மைத்­தி­ரி­பால சிறி­சேன- – பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான கூட்டு அர­சாங்­கத்­துக்குள் இப்­போது, கூட்டுப் பொறுப்பும் புரிந்­து­ணர்வும் குறைந்து கொண்டு வருகி­ன்றன என்­பதை அண்­மைய பல சம்­ப­வங்கள் எடுத்துக் காட்­டு­கின்­றன.

கடந்­த­மாதம் புது­டெல்லி சென்­றி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை, இந்­திய ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் பேட்டி கண்­டி­ருந்தார். அதில் அவர், ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் ஒருவர் மீது ஒருவர் குற்­றச்­சாட்டு சுமத்­து­வதும், பழி­போ­டு­வதும், சுவா­ரஷ்­ய­மான நாட­க­மாக இருக்­கி­றது என்றும் அதனை தாம் ரசித்துக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் கூறி­யி­ருந்தார்.

ஜனா­தி­ப­தியைக் கொலை செய்யும் சதித் திட்டம் தொடர்­பான விவ­காரம் குறித்து, அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பேசப்­பட்ட விட­யங்கள், ஊட­கங்­களில் வெளி­யாகி பெரும் பூகம்­பத்தை ஏற்­ப­டுத்­திய பின்னர், முன்னாள் அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெ­லவும் இத­னையே கூறி­யி­ருக்­கிறார்.

அர­சாங்­கத்­துக்குள் முரண்­பா­டுகள் இருக்­கின்­றன என்­பது பகி­ரங்­க­மாக வெளி­வந்து விட்­டது என்றும் அவர் குறிப்பிட்­டி­ருந்தார்.

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறிய விட­யங்கள், வெளியே ஊட­கங்­க­ளுக்குத் திரித்துக் கூறப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதே ஜனா­தி­ப­தியின் தரப்பில் இப்­போது கூறப்­படும் குற்­றச்­சாட்டு.

ஒன்­றுக்கு பல அமைச்­சர்­க­ளிடம் இந்தச் செய்தி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது என்று தி ஹிந்து ஊட­க­வி­ய­லாளர் கூறி­யி­ருக்­கிறார்.

ஆனால், குறிப்­பிட்ட ஊட­க­வி­ய­லா­ள­ருக்கு நான்கு அமைச்­சர்கள் இந்த தக­வலைக் கூறி­யி­ருக்­கின்­றனர் என்றும் அவர்­களைக் கண்­டு­பி­டிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்­தி­ருக்­கிறார்.

2015ஆம் ஆண்டு இந்த அர­சாங்கம் பத­வி­யேற்ற போது, முன்­னைய ஆட்­சியில் நடந்த ஊழல் மோச­டி­களைக் கண்­டு­பி­டிக்கப் போவதாக, ராஜ பக் ஷ குடும்­பத்­தி­னரால் வெளி­நா­டு­களில் பதுக்­கப்­பட்­டுள்ள பணத்தை கண்­டு­பி­டிக்கப் போவ­தாக, காணாமல் ஆக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொ­ட­வுக்கு என்ன நடந்­தது என்று கண்­டு­பி­டிக்கப் போவ­தாக, ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­கி­ர­ம­துங்க உள்­ளிட்­ட­வர்­களின் படு­கொ­லைகள், மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதான தாக்­கு­தல்­க­ளுக்குக் கார­ண­மா­ன­வர்­களைக் கண்­ட­றியப் போவ­தாக, கொழும்பில் 11 இளை­ஞர்கள் கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­டமை குறித்து கண்­டு­பி­டிக்கப் போவ­தாக என்று- – “கண்­டு­பி­டிக்­கப்­படும்” பட்­டி­ய­லிட்­டி­ருந்த விட­யங்கள் ஏராளம்.

அவை ஒன்றும் கூடக் கண்­டு­ பி­டிக்­கப்­ப­டாத நிலையில் தான், இப்­போது, அமைச்­ச­ர­வைக்குள் இருக்கும் கறுப்பு ஆடு­களைக் கண்­டு­பி­டிக்கும் வேலையைத் தொடங்க வேண்­டிய நிலைக்கு வந்­தி­ருக்­கி­றது அர­சாங்கம்.

