ஒக்ரோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக் ஷ திடீரெனப் பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, தோன்றியிருந்த இறுக்கமான அரசியல் சூழல் சற்றுத் தளர்வடையத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்த அரசியல் குழப்பங்களில் சம்பந்தப்பட்டுள்ள மூன்று பிரதான தரப்புகளின் நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கொண்டே, இந்த தளர்வு நிலையை உணர முடிகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்போது கிட்டத்தட்ட ‘ பிச்சை வேண்டாம் நாயைப் பிடி ‘ என்ற நிலைக்கு வந்திருப்பதாக தோன்றுகிறது.
அவரால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக் ஷ, கடந்த மூன்று ஆண்டுகளாக மிகப்பெரிய சிரமங்களுக்கு மத்தியில் உருவாக்கிய பெரியதொரு விம்பத்தை உடைத்து விட்டு நிற்பதாக தோன்றுகிறது.
இன்னொரு பக்கம், ரணில் விக்கிரமசிங்க பலவீனமான ஒரு தலைவராக பேசப்பட்டாலும், ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் ஆகிய கவசங்களின் மூலம், – அரசுக்கு வெளியே இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவையும் பெற்றுக்கொண்டு தன்னை பலப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.
இந்த மூன்று நிலைமைகளும், கடந்த ஒக்ரோபர் 26ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட வெள்ளிக்கிழமை திகில் (Friday horror) அரசியல் சூழல், எந்த நேரத்திலும் மாற்றமடையக் கூடும் என்ற சூழலே, இந்தப். பத்தி எழுதப்படும் போது காணப்படுகிறது.
மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக்கப்பட்டதும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும், வெள்ளிக்கிழமையிலேயே நடந்தது என்பதால், ஆங்கில வார இதழ் பத்தி ஒன்று இதனை ‘ வெள்ளிக்கிழமை திகில் ’ என்று குறிப்பிட்டிருந்தது.
அதற்குப் பிந்திய வெள்ளிக்கிழமைகளில், ஏதாவது திடீர் அரசியல் மாற்றங்கள் நிகழக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக உள்ளது.
அப்படியான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வெள்ளிக்கிழமை, முடிவடைய முன்னரே, இந்தப் பத்தியும் வரையப்படுகிறது என்பதால், இது வெளியாகும்போது, இன்னொரு வெள்ளிக்கிழமை திகில் நடந்தேறியிருந்தாலும் ஆச்சரியமில்லை.
மஹிந்த ராஜபக் ஷவினால், பாராளுமன்றப் பெரும்பான்மையை இனிமேல் பெறமுடியாது என்பது உறுதியாகி விட்டது.
ஒன்றுக்கு இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளும், தெரிவுக்குழு மற்றும் பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை தடுக்கும் பிரேரணைகளுமாக- நான்கு வாக்கெடுப்புகளில், ரணில் விக்கிரமசிங்க தனக்குள்ள பெரும்பான்மை பலத்தை நிரூபித்து விட்டார்.
மஹிந்த ராஜபக் ஷ தரப்பு பாராளுமன்றத்துக்கு வந்தால் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், முதலில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதனால், வீணாக கெட்டபெயரை வாங்கிக் கொண்டது.
இப்போது, அந்த முடிவைக் கைவிட்டு, பாராளுமன்றத்தைப் புறக்கணிக்கிறது. இதன்மூலம், தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது மஹிந்த தரப்பு.
இந்தளவுக்குப் பின்னரும், பாராளுமன்றத்தில் இப்போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை தனக்கு இல்லை என்று கூறுகின்ற நிலைக்கு கீழ் இறங்கியிருக்கிறார் மஹிந்தராஜபக் ஷ .
அவரைச் சுற்றி அவரது தரப்பினர் உருவாக்கி வந்த ஒரு பெரியமாய விம்பத்தை, கடந்த 5 வார அரசியல் தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது.
இதனை குமாரவெல்கம போன்ற மஹிந்த ராஜபக் ஷவின் தீவிர விசுவாசிகளே ஒப்புக்கொள்கிறார்கள். அவசரப்பட்டு பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டது அவர் செய்த தவறு என்று புலம்புகிறார்கள். ஜனாதிபதியின் தவறுக்கு இவர் துணை போய்விட்டதாக குற்றம்சாட்டுகிறாகள் .
ஆட்சிமாற்றத்துக்குக் காரணியாக இருந்தவர்களில் ஒருவரான அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷவும் கூட, இப்போது. மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக் ஷவும் தமது தரப்பினரைக் கட்டுப்படுத்த தவறி விட்டதாக கூறி அங்கிருந்து தனியாக கிளம்பி வரும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இதிலிருந்து, ஆட்சியை மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் கட்டமைப்புகள் சிதைந்து விட்டன என்பதையே உணர முடிகிறது.
