வருடத்தின் இறுதிக்காலம் நமது நாட்டில் அனர்த்தகாலம். இந்தக்காலத்தில் மழை, வெள்ளம், கடும் காற்று, சூறாவளி எல்லாம் ஏற்படுவது வழமையே.

அது போலவே, இந்த வருடத்தின் இறுதிக் காலம் அரசியலிலும் நடக்கிறது. இதைப் பலர் ‘அரசியல்புரட்சி’ என்றும் சொல்கிறார்கள்.

இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில், கிழக்கு மாகாணம் என்றாலே அது, தமிழ்த் தேசியத்துக்கு எதிரானதென்ற கருத்து பிம்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அதற்கேற்றால்போல், ஒரு சில சம்பவங்கள் அண்மைக் காலங்களிலும் நடந்து கொண்டேதான் வருகின்றன.

அதில் ஒன்றுதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், பிரதேச அபிவிருத்தி (கிழக்கு மாகாணம்) பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டமையாகும்.

இதற்கடுத்ததாகத் தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற, கிழக்கு என்கிற பார்வை அல்லது பிரதேசவாதம் என்ற விடயம்; அதற்கடுத்ததாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடு. இவற்றையெல்லாம் தாண்டியதாகவே, ஏனைய விடயங்கள் காணப்படுகின்றன.

வியாழேந்திரனின் பதவி ஏற்பு நடைபெற்றதாக அறிவிக்கப்பட்ட உடனேயே, “கருணாவுக்கு அடுத்ததாக, ‘அமல்’ காட்டிக் கொடுத்து விட்டார்” என்று, கொழும்பு நண்பர் ஒருவர் தொலைபேசியில் கேட்கிறார்.

‘அமல்’ என்கிற வியாழேந்திரன், எப்படி நாடாளுமன்ற உறுப்பினரானார், இவருடைய அரசியல் வாழ்வுக்கு எங்கு அத்திவாரம் இடப்பட்டது.

யாரெல்லாம் இவரை வழிப்படுத்தினார்கள்; வழி நடத்துகிறார்கள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, புளொட் அமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனக் கட்சிகள் எப்படி இவருடன் சம்பந்தப்படுகின்றன, கனடாவுக்குப் பயணமாகும் முன், நாடு திரும்பிய பின், என்ன நடந்தது?

இவ்வாறெல்லாம் பல கேள்விகள், தமிழர் சார் பல்வேறு தரப்பினரிடமும் இருக்கத்தான் செய்கின்றன.

‘கொழும்பு விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன், கிறிஸ்தவ சபையொன்றின் பாதிரியார், இவரை வரவேற்று அழைத்துச் சென்று, அண்மையிலிருந்த நட்சத்திர விடுதியில் தங்க வைத்தார்.

கொழும்பிலிருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் முக்கியஸ்தர், வியாழேந்திரனை மஹிந்தவிடம் அழைத்துச் சென்றார்’ என்றெல்லாம் ஊகங்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன;

அவை முடிந்தபாடில்லை. இவை உண்மையா, பொய்யா? என்று விசாரணை செய்வதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

இப்போது எழுந்திருக்கும் சந்தேகங்களில் ஒன்று, மக்கள் தமிழ்த் தேசியத்துக்காகவா, அபிவிருத்திக்காகவா வாக்களித்தார்கள் என்பதுதான்.

இதன் மறுபக்கத்தில் இருக்கும் ஒரு பதில், தமிழ் மக்கள் அபிவிருத்தியை, பெரும்பான்மையின அரசாங்கங்களிடம் இருந்து மட்டும்தான் பெற்றுக் கொண்டார்களா என்பது? எம்மால் சுமை தூக்க முடியாவிட்டால், அதற்கு அடுத்தவன் மீது பழிபோடுவதும், காரணம் சொல்வதும் வழமையாகக் காணப்படுகிறது.

நாடாளுமன்றம் இம்மாதம் 14ஆம் திகதி கூடிய கையோடு, ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையின் பின்னர், சபையை ஒத்திவைக்கும் பிரேரணை கொண்டுவரப்படும்.

அதற்கிடையில் சபாநாயகரும் மாற்றப்பட்டுவிடுவார். அதன் பின்னர், மீண்டும் சபை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது என்றுதான் எதிர்வுகூரல்கள் நிலவுகின்றன.

இலங்கையில் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி மாலையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான விடயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற தொனிப்பட பலரும் பல முன்வைப்புகளை வெளியிட்ட வண்ணமே இருக்கின்றனர்.

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டதை அடுத்து, ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் நவம்பர் 16ஆம் திகதி கூடும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, ஆறாம் திகதி கூட்டப்படும் என்று எதிர்பார்த்து, ஏழாம் திகதி ஆகி, மீண்டும் 16ஆம் திகதி என்று மாற்றப்பட்டு, பின்னர் 14ஆம் திகதி என்று வர்த்தமானி அறிவித்தல் வெளி வந்திருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இருதரப்பும் தள்ளப்பட்டுள்ளன.

நவம்பர் 07ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த, ‘புதிய அரசமைப்பு நிபுணர்கள் குழு அறிக்கை’, கிடப்பில் போடப்படப் போகிறது.