அமைச்­ச­ர­வைக்குள் நடந்த சம்­ப­வங்­களை வெளியே சொல்­லக்­கூ­டாது என்­பது விதி­முறை. அர­சாங்க இர­க­சி­யங்­களை வெளி­யி­டு­வது குற்­றமும் கூட. அதனால் தான், ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­சர்கள் பத­வி­யேற்­கின்ற போது, இர­க­சிய காப்பு பிர­மா­ணமும் செய்து கொள்­வார்கள்.

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் வெளி­யி­டப்­பட்ட கருத்­துக்­களை ஒரே குரலில் வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காகத் தான், அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் என ஒரு பதவி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. கூட்டு அர­சாங்கம் என்­பதால், ஒன்­றுக்கு மேற்­பட்­ட­வர்கள் இணைப் பேச்­சா­ளர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அவர்கள் அவ்­வப்­போது வெளி­யி­டு­கின்ற தக­வல்­களே நிரா­க­ரிக்­கப்­ப­டு­கின்ற- சம்­ப­வங்கள் நடக்­கின்ற சூழலில், தான் இந்தச் சம்­ப­வமும் நடந்­தி­ருக்­கி­றது.

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஜனா­தி­பதி கூறாத விட­யங்­களை, அமைச்­ச­ரவைக் கூட்­டுப்­பொ­றுப்பை மீறி நான்கு அமைச்­சர்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றனர் என்று ஜனா­தி­ப­திக்கு நெருக்­க­மான அமைச்­ச­ரான மகிந்த சம­ர­சிங்க கூறி­யி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதி கூறாத விட­யங்­களை இவர்கள் ஊட­கங்­க­ளுக்குக் கூறி­யி­ருந்­தார்­க­ளே­யானால், அது நிச்­சயம் பார­தூ­ர­மா­னது- உள்­நோக்கம் கொண்­டது என்­பதில் சந்­தே­க­மில்லை.

அதே­வேளை, ஒரு அமைச்சர் அல்ல, நான்கு அமைச்­சர்கள், ஜனா­தி­பதி கூறி­ய­தாக ஒரு விட­யத்தை, வெளிப்­ப­டுத்தும் போது, ஊட­கங்கள் அதனைச் செய்­தி­யாக்­கி­யதில், பொய், புரட்டு, தீய நோக்கம் கொண்­டது என்று புலம்­பு­வ­திலும் அர்த்­த­மில்லை.

அமைச்­ச­ர­வையில் பேசப்­பட்ட ஒரு விட­யத்தை, அர­சாங்­கத்தில் உள்ள நான்கு அமைச்­சர்கள், உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்த போது, எந்­த­வொரு ஊட­கமும் அதனைத் தட்­டிக்­க­ழிக்­காது.

அவ்­வா­றாயின், இங்கு உள்­நோக்­கத்­துடன், தீய எண்­ணத்­துடன் நடந்து கொண்­டது ஊட­கங்­களா அல்­லது அர­சாங்­கத்­துக்கு உள்­ளேயே இருக்­கின்ற அமைச்­சர்­களா என்ற கேள்வி வரு­கி­றது.

ஒரு ஜனா­தி­பதி அல்­லது பிர­தமர் நம்­பிக்­கை­யான – விசு­வா­ச­மாகச் செயற்­படும் அமைச்­ச­ர­வையைக் கொண்­டி­ருந்தால், இது­போன்ற செய்­திகள் வெளியே கசி­யாது. ஆனால் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் நிலை அவ்­வா­றா­னது அல்ல.

இங்கே காலை வாரு­வ­தற்கும், இழுத்து விழுத்­து­வ­தற்கும் ஆளை ஆள் பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், ஐ.தே.க.வுக்கும் இடையில் மாத்­தி­ரமே பனிப்போர் நடந்து கொண்­டி­ருக்­கி­றது என்று அர்த்­த­மில்லை. அமைச்­ச­ர­வைக்கு வெளியே உள்ள புறச்­சக்­தி­களும் கூட இதில் தலை­யீடு செய்­கின்­றன.

