்ப்பதற்கு வடக்கிலுள்ளவர்களால்தான், எதைச் செய்ய முடியுமோ, அதற்கான சூழலை ஏற்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமானது.
கிடைக்கக் கூடிய வழிகள், வசதிகள், வாய்ப்புகளை ஒன்றிணைத்து, திட்டங்களை வகுக்க வேண்டிய தேவை, வடக்கிலுள்ள தமிழ்மக்கள் அனைவருக்கும் இருக்கிறது.
இத்தகைய கட்டத்தில் அபிவிருத்தியா, உரிமைகளா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருப்பது அர்த்தமற்றது. முதலில் மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவது அவசியம்.
இவையிரண்டும் பாதுகாக்கப்படாவிடின், 2009இல் ஏற்பட்ட நிர்க்கதி நிலையில் தான், 2050இலும் நிற்க வேண்டியிருக்கும்.
அதற்குள்ளாக, இந்தச் சந்ததியையும் அடுத்த சந்ததியையும் இயற்கையிடம் இருந்து காப்பாற்றுவதற்கு முடியுமானவரை முயற்சிக்க வேண்டிய பொறுப்பு நிலைக்கு வருவது, அனைவரதும் கடப்பாடு ஆகும்.
துறைசார் வல்லுநர்களுடன் கூடி ஆராய்ந்து, பொருத்தமான திட்டங்களை உருவாக்கத் தவறினால், உலக வங்கி எச்சரித்தது போன்ற நிலைக்கு இன்னும் முப்பது ஆண்டுகளில், வடக்கு மாகாணம் முகம் கொடுக்க நேரிடலாம்.
அத்தகைய பேரழிவு ஒன்றில் இருந்து தமிழர் தாயகத்தைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை வகுப்பதே, இன்றைய அவசியத் தேவை. இதைச் செய்யத் தவறினால், வரலாற்றுப் பழிக்கு நாமெல்லாம் இலக்காக வேண்டியிருக்கும்.
-கே. சஞ்சயன்