இது இலங்கை அரசியல் வரலாற்றில் சிறுபான்மைத் தமிழ்மக்களுக்கு எதிரான மற்றுமொரு கறைபடிதலாகிறது.

இந்த வகையில் தான் தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் பிரதான கட்சி ஒன்று தீர்வை முன்வைக்கின்ற போது, மற்றைய கட்சி எதிர்த்த வரலாறுதான் இருந்திருக்கிறது.

அவ்வாறில்லாமல், மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து உருவான தேசிய அரசாங்கத்தில் அதைச் செய்யவிருந்த நேரத்தில், அதற்குக்காரண கர்த்தாவாக இருந்த ஜனாதிபதியவர்கள், குழப்பியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து வருகிறது.

இந்த நாட்டின், பெரும்பான்மையினத் தலைவர்கள் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள் எச்சரிக்கையாய் இருங்கள் என்றுதான் எல்லோரும் சொல்லிக் கொள்வதன் அர்த்தம், மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் ஒரு வருடத்துக்கு மேலாக, நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் இருக்கக்கூடிய நிலையில் பாதீட்டுத் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படாமல், திட்டங்கள் அனைத்தும் இடைநடுவே நிறுத்தப்பட்டதான, ஒருவித ஸ்தம்பித நிலைக்குள் இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தேவையென்கிற நிலைமையில், சிறுபான்மைக் கட்சிகளான மலையகக் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், வடக்கு கிழக்கிலுள்ள கட்சிகளுடன் பேரம் பேசுகின்ற சூழ்நிலை காணப்பட்டபோதும், சிறுபான்மை இனத்துக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம் என்று, இதைப் பயன்படுத்திக் கொள்ளாமல், 19ஆவது திருத்தத்துக்கு எதிராக ஜனாதிபதி செயற்பட்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டைத்தான் முன்வைத்துக் கொண்டிருக்கின்றன.

இப்போதைய நிலையில், இரண்டு தரப்பினருக்கும் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கண்டிப்பாக தேவை.

கட்சித்தாவல்கள் தென்னிலங்கையில் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில், அவர்களது அறிவிப்பு, மேலும் ஒரு புரட்டலைச் செய்தது.

மத்தியில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் என்பது மலையகத்திலுள்ள சம்பள ஏற்றம், காணி பகிர்ந்தளிப்பு இது போல வடக்கு, கிழக்கு இணைப்பு, அதிகாரப் பங்கீடு, கைதிகள் விடுதலை, காணி தொடர்பான பிணக்கு, சர்வதேச ரீதியான விசாரணை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் காலாய் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு, ஸ்திரமான அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டதன் பின்னரே இவற்றுக்கான முடிவுகள் எட்டப்படும்.

‘நல்ல சந்தர்ப்பம்; சரியாக அறுவடை செய்தால், கூடுதலான இலாபத்தை பெறமுடியும்’ என்ற நோக்கத்தில் செயற்படுபவர்களுக்கு மத்தியில், உரிமைகள்தான் கட்டாயமான தேவை என்று சொல்லிக் கொண்டு, வருடக் கணக்கில் நடைபெறும் கேப்பாபிலவுப் போராட்டம், காணாமல் போனோரது போராட்டம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் போன்ற இன்னும் பலவற்றுக்கு தீர்வை எப்போது காணப்போகிறோம்?

இன்னமும் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர், அமைச்சர்களுக்கு ஆசன ஒதுக்கீடு, இதர விடயங்கள் நிறைவு பெறவில்லை.

சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இந்த நிலையில் நவம்பரில் நிறைவேற்றப்பட வேண்டிய வரவு செலவுத்திட்டம் புதிய பிரதமரால் கொண்டுவரப்படுமா, பழைய பிரதமரால் அறிவிக்கப்படுமா என்பது தெரியாமலிருக்கிறது.

அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் இது தொடர்பிலும் அதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் உள்ளதா என்பது பற்றியும் அரச உயர்மட்டத்தில் தீவிர ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன. வெளிநாட்டுத் தூதரகங்கள் உன்னிப்பாக நாட்டின் நிலைமையை அவதானித்துக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் சேவைக்காக அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் அமைச்சுப் பதவி நீடித்திருக்குமா என்று ஒரு பெரும் கேள்வியைக் கேட்டுக் கொள்ள முடியும்.

இதற்கிடையில் தீபாவளி தினத்தன்று மட்டக்களப்பு தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக சந்திப்பில், வியாழேந்திரன் பிரதி அமைச்சர் பதவியைத் துறந்து மீண்டும் தம்முடன் இணையும் பட்சத்தில் சேர்த்துக்கொள்ளத்தயார் என்ற கருத்தொன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த விடயமும் பதவி நீடிப்பில் தாக்கம் செலுத்தும் என்று நம்புவோமாக.
இனமாற்றம், காணி அத்துமீறல்கள், அபிவிருத்தி போதாமை, தொழிலின்மை என நீழும் குற்றச்சாட்டுப் பட்டியலில் போதாமைகளுக்குத் தீர்வும் கிடைக்கத்தான் வேண்டும். இதில் முயலாமைக்கும் முயற்சிக்காமைக்கும் என்ன வேலை?

-அதிரன்

Share.
Leave A Reply