எதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான வடமாகாணசபையின் இந்த ஆட்சிக்காலம் முடிகிறது.

இதையிட்டுச் சிலருக்குப் பெருங்கவலைகள் உண்டாகும். பென்ஸன் எடுத்துக் கொண்டு வெட்டிப் பேச்சுப் பேசி, மாகாணசபை நிதியிலேயே உண்டு, களித்துக் கொண்டாடி, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஊரில் நாட்டாமை செய்து, பையையும் கையும் நிரப்பிய வாழ்க்கைக்கு முடிவு வரப்போகிறது என்றால் கவலைகள் வரத்தானே செய்யும்.

சிலருக்குக் குற்றவுணர்ச்சி ஏற்படும். இதனுடைய வெளிப்பாடே, “ஐந்து ஆண்டுகளை வீணடித்து விட்டோம்” என்று சபை முதல்வர் சி.வி.கே சிவஞானம் உள்பட பலரும் கவலையோடு சொல்லத் தொடங்கியிருப்பது.

இந்தக் குற்றவுணர்ச்சி மெய்யாகவே ஏற்பட்டது என்றால் அடுத்த தடவை இதே மாதிரித் தவறுகள் செய்யாத தொலைவுக்குப் போக வேண்டும்.

சிலர் மகிழ்ச்சியடைவர். விக்கினேஸ்வரனுடைய அணி பெட்டியைக் கட்டிக் கொண்டு போக, அந்த இடத்தில் கவர்னர் ஆட்சி வரும். கவர்னரைக் கொண்டு ஆகவேண்டிய காரியங்களைப் பெறலாம் என்று. இதற்காக கவர்னரின் கையையும் காலையும் பிடிக்கும் அணிகளும் புதிதாக முளைக்கலாம். எப்படியோ கவர்னர் மாளிகை களை கட்டத்தான் போகிறது.

அரசாங்கத்துக்கும் உள்ளுர ஒரு சந்தோசம் இருக்கும். கவர்னரின் மூலமாக தாம் நினைப்பதைச் சாதித்துக் கொள்ளலாம் என. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்னும் கூடுதலான ஆர்வம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்னரின் மூலமாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியை வடக்கில் வலுவாக்கம் செய்ய முடியும் என்று. இதைப்பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள சுதந்திரக் கட்சியின் வட்டாரங்கள் உற்சாகமாகக் கதைத்து வருகின்றன.

இதற்குள் தாம் இன்னொரு விளையாட்டை விளையாடலாம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கிறது. வடக்கின் அபிவிருத்திக்கான செயலணி என்ற கட்டமைப்பிற்குள்ளால் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிருக்கும் இடத்தை – அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமது அரசியல் அடித்தளத்தைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என்பதே இந்தத் திட்டம்.

சனங்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய வாழ்விலும் மனதிலும் பெரும் சுமையாக இருந்த பாறாங்கல்லொன்று விலகப்போகிறது என்பது உண்மையே.

ஆனால், அதற்குப் பதிலாக அடுத்து என்ன நடக்கப்போகிறது? இன்னொரு பாறையா அல்லது முட்படுக்கையா கிடைக்கப்போகிறது என்பதே இப்பொழுது எழுந்துள்ள அச்சமும் கேள்வியுமாகும்.

வடக்கு மாகாணசபையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய அன்று எப்படியிருந்தது என்பதை யாரும் இப்பொழுது நினைவுபடுத்திப்பார்க்கலாம்.

மறுநாள் பத்திரிகைகளின் முகப்பில் “மலர்ந்தது தமிழர் ஆட்சி” எனவும் “உருவாகியது தமிழரசு” எனவும் செய்திகள் வெளிவந்தன. தெருவெங்கும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடப்பட்டது. முதலமைச்சராக விக்கினேஸ்வரன் பதவியேற்றபோது விக்கினேஸ்வரனும் சம்மந்தனும் முடிசூடிக் கையிலே வேல் ஏந்தினர்.

ஆனால், இதற்குப் பிறகு நடந்ததெல்லாம் நேர்மாறானவை. அவற்றைச் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.

1.   மாகாணசபையின் ஐந்து ஆண்டுகால ஆட்சியில் ஆளுந்தரப்பினேலேயே முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது.

2.   இரண்டு தடவை அமைச்சரவை உருவாக்கப்பட்டது.

3.   ஏற்கனவே இருந்த அமைச்சர்களின் மீது ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டது.

4.   இதற்கான விசாரணைகளின் பிறகு நான்கு அமைச்சர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

5.   இதை எதிர்த்து ஒரு அமைச்சர் (பா.டெனீஸ்வரன்) முதலமைச்சருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார். அந்த வழக்கின் தீர்ப்பில் டெனீஸ்வரனுடைய பதவி விலக்கல் தவறானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால்,

6.   இதை விக்கினேஸ்வரன் ஏற்க மறுத்ததால் மறுவழக்குத் தாக்கல் செய்தார் டெனீஸ்வரன். அந்த வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மாகாணசபை கலைந்தாலும் வழக்கு நிலுவையிலிருக்கும்.

