*பாராளுமன்றம் கலைக்கப்படும் வரையில் குழப்புவதுதான் திட்டமா?
*ஐ.தே.க. வை பிளவுபடுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா?
*பாராளுமன்றத்தை இனி ஒத்திவைக்கப்போவதில்லை என்ற மைத்திரி
*நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்ற மோதல் முடிவுக்கு வருமா?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐ.தே.மு., த.தே.கூ. ஸ்ரீல.மு.கா. தலைவர்களுக்கும் இடையில் வியாழக்கிழமை இரவு முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில் தற்போதைய அரசியல் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய வகையிலான இணக்கப்பாடு ஒன்று ஏற்படும் போலக் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை பத்திரிகைகள் சிலவும் அவ்வாறுதான் செய்தி வெளியிட்டன.
”முறைப்படி நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றிக்கொண்டு வாருங்கள்.
நான் அதனை ஏற்றுக்கொண்டு அடுத்ததாக இடம்பெற வேண்டிய வேலைகளைச் செய்கிறேன்” என ஜனாதிபதி அப்போது உறுதியளித்தார். அரசியலமைப்பின்படியேதான் செயற்படப்போவதாகவும் அவர் அப்போது கூறினார்.
ஏற்கனவே கொண்டுவரப்பட்ட பிரேரணையின் முதலாவது பகுதியை நீக்குங்கள் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இவற்றையெல்லாம் பார்த்தவர்கள் ஜனாதிபதி முறையாகத்தான் அனைத்தையும் செய்ய முற்படுகின்றார்.
ஒன்றிரண்டு தினங்களில் பழைய நிலைமை வந்துவிடும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றம் கூடிய போதுதான் என்றும் இல்லாதளவுக்கு அங்கு குழப்பங்கள் மகிந்த தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டது.
பிரச்சினைக்கு இப்போதைக்கு முடிவில்லை என்பதையும் அது வெளிப்படுத்தியது.
சபாநாயரின் ஆசனம் ஆக்கிரமிக்கப்பட்டது. பொலிஸ் பாதுகாப்புடன் சபாநாயகர் சபைக்கு வந்தார். பொலிஸார் மீதும் எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
அதற்கு மத்தியிலும் ”முறைப்படி” நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றி ஜனாதிபதிக்கு சபாநாயகர் அனுப்பிவைக்க ஜனாதிபதி திட்டவட்டமாக அதனையும் நிராகரித்தார்.
அதுவும் ”முறைப்படி நிறைவேற்றப்படவில்லை” என ஜனாதிபதி அடித்துக்கூறிவிட்டார்.
ஜனாதிபதியின் இந்த நிராகரிப்பும், ஐ.தே.க. உறுப்பினர்களுடனான சந்திப்பை வெள்ளிக்கிழமை மாலை அவர் இறுதி வேளையில் ரத்துச் செய்தமையும் தெளிவாக ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றது. நிறைவேற்று அதிகாரத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையப் போகின்றது என்பதுதான் அந்தச் செய்தி. இது எதுவரை தொடரும்?
மோதல்கள் தொடருமா?
கடந்த வாரத்தில் 3 தினங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற மோதல்களையடுத்து பாராளுமன்றம் நாளை வரையில் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.
நாளை மாலை 1.30 மணிக்கு பாராளுமன்றம் கூடும் போது என்ன நடைபெறும் என இரு தரப்பினருடனும் நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ள எம்.பி. ஒருவருடன் கேட்டபோது, ”பாராளுமன்றம் கலைக்கப்படும் வரையில் குழப்பங்களை ஏற்படுத்துவதுதான் மகிந்த தரப்பினரின் நோக்கமாக இருக்கும்” என்றே தனக்குத் தோன்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
”தங்களுடைய அரசாங்கம் பதவியில் இருக்கும் நிலையிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட வேண்டும் என மகிந்த தரப்பினர் விரும்புகின்றார்கள்.
டிசெம்பர் 7 இல் பாராளுமன்றக் கலைப்பு குறித்தான நீதிமன்றத் தீர்ப்பு வெளிவரும். இந்தத் தீர்ப்பு தமக்குச் சார்பானதாக வரும் என அவர்கள் நம்புகின்றார்கள்.