உதா­ர­ணத்­துக்கு, ஐ.தே.க.வை விரட்டி விட்டு, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து ஒரு இடைக்­கால அர­சாங்­கத்தை அமைக்கும் கன­வுடன் மஹிந்த அணி சுற்றிக் கொண்­டி­ருக்­கி­றது.

அவர்­க­ளுக்கு இரட்டைக் கோபம், ஒன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது, அடுத்­தது ஐ.தே.க.வின் மீது.

முதலில் ஐ.தே.க.வை வீழ்த்தி விட்டு, அடுத்து ஜனா­தி­ப­தியைப் பார்த்துக் கொள்­ளலாம் என்­பது அவர்­களின் கணிப்பு. ஐ.தே.க.வை வீழ்த்தி விட்டால், ஜனா­தி­ப­தியை கையா­ளு­வது கடி­ன­மல்ல. அவ­ருக்கு பரந்­து­பட்ட செல்­வாக்கும் இல்லை. ஆனால், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதற்கு அவ்­வ­ள­வாக இடம்­கொ­டுக்க மறுத்து வரு­வது தான், மஹிந்த அணிக்குக் கோபம்.

அதே­வேளை, தாம் அரி­ய­ணையில் ஏற்றி விட்ட ஜனா­தி­பதி, தமக்குத் துரோகம் செய்து விட்டு, மஹிந்­த­வுடன் சேர்ந்து இடைக்­கால அர­சாங்­கத்தை அமைத்து விடு­வாரோ என்­பது ஐ.தே.க.வுக்கு உள்ள சந்­தேகம்.

இந்தச் சூழலைப் பயன்­ப­டுத்தி,, ஜனா­தி­ப­தியை ஐ.தே.க.விடம் இருந்து பிரிக்கும் முயற்­சி­களில் மகிந்த அணியும் தாரா­ள­மா­கவே ஈடு­பட்­டி­ருக்­கி­றது.

தற்­போ­தைய அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்­கான ஒரு அஞ்­ச­லோட்­டத்தின் ஒரு பகு­தி­யாகத் தான், இந்த அமைச்­ச­ரவை கூட்­டத்தின் விப­ரங்கள் கசிந்த விவ­கா­ரத்தை பார்க்க வேண்­டி­யுள்­ளது.

அமைச்­ச­ர­வையில் பேசப்­ப­டாத விட­யங்கள் வெளியே கசி­ய­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது உண்­மை­யானால், அதற்கு நிச்­சயம் ஒரு உள்­நோக்கம் இருந்­தி­ருக்கும் என்­பதை மறுக்க முடி­யாது. அது வெறு­மனே கட்சி அர­சியல் போட்­டிக்கும் அப்­பாற்­பட்­ட­தாக இருக்கும் என்றே சந்­தே­கிக்க வேண்டும்.

இதனை, இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வு­களை சீர்­கு­லைக்கும் முயற்சி என்று அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்­கவும், ராஜித சேனா­ரத்­னவும் கூறி­யி­ருக்­கின்­றனர். அவ்­வா­றாயின், இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வு­களைச் சீர்­கு­லைப்­பதன் மூலம், இலாபம் அடைய முனையும் தரப்பு எது என்ற கேள்வி எழு­கி­றது.

இந்­தி­யா­வுக்கும் இலங்கை அர­சுக்கும் இடையில் சிண்டு முடிந்து விடு­வதன் மூலம், இலா­ப­ம­டைய இரண்டு தரப்­புகள் விரும்பக் கூடும். முத­லா­வது உள்ளூர் தரப்­பான, அர­சாங்­கத்­துக்கு வெளியெ இருக்­கின்ற மஹிந்த ராஜபக் ஷ அணி.

கடந்­த­மாதம் இந்­தி­யா­வுக்கு சென்று வந்­ததில் இருந்து மஹிந்த ராஜபக் ஷ உற்­சா­க­மாக இருக்­கிறார். அர­சாங்­கத்தைக் கவிழ்க்க இந்­தியா உதவும் என்று மஹிந்த அணியைச் சேர்ந்­த­வர்கள் சிலர் பகி­ரங்­க­மா­கவே கூறி­யி­ருந்­தனர் என்­பதும் கவ­னிக்­கத்­தக்­கது.

