அன்றாடம், எங்களுக்கிடையே நடைபெறும் உரையாடலின் போது, “நாளை என்ன நடக்குமோ என்று யாருக்குத் தெரியும்” என்ற சொல்லாடலைப் பொதுவாக உச்சரிப்பது உண்டு.

அதற்கு, “அவனுக்குத் தான் (கடவுள்) எல்லாம் தெரியும்” என, அடுத்தவர் பதில் அளிப்பதும் உண்டு.

இதே நிலைமையிலேயே, இன்று எமது நாடும் உள்ளது. நாளை (14) என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய, அகிலமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனால், அது கூடப் பொய்த்துப் போய் விட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது.

அந்தளவுக்கு, ஒக்டோபர் 26 மாலை, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் அதிர்வுகள், இன்னமும் அணையவில்லை. இவ்வாறாக, இலங்கையின் அரசியல் களம், நீறுபூத்த நெருப்பாகக் கொதிநிலையில் உள்ளது.

இதற்கிடையில், கொழும்பின் அரசியல் கொதிநிலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பல சிக்கல்களைத் தோற்றுவித்து இருக்கின்றது. அவற்றில், கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், அரசாங்கத்துடன் இணைந்தமை முதன்மையானது.

இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதை, பெரும்பான்மையின அரசாங்கங்கள் மானசீகமாக, உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை; அவ்வாறாக ஏற்றுக் கொண்டாலும், இ(ன)ப்பிரச்சினையை வடக்குடன் மட்டுப்படுத்தவே விரும்புகின்றன.

கிழக்கில் மூவின மக்களும், நட்புறவுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே காட்டிக் கொள்ளவே அரசாங்கம் விரும்புகின்றது.

கிழக்கில் தமிழர் பகுதிகளில், அபிவிருத்திப் பணிகள், பின்னடைவுகளைக் கண்டுள்ளன. அங்குள்ள ஏனைய இனங்கள், தம்மிடம் உள்ள அமைச்சுப் பதவிகளைப் பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் சார்ந்த சமூகங்களுக்குப் பல அபிவிருத்தித் திட்டங்களைச் செய்துகொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், “ஒட்டுமொத்த கிழக்குத் தமிழ் மக்களது நலன் கருதியே, அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டதே அன்றி, எனது குடும்பத்துக்காக அல்ல” என, தனது கட்சித் தாவல் குறித்துப் பல விளக்கங்களை, பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக்கொள்ள வியாழேந்திரன் அளித்துள்ளார்.

வியாழேந்திரன் குறிப்பிட்டது போல, கிழக்கில், தமிழ் மக்களுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. அவரது வாதம், முற்றிலும் நியாயமானவை; நிராகரிக்க முடியாதவை.

அபிவிருத்திப் பணிகள் முக்கியமானவை. கொடும் போரின் தாக்கத்தால் உறவுகளும் இறந்து, பொருளாதாரமும் இறந்து, வாழ்வாதாரம் இல்லாது போய், தற்கொலைகள் வழமையான நிகழ்வுகளாகி விட்ட, மரண பூமியில் வாழ்கின்றது தமிழ்ச் சமூகம்.

ஆனால், ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், உரிமையா, சலுகையா என்ற (வி)வாதம் வரும்போது, சலுகைகளைக் காட்டிலும் ஒருபடி மேலாகவே, உரிமைகளைக் கருதுகிறார்கள். இது, கல்லடியில் வாழும் கந்தசாமிக்கும், பரந்தனில் வாழும் பரமசாமிக்கும் பொருந்தும்.

இவ்வாறான நிலையில், வியாழேந்திரனிடம், தமிழ் மக்கள் சில கேள்விகளை முன்வைக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்:

கடந்த தேர்தல் காலத்தில், மட்டக்களப்பு தமிழ் மக்களிடம், உரிமையை மீட்கவே முதன்மையாக வாக்குக் கேட்டீர்கள். உரிமை வேண்டியே, மக்களும் வாக்களித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவும் செய்யப்பட்டீர்கள். ஆதலால் நீங்கள், அந்த மக்களின் பிரதிநிதி. இந்நிலையில், உங்களது வாக்குறுதியை நம்பி, உங்களுக்கு வாக்களித்த மக்கள், உங்களது க/காட்சி மாற்றத்தை ஏற்பார்களா என, நீங்கள் சிந்தித்தது உண்டா?