இது ஒரு புறமிருக்க,

thavarasa--1-1.   மாகாணசபை வினைத்திறனாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பகிரங்கமாகப் பல தடவை, பலராலும் கூறப்பட்டு வந்தன. இதை எதிர்க்கட்சி வரிசையிலிருந்த சின்னத்துரை தவராஜா, வைத்தியநாதன் தவநாதன் உள்ளிட்டோர் சபையிலேயே பலதடவை ஆதாரபூர்வமாக முன்வைத்திருக்கிறார்கள்.

முக்கியமாக மாகாணசபையின் தவறுகள், பலவீனங்கள், உள்முரண்பாடுகள் போன்றவற்றையெல்லாம் தவராஜா தெளிவாகப் பகிரங்கப்படுத்தி வந்திருக்கிறார்.

2.   மட்டுமல்ல, மாகாணசபை எப்படியெல்லாம் இயங்க முடியும், இயங்க வேண்டும் என்பதையும் தவராஜா குறிப்பிட்டிருக்கிறார். இதன் நிமித்தமாக தவராஜாவைப் பற்றிய மதிப்பீடுகள் வெளிப்பரப்பில் உச்சமடைந்தன. அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தையும் விட மாகாணசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலமே பலருடைய கவனத்திற்குமுரியதாகியது. வரலாற்றிலும் தவராஜாவின் இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவிக் காலம் சிறப்பாகவே பதியப்படும்.

3.   நிதியை முறையாகப் பயன்படுத்தப்படாமை, அந்த நிதி திரும்பிச் செல்கின்றமை, கட்டற்ற ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள், திட்டமிடற் குறைபாடுகள், செயற்பாட்டுத்திறனின்மை, ஒருங்கிணைந்த செயற்பாடின்மை, ஆளும் தரப்புகளுக்குள்ளேயே முரண்பாடுகளும் அரசியல் போட்டிகளும் எனப் பல பின்னடைவுக்காரணிகள் மாகாணசபையை முடக்கின.

4.   விக்கினேஸ்வரனையும் மாகாணசபையையும் நாடித் தேடி வந்த வாய்ப்புகள் எல்லாம் கோட்டை விடப்பட்டன. குறிப்பாக பிரித்தானியப் பிரதமர் டேவிற் கமருன், இந்தியப்பிரதமர் மோடி உள்ளிட்ட பெருந்தலைவர்கள் தொடக்கம் பல நாடுகளின் பிரதானிகள், தூதர்கள், தலைவர்கள் எனப்பலரும் ஆதரவுக் கரம் நீட்டியபோதும் அதைச் சரியான முறையில் பற்றிப் பிடிக்கத் தவறியது மாகாணசபை.

5.   மாகாணசபையை அதிகாரமுள்ள சபையாக இயக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய நிலையியற்சட்டங்களை இயற்றவும் சபையில் அவற்றை நிறைவேற்றவும் கூட இல்லை. இதைப் பலதடவை சபையில் தவராஜாவும் சபைக்கு வெளியே பலரும் சுட்டிக்காட்டியபோதும் கூட இதைக் குறித்து மாகாணசபை கவனம் கொள்ளவில்லை.

இப்படி ஆயிரம் விடயங்களைக் குறிப்பிடலாம். இன்று எல்லாமே கடந்து விட்டன.

இப்பொழுது நாம் மாகாணசபையின் முடிவு நாளன்று வருகின்ற பத்திரிகைகளின் செய்தியையும் மாகாணசபையில் பதவியேற்ற நாளின் செய்திகளையும் இணைத்துப் பார்க்கும்போது இடையில் என்ன நடந்தது என்பது தெளிவாகும்.

தமிழராட்சியின் மாண்பும் மகத்துவமும் பெறுமதியும் அப்பொழுது புரியும். ஒரு சிறிய மாகாணசபையையே நிர்வகிக்க முடியாத அளவுக்குத்தான் தமிழ்ச்சமூகத்தின் ஆற்றலும் அரசதிகார ஆளுமையும் உள்ளது என்பது வெளிச்சமாகும்.

vicky-cartoonஆனால் இதைப் பலரும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. பதிலாக எல்லாவற்றுக்குமாக ஒரேயொரு காரணத்தையே – சாட்டையே சொல்லப்போகிறார்கள்.

மாகாணசபையை முறையாக இயங்குவதற்கு அரசாங்கம் இடமளிக்கவில்லை. நிதியைப் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தைக் கூட ஆளுநர் தரவில்லை என்றவாறாக.

இதற்கு ஏற்றமாதிரி அல்லது இதை நம்பக் கூடியமாதிரியே அடுத்த தேர்தல் வரையில் கவர்னரின் கையில் இருக்கப்போகும் அதிகாரமும் அதன் மூலம் நடக்கவுள்ள நிகழ்ச்சிகளும் அமையப்போகின்றன.

இதுவரையான மாகாணசபை ஆட்சிக்காலத்தில் நிலவிய குறைபாடுகளை இனி வரும் நாட்களில் சீர் செய்ய வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள்.