இந்­தி­யா­வுக்கும் இலங்கை அர­சுக்கும் இடையில் முரண்­பாட்டை விரும்பும் இன்­னொரு தரப்பு, இலங்­கைக்கு வெளியே இருக்­கின்ற ஒரு புறச்­சக்­தி­யாக இருக்­கலாம்.

இந்­தி­யா­வுக்கு போட்­டி­யாகச் செயற்­படும், சீனா­வா­கவும் கூட இருப்­ப­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன.

அமெ­ரிக்­காவின் துணை அதிபர் மைக் பென்ஸ், ஹட்சன் நிறு­வ­கத்தில், கடந்த ஒக்­டோபர் 4ஆம் திகதி உரை­யாற்­றிய போது, சீனா தனது மூலோ­பாய நோக்­கங்­க­ளுக்கு இட­ம­ளிப்­ப­தாக வாக்­கு­றுதி அளிக்கும், கட்­சிகள், வேட்­பா­ளர்­க­ளுக்கு நேர­டி­யாக ஆத­ர­வ­ளித்து, சில நாடு­களின் அர­சி­யலை சீர்­கு­லைக்­கி­றது என்று குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த விவ­கா­ரத்தில் சீனாவோ, இந்­தி­யாவோ தொடர்­பு­பட்­டுள்­ளது என்­ப­தற்கு ஆதா­ரங்கள் முன்­வைக்­கப்­ப­டா­வி­டினும், இரண்டு நாடு­களும் இலங்­கையை பொது­வா­ன­தொரு போட்டிக் கள­மாக பயன்­ப­டுத்­து­கின்­றன என்­பதால், இத்­த­கைய சந்­தே­கங்கள் எழு­வது இயல்பு.

அர­சாங்­கத்­துக்குள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த விரும்பும், உள்­நாட்டு, வெளி­நாட்டு சக்­தி­க­ளுக்­கி­டையில் நெருங்­கிய தொடர்­புகள் இருப்­ப­தையும் இங்கு அவ­தா­னிக்­கலாம்.

அமைச்­ச­ர­வைக்குள் இருக்கும் கறுப்பு ஆடுகள் யார், அவர்கள் யாருக்­காக பணி­யாற்­று­கின்­றனர் என்­பதை ஜனா­தி­ப­தி­யினால் கண்­டு­பி­டிக்க முடி­யுமா என்று தெரி­ய­வில்லை.

ஆனால் அர­சாங்­கத்­துக்குள் விரி­சல்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.

ஜனாதிபதியை படுகொலை செய்யும் சதித்திட்டம் குறித்த விசாரணைகள், வேகமாக முன்னெடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதியின் ஆலோசகர், சிறிரால் லக்திலக கூறியிருக்கிறார். அமைச்சரவைக் கூட்டத்திலும் ஜனாதிபதி அதனையே கூறியிருந்தார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பாரதூரமான ஒரு விடயத்தில் அரசாங்கம் தீவிரமாகச் செயற்படவில்லை என்பது அவர்களின் தரப்பு குற்றச்சாட்டாக உள்ளது.

அதேவேளை, அலரி மாளிகையில் நடந்த இந்தியப் பெருங்கடல் மாநாட்டில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றிருந்த ஒரு சூழலில், ஜனாதிபதி மேடையில் ஏறி தனது ஆசனத்தில் அமராமல், திடீரென எழுந்து வெளியே சென்றதும், உள் முரண்பாடுகளின் வெளிப்பாடு தான்.

அரசாங்கத்துக்குள் புரிந்துணர்வும், கூட்டுப்பொறுப்பும் குறையத் தொடங்கியுள்ள இந்தச் சூழல், அரசாங்கத்தைக் கவிழ்க்க முனையும் புறச்சக்திகளுக்கு மிகவும் வாய்ப்பானதே. அதனைத் தான் அவர்கள் செய்யத் தொடங்கியிருக்கின்றனர் போலத் தெரிகிறது.

Share.
Leave A Reply