நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று நேர் முரணான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில் தேசிய அரசாங்கத்தை உருவாக்குகின்ற முயற்சிகள் குறித்தும் பேசப்படுகின்றது. தேர்தல்கள் வரிசையாகத் தெருமுனையில் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த முயற்சியின் மூலம் தேசிய அரசாங்கத்தை உருவாக்கி காலதாமதமின்றி, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண முடியும் என்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முனைந்திருக்கின்றது. நாட்டில் இது ஒரு வேடிக்கையான அரசியல் நிலைமையாகப் பரிணமித்திருக்கின்றது.
நாட்டின் 71 ஆவது சுதந்திர தினத்தின்போது அரச தலைவராகிய ஜனாதிபதி மக்களுக்கு ஆற்றிய உரையானது, அரசாங்கத்தின் பிரகடன உரை என்ற கருத்தியலிலேயே நோக்க வேண்டும்.
சுதந்திரம் என்பது நாடு முழுவதுக்குமான ஒன்று. நாட்டு மக்கள் அனைவருக்கும் அது சொந்தமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது சுதந்திர தினமாகப் பொது நிலையில் வைத்து கணிக்கப்படும். இலங்கையைப் பொறுத்தமட்டில், இந்த 71 ஆவது சுதந்திர தினம் உண்மையிலேயே அனைத்து மக்களுக்கும் உரித்தானதா என்ற வினா விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது.
இது ஒருபக்கமிருக்க, இந்த சுதந்திர தினத்தன்று ஆற்றப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டு பிரகடனத்தை வெளிப்படுத்துகின்ற அந்த உரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய அரசாங்கம் அமைப்பதை அனுமதிக்க மாட்டேன் என்று கர்ச்சித்திருக்கின்றார்.
நிறைவேற்று அதிகார பலத்தைக் கொண்டவராகத் திகழ்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசியத்தை நோக்கிய ஒரு நகர்வில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவர் என்பதை எல்லோரும் அறிவார்கள். அத்தகையதோர் அரசியல் தலைவரிடமிருந்துதான் தேசிய அரசாங்கம் அமைப்பதை அனுமதிக்க முடியாது என்ற கருத்து வெளிப்பட்டிருக்கின்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற கூரிய வாளை ஒத்த, மிகுந்த அரசியல் அதிகார பலத்தோடு திகழ்ந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ என்ற ஓர் இரும்பு அரசியல்வாதியைத் தோற்கடித்து, அவரிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பொது வேட்பாளராகத் தெரிவாகியவரே மைத்திரிபால சிறிசேன.—
அந்த பொது வேட்பாளரை பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்களும் சிறுபான்மையின மக்களாகிய தமிழ்,—– முஸ்லிம் மக்களும் இணைந்து ஆதரித்திருந்தார்கள். அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த ஜனநாயகத்தைப் பாதுகாத்து நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்குத் தடையாக இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்து நல்லாட்சி ஒன்றை நிறுவுவதற்காகவே மக்கள் இந்த ஆதரவை வழங்கியிருந்தார்கள்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்காக, ஜனாதிபதி பதவியில் கொண்டிருந்த நிறைவேற்று அதிகார பலத்தை, அப்பொழுது மஹிந்த ராஜபக் ஷ பகிரங்கமாகவே வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பயன்படுத்தியிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவையே சிறுபான்மை இன மக்களாகிய தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காக ஆயுதந் தரித்த இராணுவத்தினர் பகிரங்கமாகவே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஆணிவேர். இணக்கப்பாட்டையும் விட்டுக்கொடுப்பையும் அடிப்படையாகக் கொண்ட, ஒரு விருப்பத் தேர்வு நடைமுறையாகும். அது சாத்வீகமானது. ஆனால் ஆயுதந்தரித்த இராணுவம் என்பது, அதற்கு நேர்மாறானது. அது, அதிகாரத்தைப் பலத்துடன் பிரயோகிக்கின்ற வன்முறையின் முழு வடிவம்.