தமிழ் மக்களுக்கு, கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன், பிழைகள் செய்கின்றார் எனக் கருதி, தமிழ் மக்களுக்குச் சரிகள் செய்யாத ஜனாதிபதி மைத்திரியுடன் அல்லது பிரதமர் மஹிந்தவுடன் இணைவது எந்தவகையில் நியாயம்?

உங்களை, ‘அவசர வேளையில்’ அன்புடன் அழைத்து, அரை அமைச்சுப் பதவியை வழங்கி, அழகு பார்த்த ஜனாதிபதி, ‘வடக்கு, கிழக்கு இணைப்பு இல்லை; கூட்டாட்சி இல்லை’ என, அடித்துக் கூறி விட்டார்.

பெரும்பான்மையின அரசாங்கங்கள், தமிழர்களின் கோரிக்கைகளைக் காதுகொடுத்துக் கேட்காது விடலாம்; கேட்டும் புறக்கணிக்கலாம்; அவற்றைத் தராதும் விடலாம்.

ஆனால், தமிழ் மக்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே, இருக்க வேண்டும்; கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

70 ஆண்டுகளாகக் கேட்கிறார்கள். ஏனென்றால், இவர்கள் கேட்பது, தமிழ் இனத்தின் இருப்புக்கான கோரிக்கை; அவர்களின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை.

சரி, தற்போது தனக்கு வழங்கப்பட்ட பிரதியமைச்சுப் பதவியை (தற்போது காபந்து அமைச்சு) கொண்டு, கிழக்கில் தமிழ் மக்கள் மீதான, சில அக்கிரமங்களைத் தடுத்து (தற்காலிகமாக) நிறுத்தலாம். சில அபிவிருத்திப் பணிகளை ஆற்றி முடிக்கலாம்.

ஆனால், விலைபோனபின், இனி வரும் ஆபத்துகளை எப்படி எதிர்கொள்வது? முன்னர், வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, புல்லுமலைத் தண்ணீர்த் தொழிற்சாலைக்கான ஆக்கபூர்வமான எதிர்ப்பைக் காட்டியது, ஆரோக்கியமானது, உயிரோட்டமானது, உன்னதமானது.

இதற்கிடையே, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) கல்விப் பிரிவுப் பொறுப்பாளராக, வியாழேந்திரன் செயற்படும் போது, கூட்டமைப்பின் சுருக்கப் பெயரான ‘த.தே.கூ’ என்ற எழுத்துகளுக்கு, ‘தமிழர்களுக்குத் தேவையற்ற கூட்டமைப்பு’ என்று அர்த்தம் கற்பித்திருந்தார் என்றும், பின்னர் அவர் புளொட் அடைப்பின் ஊடாக, கூட்டமைப்பு எம்.பி ஆனார் எனவும், யோகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

உண்மையில், த.தே.கூ, தமிழ் மக்கள் விரும்பும் பாதையில் பயணிக்கிறது என, அனைத்துத் தமிழ் மக்களும் கருதவில்லை. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், அதற்கு ஆதாரம் பகிர்கின்றன.

கூட்டமைப்புக்குள்ளும், உள்ளத்தால் தமிழ்த் தேசியம் பேசுபவர்களும் உள்ளனர்; உதட்டால் தமிழ்த் தேசியம் பேசுபவர்களும் உள்ளனர்.

ஆனால், த.தே.கூ, தமிழ் மக்களுக்குத் தேவையற்ற கூட்டமைப்பு என்றால், தமிழ் மக்களுக்குத் தேவையான கூட்டமைப்பு என்று, எதைக் கூறுவது?