இதற்கு அப்பால், குமார வெல்கம, விஜேதாச ராஜபக் ஷ போன்றவர்களும் கூட, பெரும்பான்மை பலம் உள்ளவர்களிடம் அரசாங்கத்தை கொடுப்பதே நீதி என்றும் அதனை ஜனாதிபதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
துமிந்த திசநாயக்க போன்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரும் கூட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து, பெரும்பான்மை உள்ளவர்களிடம் ஆட்சியைக் கொடுக்குமாறு கூறியிருக்கின்றனர்.
இது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைவிடப்பட்ட நிலைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார் என்பதையும், மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் தொடர்வதை அவர்களின் தரப்பில் உள்ளவர்களே விரும்பவில்லை என்பதையும் உணர்த்துகிறது.
இந்தநிலையில், பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ரத்துச் செய்யுமாறு, ஜனாதிபதியிடம் அவரது தரப்பில் உள்ளவர்களே கோரியிருக்கிறார்கள்.
ஜனாதிபதி இந்த அறிவிப்பை ரத்துச் செய்தால், உச்சநீதிமன்றத்தில் அதற்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்குகள் வலுவற்றதாகி – தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.
அது அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதில் கணிசமான பங்கை வகிக்கும்.
ஆனால், மஹிந்த ராஜபக் ஷ தரப்போ, இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பை மாத்திரம் தான் நம்பிக் கொண்டிருக்கிறது. அது கைகொடுத்தால், விரைவில் பொதுத்தேர்தலை நடத்தி ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற கனவில் இருக்கிறார்கள்.
அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கொடுக்கப்பட்ட அழுத்தங்களை அடுத்து சற்று இறங்கி வரும் நிலை தென்படத் தொடங்கியிருக்கிறது.
அவரைப் பொறுத்தவரையில், அடுத்தடுத்து உருவாக்கியிருக்கும் சிக்கல்களில் இருந்து தன்னை விடுவித்தால் போதும் என்ற நிலையை நோக்கியே நகரத் தொடங்கியிருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷ தரப்போ, உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ற நூலிழை நம்பிக்கையில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால், ரணில் விக்கிரமசிங்க தரப்பு இந்த அரசியல் குழப்பத்தினால் பலமடைந்திருக்கிறது. உள்நாட்டில் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்து வந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு, சிறுபான்மைக் கட்சிகள் உறுதியான ஆதரவை அளித்திருப்பதும், ஒன்றாக நின்று ஆதரவு கொடுத்துக் கொண்டிருப்பதும், பெரும் பலம்.
அரசியலமைப்புக்கு மாறான வழிமுறையை ஜனாதிபதி கையாள முற்பட்டதும், ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகளும் தான், ஐ.தே.க.வுக்கு சிறுபான்மைக் கட்சிகள் இந்தளவுக்கு உறுதியான ஆதரவைக் கொடுப்பதற்குக் காரணம்.
கூட்டமைப்பு தவிர, ஏனைய சிறுபான்மைக் கட்சிகள் அங்குமிங்கும் மாறுபவை என்றிருந்த ஒரு கண்ணோட்டத்தை உடைத்து, உறுதியான அரசியல் தீர்மானத்தை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்க விடயம்.
அதேவேளை, மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு, ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நெருப்பாற்றில் குதித்திருக்கிறது.
ஒக்ரோபர் மாதம், அரசியல் குழப்பங்கள் உருவானதை அடுத்து, மஹிந்த ராஜபக் ஷவுடன் கூட்டமைப்பு பேரம்பேச வேண்டும் என்று கோரியவர்கள், மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தபோது கடுமையாக சாடியிருந்தனர்.
பேரம் பேசாமல், ஐ.தே.க.வின் பக்கம் சாய்ந்து விட்டது கூட்டமைப்பு என்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
அப்போது, தாங்கள் மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட முறை தவறானது என்றே வாக்களிக்கிறோம் என்றும், ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்றும் கூட்டமைப்பினர் நியாயப்படுத்தினர்.
ஆனால் இப்போது, பகிரங்கமாக ரணில் விக்கிரமசிங்க என்று கூறாவிடினும், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு அளிப்போம் என்று கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றனர்.
இது அரசியலில் திருப்பங்களுக்கும் வழிவகுக்கும் என்று தெரிகிறது.
ஏனென்றால், வெளியில் இருந்து கூட்டமைப்பு கொடுக்கும் ஆதரவின் மூலம், ஐக்கிய தேசிய முன்னணிக்கு, 115 வாக்குகள் பாராளுமன்றத்தில் கிடைத்து விடும்.
இதனை கூட்டமைப்பு ஆரம்பத்தில் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் கூட்டமைப்புக்குள் பலத்த சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கும். அது ஒரு காரணம்.