அதனால், அந்தத் தீர்ப்பு வரும்வரையில் எந்தவிதமான தீர்மானத்தையும் கொண்டுவரவிடாமல் பாராளுமன்றத்தைக் குழப்பிக்கொண்டிருப்பதுதான் அவர்களுடைய திட்டம்” எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பாராளுமன்றக் கலைப்புக்கு உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை மகிந்த தரப்பு எதிர்பார்க்காதது. அது கடுமையான அதிர்ச்சியை அவர்களுக்குக் கொடுத்திருந்தது.
ஜனவரியில் எப்படியும் தேர்தல் வரும் என்ற நம்பிக்கையுடனேயே அவர்கள் அவசரமாக காய்களை நகர்தினார்கள்.
குறிப்பாக, தமது பாரம்பரிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமைகளைத் துறந்து தாம் உருவாக்கிய பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமைகளைப் பெற்றுக்கொண்டார்கள்.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை அவர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர்களுடைய கனவுத் திட்டமும் கலைக்கப்பட்டது.
பாராளுமன்றக் கலைப்பு இடைநிறுத்தப்பட்டுள்ள காலப்பகுதியைப் பயன்படுத்தி தமது ஆட்சியை மீள அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஐ.தே.க. தலைமை அக்கறையாகவுள்ளது.
பாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தை அவர்கள் நாடிய போது இடைக்காலத் தடை ஒன்றைத்தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள். அதற்குள் தமது ஆட்சியை அமைத்துவிட்டால் பாராளுமன்றம் கலைப்பட்டாலும் பரவாயில்லை என அவர்கள் நினைத்திருக்கலாம். அதாவது தமது ஆட்சியில் தேர்தல் நடைபெறுவதை அவர்கள் விரும்பலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை அதாவது நவம்பர் 9 ஆம் திகதி இரவு 8.00 மணி வரையில் அமைச்சர் பதவிகளை தம்மவர்களுக்கு வழங்கி முடிந்த பின்னர் 8.30 மணிக்கு பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அறிவித்தலில் ஜனாதிபதி கைச்சாத்திட்டார் என்பதை கடந்த வாரம் பார்த்தோம்.
பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான ஆட்களை ”வாங்க” முடியாத நிலையிலேயே அவசரமாக அமைச்சர் பதவிகளைத் தம்மவர்களுக்குக் கொடுத்துவிட்டு பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி, பொதுத் தேர்தல் குறித்த அறிவித்தலையும் வெளியிட்டார்.
தமக்குத் தேவையான வகையில் அரசாங்கத்தை அமைத்து, அமைச்சுக்களையும் பகிந்துகொள்வதன் மூலமாகவே பொதுத் தேர்தலை எதிர்கொள்வதுதான் அவர்களுடைய உபாயமாக இருந்துள்ளது என்பதை இது காட்டியது.
தேர்தலின் போது அரச இயந்திரங்களைப் பயன்படுத்தும் வசதி எப்போதும் பதவியிலிருக்கும் அரசாங்கத்துக்கே கிடைக்கும்.
இந்தப் பின்னணியில்தான் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை அவர்களுக்கு அதிர்ச்சியைக்கொடுத்தது. பாராளுமன்றப் பெரும்பான்மை அவர்களிடமிருந்தால் அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கத் தேவையில்லை.
பாராளுமன்றப் பெரும்பான்மையை ஐ.தே.க. முறைப்படி உறுதிப்படுத்தினால், மகிந்தவின் ஆட்சி கவிழும். அவ்வாறான நிலையில் ஆட்சிப் பொறுப்பை ஐ.தே.க.விடம் ஜனாதிபதி கையளிக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயக மரபு மட்டுமன்றி அரசியலமைப்பிலும் அவ்வாறுதான் சொல்லப்படுகின்றது.
அதனால்தான், ”முறைப்படி” அதனைச் செய்வதைத் தடுப்பதில் மகிந்த தரப்பு உறுதியாகவுள்ளது.
மகிந்த தரப்புக்கு எதிராக 122 உறுப்பினர்கள் உள்ளார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. மகிந்தவுக்கு ஆதரவாக சுமார் 100 பேர்தான் உள்ளனர்.