இதற்கு கவர்னரின் கையில் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். கவர்னரைக் கொண்டு இதைச் செய்ய வேணும் என இவர்கள் கூறுகிறார்கள்.

ஏனென்றால் மக்களின் நிலை தொடர்ந்தும் பாதிப்பிலேயே உள்ளது. அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பது இவர்களுடைய வாதம்.

இது ஒரு வகையில் தவிர்க்க முடியாதது என்றாலும் இதில் உள்ள சாதக பாதக அம்சங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

கடந்த மாதம் ஐரோப்பிய சுற்றுப் பயணமொன்றை முடித்துக் கொண்டு திரும்பியிருக்கிறார் கவர்னர். இதன்போது புலம்பெயர் தமிழர்களில் ஒரு தொகுதியினரை அந்தந்த நாடுகளில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

சில அமைப்புகளின் சார்பாகவும் பேச்சுகளும் சந்திப்புகளும் நடந்துள்ளன. அடுத்து வரும் காலகட்டத்தில் என்னமாதிரியான வேலைகளைச் செய்யலாம் என இதன்போது பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்த சம்பவங்களும் சில நாடுகளில் நடந்துள்ளன.

இதனை அவதானிக்கும்போது, கவர்னருக்கான ஆதரவை தமிழ்த்தரப்பில் ஒரு சாரார் வழங்கப்போகின்றனர். இன்னொரு சாரார் கடுமையாக எதிர்க்கப்போகிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆகவே இந்த விவகாரம் ஒரு அரசியல் பிரச்சினையாக மாறப்போகிறது.

இதேவேளை கவர்னரும் சில பொறிகளுக்குள் சிக்கப்போகிறார் என்று தெரிகிறது. ஏற்கனவே சில விடயங்களில் கவர்னருடைய நடவடிக்கைகள் பொது நோக்கிலானவையாகவோ கூடித்தீர்மானிக்கப்பட்டவையாகவே இல்லை என்பது அனுபவம்.

உதாரணமாக கிளிநொச்சி நகரில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளைப் பொதுப் பயன்பாட்டுக்கென ஒதுக்காமல் தனிப்பட்டவர்களுக்கே வழங்கினார்.

இது தவறு. காணிப்பயன்பாட்டுக்குழுவின் ஆலோசனையின்படி (அப்படியொரு குழு கிளிநொச்சியில் உள்ளதா? என்று நீங்கள் கேட்கலாம்) இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டிருக்க வேணும். குறைந்தது சமூக மட்டத்திலானவர்களோடு ஒரு ஆலோசனையையாவது பெற்றிருக்கலாம்.

இந்த மாதிரி ஒற்றைத்தீர்மானம் எடுக்கும் நடைமுறையையே கவர்னர் தொடர்ந்தும் பின்பற்றினால், அல்லது அவரைக் கயிறு போட்டு இழுப்பவர்களின் பக்கமாகச் சாய்வு கொண்டார் என்றால் அது எதிர்காலத்தில் எதிர்ப்பு அரசியலைச் செய்வோருக்கே வாய்ப்பாகும்.

இதேவேளை மாகாணசபையில் இருந்து குப்பை கொட்டியவர்கள் தங்கள் தவறுகளையும் பலவீனங்களையும் மறைப்பதற்கும் கவர்னர் மீதான வயிற்றெரிச்சலைக் கொட்டுவதற்கும் கவர்னர் இடளிக்கக் கூடாது. அ

தாவது எந்த வகையிலாவது மாகாணசபையின் தவறுகளுக்கு நிகரான தவறுகளை கவர்னரும் அவரோடு கூடச் சேரக் கூடியவர்களும் செய்யக் கூடாது.

இதற்குப் பொருத்தமான ஒரு வேலையைக் கவர்னர் செய்யலாம். இந்த இடைக்காலத்தில் செயற்படுவதற்கு சமூக அக்கறையும் நிபுணத்துவமும் கொண்ட ஒரு அணியை ஆலோசனைச் சபையாக அவர் நியமிக்கலாம். சம்பளமற்ற முறையில் சன விசுவாசத்துடன் செயற்படக் கூடிய – சுய நலன்களைக் கடந்த அந்தச் சபை அல்லது அந்த அணி தன்னுடைய திட்டங்களையும் செயற்பாடுகளையும் பகிரங்கப்படுத்துவதன் மூலமாக இதைச் சரியாகச் செய்ய முடியும்.

இது மாகாணசபையில் இருந்து குப்பை கொட்டியவர்களுக்குச் செய்கின்ற படிப்பினையாகவும் அமையும்.

அடுத்த மாகாணசபைத் தேர்தல் இப்போதைக்கு வரும் என்று எதிர்ப்பதற்கில்லை. அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கு எப்படியும் ஒரு ஆண்டுக்கு மேல் செல்லும். அதுவரையிலான காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதே இங்கே நாம் கவனிக்க வேண்டியது.

இந்த இடைக்காலம் என்பது கத்திமுனையில் நடப்பதற்கு ஒப்பானது.

Share.
Leave A Reply