இன்னொன்று, அரசியல் சூழலின் போக்கை புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு ஆதரவைக் கொடுத்தால், கூட்டமைப்புக்கே பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
மஹிந்த- மைத்திரி தரப்பின் கை ஓங்கும் வாய்ப்புகள் ஏற்பட்டால், கூட்டமைப்பின் ஆதரவும் வீணாகிப் போகும், அவர்களின் பெயரும் கெட்டுப் போகும். அதனால் தான் பொறுத்திருந்து, மைத்திரி- மஹிந்த தரப்பு பலவீனமடையும் சூழலில், சரியான தருணம் பார்த்து கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்திருக்கிறது.
கூட்டமைப்பின் இந்த முடிவு சாதாரணமாக எடுக்கப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுடன் சில நிபந்தனைகளை முன்னிறுத்தி பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
அது என்ன என்பது இன்னமும் வெளிச்சத்துக்கு வராத நிலையில், கூட்டமைப்பு சோரம் போய் விட்டது என்று யாரும் அவசரப்பட்டு குற்றம்சாட்ட முடியாது.
மஹிந்த ராஜபக் ஷவுடன் பேரம் பேசலாம் என்று கூறி விட்டு, ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசப்பட்ட பேரம் என்ன என்பது அறியப்படாமல், அவசரப்பட்டு விமர்சனங்களைச் செய்வது அபத்தம்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் பேரம் பேசி இணங்கிய விடயங்களை கூட்டமைப்பு வெளிப்படுத்த வேண்டியிருக்கும். ஆனால் அதனை அவர்கள் செய்வார்களா என்பது சந்தேகம்.
ஏனென்றால், அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் நடத்தப்பட்ட பேச்சுக்களில் பேசப்பட்டவற்றையும் அவர்கள் பகிரங்கப்படுத்தவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி விடும் என்று காரணம் கூறி கூட்டமைப்பு அதனை தவிர்த்து வந்தது.
அதுபோன்ற நிலை இப்போதைய பேரத்துக்கும் நிகழ்ந்தால் அது கூட்டமைப்புக்கே ஆபத்தையும் பாதிப்பையும் எற்படுத்தும்.
ஏற்கனவே கூட்டமைப்பின் செல்வாக்கு சரிந்து வந்த நிலையில், அண்மைய ஆட்சிக் குழப்பங்கள் தான் சற்று மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, ரணில் விக்கிரமசிங்கவுடனான கூட்டு தொடர்பாக வெளிப்படைத்தன்மையையும், அதன் பெறுபேறான நன்மைகள், தமிழ் மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்துவதிலும் தான் கூட்டமைப்பு எடுத்த இந்த முடிவு சரியா- தவறா என்பதை தமிழ் மக்கள் தீர்மானிப்பதற்கு இட்டுச் செல்லும்.
அதேவேளை, ஏற்கனவே கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்து வரும் தமிழ்த் தரப்புகளும், அரசியல் குழப்பங்களினால் வாய்ப்பை பெற்று அதனை பறிகொடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுபவர்களும், கூட்டமைப்பை இனி முழுவீச்சில் விளாசித் தள்ளுவார்கள்.
அதைவிடச் சிக்கல், கூட்டமைப்புக்குள்ளேயே இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது தான். ஏனென்றால், இந்த முடிவுக்கு கூட்டமைப்புக்குள்ளேயே எதிர்க்கருத்துகள் இருப்பதாக, தெரிகிறது.
சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டா வெறுப்பாக கையெழுத்திட்டிருக்கிறார்கள். அதேவேளை , பங்காளிக் கட்சிகள் தம்முடன் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்றும் முணுமுணுக்கத் தொடங்கியிருக்கின்றன.ர்.
ஆக, தேசிய அரசியல் குழப்பங்களைத் தீர்ப்பதற்காக எடுத்த முடிவினால், உள்வீட்டுக் குழப்பங்களை சமாளிக்க வேண்டிய நிலைக்கு கூட்டமைப்பு உள்ளாகக் கூடும். கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இது ஒரு விஷப்பரீட்சை தான்.
தேசிய அரசியலில் நிலைத்தன்மை ஏற்படுத்தப்படாமல், தமிழர்களின் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணமுடியாது என்பதையும், ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச ஆதரவு ஆகிய தளங்களையும் வைத்துக் கொண்டு, கூட்டமைப்புத் தலைமை தமது முடிவை நியாயப்படுத்தும் வாய்ப்புகளே அதிகம்.
ஆயினும், இந்த முடிவு சரியானது தான் என்று தமிழ் மக்கள் நம்புகின்ற நிலையை ஏற்படுத்தத் தவறினால், கூட்டமைப்புக்கு ‘ கரணம் தப்பினால் மரணம் ‘ என்ற நிலை தான் ஏற்படும்.
– என். கண்ணன்