ஜனாதிபதி தன்னை ஒரு ஜென்ரில்மேனாகக் காட்டிக்கொண்டு ”முறைப்படி பிரேரணையைக் கொண்டுவாருங்கள். நான் அரசியலமைப்பின்படி பாராளுமன்ற மரபின்படி எதனைச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்வேன்” எனக் கூறுகின்றார்.
மறுபுறம் முறைப்படி அதனைச் செய்வதற்கு பாராளுமன்றத்தை அனுமதிக்காமல் தொடர் குழப்பங்களை மகிந்த தரப்பு முன்னெடுக்கின்றது.
மகிந்த தரப்பு இதனை உறுதியாக முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையில்தான், பாராளுமன்றக் கூட்டத் தொடரை தான் இனிமேல் ஒத்திவைக்கப்போவதில்லை என ஜனாதிபதி (ஜென்டில்மென் பொலிட்ரீஷியனாக) அறிவித்திருக்கின்றார்.
அடுத்த கட்டமாக நடக்கப்போவது..
பாராளுன்றக் கலைப்பு குறித்த விசாரணைகள் டிசெம்பர் முதல் வாரத்தில் இடம்பெறவுள்ளது. தீர்ப்பு டிசெம்பர் 7 ஆம் திகதி வெளிவரும்.
இந்தத் தீர்ப்பு தமக்குச் சாதகமாக வெளிவர வேண்டும் என்பதற்காக மேலும் சில இடையீட்டு மனுக்களை மகிந்த தரப்பினர் தாக்கல் செய்திருக்கின்றார்கள். இவற்றின் மூலம் நீதிமன்றத் தீர்ப்பு தமக்கு சாதகமாக அதாவது பாராளுமன்றக் கலைப்பை ஏற்றுக்கொள்வதாக அமையும் என மகிந்த தரப்பு நம்புவதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் நம்புகின்றன.
அதற்கு முன்னதாக பாராளுமன்றம் கூடி சுமூகமாக நடைபெறுவதையோ தீர்மானம் எதனையும் கொண்டுவருவதையோ தடுப்பதுதான் அவர்களுடைய எம்.பி.க்களின் பணியாக இருக்கும் எனவும் இந்த வட்டாரங்கள் சொல்கின்றன.
அதேவேளையில் என்ன ஒரு தீர்மானத்தையும் சபாநாயகர் தன்னிடம் கொண்டுவந்தாலும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஜனாதிபதி அதனை நிராகரித்துவிடுவார் எனவும் இந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
ஏற்கனவே இரு தடவைகள் அதனைச் செய்துவிட்டார். இதனையும் மீறி ஏதாவது பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படாலும், ”ரணிலைப் பிரதமராக ஏற்க முடியாது” என்ற என்ற தன்னுடைய இரண்டாவது துரும்புச் சீட்டையும் ஜனாதிபதி வைத்திருக்கின்றார். இதன்மூலம் தனது எதிர்க் கட்சியில் பிளவை பலவீனத்தை நம்பிக்கையீனத்தை ஏற்படுத்த அவர் முற்படுகின்றார்.
பொதுவாக பாராளுமன்றத்தில் குழப்பங்களை ஏற்படுத்துபவர்களாக எதிர்க்கட்சியினரே இருப்பார்கள்.
இப்போது ஆளும் கட்சி அரசாங்கம் எனச் சொல்லிக்கொள்ளும் மகிந்த தரப்பே குழப்பங்களுக்கும், பாராளுமன்றத்தை முடக்குவதற்கும் காரணமாக இருக்கின்றது.
சர்வதேச ரீதியாக தமக்கு எதிராக வரக் கூடிய அபிப்பிராயங்களையிட்டு எந்த வகையிலும் கவலைப்படுபவர்களாக அவர்கள் இல்லை. கடந்த மூன்று தினங்களாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் இதற்கு ஆதாரம். மகிந்த தரப்பின் இந்த உபாயத்தை எதிர்கொள்வதற்கான உபாயம் எதாவது ஐ.தே.க.விடம் உள்ளதா? அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை.
-சபரி