நாட்டின் தற்போதைய அரசியல் குழப்பங்களினால், ஐ.தே.க ஆட்சியைப் பறிகொடுத்திருந்தாலும், பேரிடியாக அமைந்தது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தான்.
பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் இப்போது, கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தக் கட்சியினால் தாக்குப் பிடிக்க முடியும் என்ற சந்தேகமும் தோன்றியிருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றான கட்சியாக இருந்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – இப்போது, மூன்றாவது இடத்துக்காக போட்டியிட வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருக்கிறது.
இதற்கு முக்கியமான காரணம், மஹிந்த ராஜபக் ஷவும், மைத்திரிபால சிறிசேனவும் தான். இவர்கள் இருவரும், இப்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.
பண்டாரநாயக்க காலத்தில் இருந்து, பண்டா குடும்பத்தின் சொத்தாக- அவர்களின் பரம்பரை வழி தலைமையே இருந்து வந்தது, சிறிமாவோ, சந்திரிகா என்று பண்டா குடும்பத்தின் வசமிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை, மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியானதும், பிடுங்கி எடுத்துக் கொண்டார்.
தனக்கு நெருக்கடி கொடுத்து, மஹிந்த ராஜபக் ஷ எவ்வாறு கட்சியின் தலைமையைப் பறித்தெடுத்தார் என்று, பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஊடகப் பேட்டிகளில் சந்திரிகா கண்ணீருடன் கூறியிருந்தார்.
தம்மிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையைப் பறித்தெடுத்த, மஹிந்த ராஜபக் ஷவைப் பழிவாங்குவதற்காக சந்தர்ப்பம் பார்த்திருந்தார் அவர். அதற்கு வாய்ப்பும் வந்தது.
2014இல், திடீரென ஜனாதிபதித் தேர்தலை அறிவித்த மஹிந்தவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தி அதிர்ச்சியைக் கொடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக, மஹிந்த ராஜபக் ஷ தோற்கடிக்கப்பட்டார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும், மீண்டும் காட்சி மாறியது.
சந்திரிகாவிடம் இருந்து எப்படி சுதந்திரக் கட்சியின் தலைமையை மஹிந்த ராஜபக் ஷ பறித்துக் கொண்டாரோ, அதுபோலவே, அவரிடம் இருந்தும், அந்தப் பதவி பறிக்கப்பட்டது. கட்சிக்குள் மஹிந்த ராஜபக் ஷ ஓரம்கட்டப்பட்டார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவருக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் கூட ஏற்பட்டது.
வாய்ப்பு மறுக்கப்பட்டால், தான் தனிக்கட்சியை ஆரம்பித்துப் போட்டியிடுவேன் என்று மிரட்டிய பின்னர் தான், மைத்திரிபால சிறிசேன பணிந்து அவருக்கு இடமளித்தார்.
மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற போதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அந்தச் சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக் ஷவை ஓரம்கட்டுவதற்காக, ஐ.தே.கவுடன் கூட்டணி ஏற்படுத்தி, கூட்டு அரசாங்கத்தை அமைத்தார் மைத்திரிபால சிறிசேன.
அப்போது, மஹிந்த ராஜபக் ஷ தனக்கு ஆதரவான பெரும்பாலான எம்.பிக்களை அழைத்துக் கொண்டு தனி அணியாக இயங்கினார். பின்னர் அந்த அணியை பலப்படுத்தி கூட்டு எதிரணியாக மாற்றினார்.
அதேவேளை, தனது சகோதரர் பஷில் ராஜபக் ஷவைக் கொண்டு, பொதுஜன முன்னணி கட்சியை உருவாக்கினார்.
அந்தக் கட்சியை உள்ளூராட்சித் தேர்தலில், போட்டியிட வைத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மூன்றாமிடத்துக்குத் தள்ள வைத்தார் மஹிந்த.
ஆனாலும் பொதுஜன முன்னணியில் அவர் இணைந்து கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போசகராக இருந்து கொண்டே, சுதந்திரக் கட்சிக்கு எதிராக காய்களை நகர்த்தினார்.
மஹிந்த ராஜபக் ஷ சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறப் போகிறார், பொதுஜன முன்னணியில் இணையப் போகிறார் என்று கடந்த காலங்களில் பலமுறை செய்திகள் வெளியாகின.
ஆனால், அவர் அதனை நிராகரித்து வந்தார்.
தான் ஒருபோதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேற மாட்டேன்.
அதற்குத் துரோகம் செய்யமாட்டேன் என்று பகிரங்கமாக சத்தியம் செய்திருந்தார் மஹிந்த ராஜபக் ஷ .
அதே மஹிந்த ராஜபக் ஷ தான் இப்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி பொதுஜன முன்னணியில் இணைந்திருக்கிறார்.
தான் மாத்திரமன்றி, சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பலரையும் கூடவே அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷ கூட்டு எதிரணியில் இருந்தபோது, மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கூட்டு அரசாங்கத்தின் அமைச்சர் பதவிகளைப் பெற்றவர்களும் கூட இப்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.
இது மைத்திரிபால சிறிசேனவுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், மஹிந்த ராஜபக் ஷவை வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தலாம் என்று அவர் கருதியிருந்தார்.
ஆனால் அதே மஹிந்த ராஜபக் ஷ, தனக்கென, தனது குடும்பத்துக்கென ஒரு கட்சியை உருவாக்கிக் கொண்டு சென்று விட்டார்.
இப்போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றுப் பலகையும், கட்சியின் மீது அதீத விசுவாசமும் கொண்ட சிலரும் தான் எஞ்சியிருக்கிறார்கள்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் தான், ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி கவிழ்க்கவும், மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமிக்கவும் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்தார் என்று அரசியல் வட்டாரங்களில் பொதுவான கருத்து நிலவுகிறது.