கடந்த ஒன்பது ஆண்டு காலமாக, தமிழ் மக்களுக்குத் தேவையான கூட்டமைப்பை, ஒற்றுமையாகக் கட்டி வளர்க்க, நாம் அனைவரும் தவறி விட்டோமே? இதற்கு அனைத்துத் தமிழ் அரசியல்வாதிகளும்தான் பொறுப்புக் கூற வேண்டியவர்களாவார்.

அரசியல் கைதிகள் விடுதலை, காணிவிடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும், அதற்கு அவர் இணக்கம் தெரிவித்த பின்னரே, அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்ததாகவும், வியாழேந்திரன் தெரிவித்து உள்ளார்.

இதே ஜனாதிபதியிடம் இதே கோரிக்கைகளை, மூன்று ஆண்டுகளாக முன்வைத்தே, த.தே.கூ (வியாழேந்திரன் உட்பட), எதிர்க்கட்சியாகச் சபையில் இருந்தாலும், ஜனாதிபதியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நிபந்தனையற்ற ஆதரவு நல்கினர். நடந்தது என்ன?

வாக்குறுதிகளை வழங்குவது, பெரும்பான்மையினத் தலைவர்களுக்குக் கை வந்த கலை. பின்னர் அவற்றைக் காற்றில் பறக்க விடுவது, அதையும் கடந்த நிலை.

கிழக்குத் தமிழ் மக்களுக்கு, அபிவிருத்தியின் நிறத்தைக் காட்டவே, ஜனாதிபதி மைத்திரியுடனும் மஹிந்தவுடனும் இணைந்ததாக விளக்கம் கூறினாலும், தமது தரப்பு எண்ணிக்கையை அதிகரிக்கவே, ஜனாதிபதியும் பிரதமரும் பா(வே)சக் கரம் நீட்டியதாக, மக்கள் கருதுகின்றனர்.

ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியில், அமைச்சுப் பதவிகளை அலங்கரித்த முஸ்லிம் தலைவர்களால், அம்பாறை, மாயக்கல்லி மலையில், அடாத்தாக புத்தர் சிலை அமைப்பதைத் தடுக்க அல்லது அகற்ற முடிந்ததா?

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், ரணில், மைத்திரி, மஹிந்த, அனைவருமே ஒன்றே. தமிழர்களின் கோரிக்கைகளைச் செவிமடுக்கும் விடயத்தில், இவர்களுக்கிடையில் வேறுபாடுகளைக் கண்டறிவது கடினமானது.

ஒருவர் முதுகில் குத்துவார், அடுத்தவர் நெஞ்சில் குத்துவார்; மற்றையவர் முதுகிலும் நெஞ்சிலும் குத்துவார். எப்படியிருந்தாலும், குத்துவேண்டுவதும் துன்பமும் வலியும், தமிழ் மக்களுக்குத்தான்.

தெற்கில், பெரும்பான்மையினக் கட்சிகள் கதிரையைப் பிடிக்க, பல்வேறு திருகுதாளங்களைப் பல்வேறு வடிவங்களில் செய்கின்றார்கள்.

இதையே அவர்கள் அன்றும் செய்தார்கள்; இன்றும் செய்கிறார்கள். என்றும் செய்வார்கள்.

ஆனால், அவர்கள் எவ்வாறான சண்டைகளைத் தங்களுக்குள் பிடித்துக் கொண்டாலும், தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விடயங்களில், தங்களது பகைமையை மறந்து, ஒன்றுபட்டு முறியடிப்பார்கள். இனத்தால் ஒன்றுபடுவார்கள்.

எழுவான் திசையிலிருந்து தமிழ் மக்களுக்கான மிடுக்கான அரசியல்வாதி எழுகின்றான் என, பலமாக நம்பியிருந்தோம்; நம்பிக்கைகள் வீண் போகின்றன.

ஜாதகத்தில் ஒருவருக்கு, வியாழன் பத்தில் வந்தால், பதியை விட்டுக் கிளப்புமாம். வியாழேந்திரனுக்கும் பதியை (வீட்டுச் சின்னம்) விட்டுக் கிளப்பி விட்டது, அரசியலை விட்டு?

Share.
Leave A Reply