ஆனால், மஹிந்த ராஜபக் ஷவின் திடீர் நடவடிக்கையினால், எல்லாமே குழப்பமடைந்தது, பொதுஜன முன்னணி அதன் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் என்று அதன் பொதுச்செயலாளர் அறிவித்த போது, சுதந்திரக் கட்சியின் துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர, சரத் அமுனுகம போன்றவர்கள் கடும் குழப்பமடைந்தார்கள்.
அவர்கள் மொட்டு சின்னத்தில் போட்டியிட தயாராக இருக்கவில்லை. பசில் ராஜபக் ஷவோ மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதையே விரும்பினார்.
நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர், மைத்திரியும் மஹிந்தவும் சுதந்திர பொதுஜன முன்னணி என்ற கூட்டணியில் இருகட்சிகளும் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுச் சின்னத்தில் போட்டியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முடிவு நடைமுறைக்குச் சாத்தியப்பட்டால், அது, இரண்டு கட்சிகளுமே தமது முன்னைய அறிவிப்புகளில் இருந்து பொய்த்து விடும்.
ஏனென்றால் அடுத்த தேர்தல்களில் சுதந்திரக் கட்சி தனது சொந்த கை சின்னத்தில் தான் போட்டியிடும் என்று ஜனாதிபதியும், அந்தக் கட்சியில் இருந்த அமைச்சர்களும் கூறி வந்தனர்.
அதுபோலவே, அடுத்து வரும் தேர்தல்களில் தாமரை மொட்டு சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று மஹிந்த அணியினரும் கூறிவந்தனர். இப்போது இவர்கள் இருவருமே தமது சின்னத்தை கைவிட்டு ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தக் கட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மஹிந்த ராஜபக் ஷவின் பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் முடிவை எடுத்தாலும், சரி, தனித்துப் போட்டியிட முடிவு செய்தாலும் சரி, அது தற்கொலைக்கு ஒப்பானதே.
ஏனென்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட்டால், மூன்றாமிடத்துக்கு தள்ளப்படுவது உறுதி. அதற்கு அப்பால் செல்லும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.
பொதுஜன முன்னணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் போது, சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை மஹிந்த தரப்பினர் திட்டமிட்டு தோற்கடித்து விடுவார்கள் என்ற அச்சம், அந்தக் கட்சியினரிடம் பரவலாகவே உள்ளது.
அதனால் தான், மாவட்டத்துக்கு இரண்டு பேர் தமது கட்சியில் தெரிவு செய்யப்படுவதையும், தேசியப் பட்டியலில் ஏழு பேரை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன பேரத்தை நடத்தியிருக்கிறார்.
ஆக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்படியாவது, பாராளுமன்றத்தில் 40 பேரையாவது உறுப்பினராகப் பெற்று விட வேண்டும் என்று கனவு காணும் நிலையில் தான் இருக்கிறது,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு ஓடிப்போய், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நின்று ஜனாதிபதியாகிய மைத்திரிபால சிறிசேனவும், சுதந்திரக் கட்சிக்கு துரோகம் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்த மஹிந்த ராஜபக் ஷவும், அந்தக் கட்சியை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றனர்.
பண்டாரநாயக்கா காலத்தில், ஐ.தே.கவை எதிர்த்து ஆட்சியைப் பிடித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 1977 தேர்தலில் வெறும் 8 பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் பெற்று படுதோல்வி கண்டது. அந்த படுதோல்வியிலும், சிறிமாவோ பண்டாரநாயக்கா கட்சியை கட்டுக்கோப்புடன் காப்பாற்றி வந்தார்.
1977 இல் ஏற்பட்ட தோல்வியில் இருந்து சுதந்திரக் கட்சியை 17 ஆண்டுகளாக சிறிமாவோ பண்டாரநாயக்காவினால், மீட்க முடியவில்லை.
ஆனாலும் கட்சியை அவர் குலைய விடவில்லை. சந்திரிகா குமாரதுங்க தான், 1994இல் அந்த தோல்வியில் இருந்து சுதந்திரக் கட்சியை மீட்டு வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தார்.
அவர் பிரதமராக பதவியேற்ற, பின்னர் ஜனாதிபதியாகவும் இரண்டு தடவைகள் இருந்தார். அதன் பின்னர், மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையிலும், சுதந்திரக் கட்சிக்கு ஏறுமுகமாகவே இருந்தது.
சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக எதிரணியில் போட்டியிட எடுத்த முடிவு தான் மஹிந்தவையும், அவர் தலைமை தாங்கிய சுதந்திரக் கட்சியையும் மீண்டும் படுகுழிக்குள் தள்ளியது.
அப்போது விழுந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் எப்போது மீண்டெடும் என்று எவராலும் எதிர்வுகூற முடியாது. ஏனென்றால், சுதந்திரக் கட்சியை மீண்டும் பழைய நிலைக்குக் கட்டியெழுப்பும் தலைமைத்துவம் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை.
இலங்கை அரசியலில் பரம்பரை ஆதிக்கம் தொடர்பான விமர்சனங்கள் இருந்து வந்தாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரையில், பண்டா குடும்பத்தின் தலைமையில் இருக்கும் வரையில், அதன் கட்டுக்கோப்பு குலையவில்லை என்பது உண்மை.
அதற்குப் பிந்தைய தலைவர்களாக வந்தவர்கள், கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்களாகவே வரலாறு அடையாளப்படுத்தப் போகிறது.
– சத்திரியன்