அதுவும் முப்பது வருடகால யுத்தம் ஒன்று அதியுச்ச ஆயுதப் பலப்பிரயோகத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னணியில், பல்வேறு பாதிப்புகளுக்கும் உள்ளாகி நசிந்து நொந்து போயிருந்த மக்களை இராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த நேரம் அது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய ஓர் அரசியல் சூழலில்தான் சிறுபான்மை இன மக்கள் சர்வாதிகாரப் போக்கைக் கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்து வாக்களித்திருந்தார்கள். அந்த நேரம் அந்த மக்கள் கொண்டிருந்த துணிவு என்பது அபாரமானது. ஏனெனில் அன்றைய சூழல், அவரை எதிர்த்து வாக்களிப்பது குறித்து, எவருமே கற்பனை செய்வதற்குக் கூட அச்சமடைகின்ற நிலைமையாக இருந்தது.
ஜனநாயகம் காப்பாற்றப்படுகின்றதா?
அத்தகைய சூழலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேனவும் அந்த முயற்சியானது தற்கொலைக்கு ஒப்பானதுஇஇமிகவும் ஆபத்தானது என்பதை நன்கு புரிந்து கொண்டிருந்தார்.
ஆனால் மக்கள் தமது துணிகரமான வாக்களிப்பின் மூலம், அவரை வெற்றி பெறச் செய்திருந்தார்கள். தேர்தல் முடிவுற்றதன் பின்னர், அந்த நிலைமை குறித்து நினைவுகூர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேர்தலில் தான் தோல்வி அடைந்திருந்தால், ஆறடி மண்ணுக்குள் சங்கமமாக்கப்பட்டிருப்பேன் என்று தன் வாயாலேயே பகிரங்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.
அந்தத் தேர்தலில் பதவியில் இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்து பொது வேட்பாளராகக் களமிறங்குவது யார் என்பது, அப்போது நிலவிய உயிராபத்தான நிலைமை காரணமாக இறுதி நேரம் வரையிலும் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
அதிகாரத்தின் அதி உச்சத்தில் எதையும் செய்கின்ற செயல் வல்லமை உடையவராகத் தன்னைக் காட்டியிருந்த ஒருவருக்கு எதிராகத் தேர்தலில் ஒருவர் பொது வேட்பாளராகப் பகிரங்கமாகக் களமிறங்கியிருந்தால், அவர் தேர்தலை எதிர்கொண்டிருக்க மாட்டார் என்ற சந்தேகம் நிலவிய நேரம் அது.
அத்தகைய ஒரு சூழலில் ஜனநாயகத்திற்கு உயிர் கொடுப்பதற்காகப் பொது வேட்பாளராகக் களமிறங்கி வெற்றியீட்டியவரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவர்தான், நாட்டு மக்களுக்கான 71 ஆவது சுதந்திர தின கொள்கைப் பிரகடன உரையில் தேசிய அரசாங்கம் உருவாகுவதை அனுமதிக்க மாட்டேன் என்று கர்ஜனை செய்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் திகதி நாட்டின் அரசாங்கத்தையே புரட்டிப் போடுவதற்கான நடவடிக்கையை அதிரடியாக மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து அத்தகைய எதிர்ப்புதானே வெளிப்படும்?
இருந்தாலும், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டிய பொறுப்பையும், மிக மோசமாக வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதார நிலைமையை சீர்செய்து, நாட்டை நேர்வழியில் கொண்டு செல்ல வேண்டிய கடப்பாட்டையும் கொண்டுள்ள நாட்டின் அரச தலைவராகிய ஜனாதிபதியிடம் இருந்து இத்தகைய நிலைப்பாடு வெளிப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் அந்தப் பிரகடனம் வெளிப்பட்டுவிட்டது. உண்மையில், எந்த அளவுக்கு அரசியல் நிலைமை மோசமாகியிருக்கின்றது என்பதை அது காட்டியிருக்கின்றது. இது கவலைக்குரியது.
அதிகார பலத்தைப் பிரயோகித்து, நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டவிதிகளைப் புறந்தள்ளி, எதையும் செய்ய முடியும் என்பதை அக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டியிருந்தார். ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதற்காகத் தேர்தலில் மக்களுடைய ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த அவர்தான், பதவியில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை திடீரென பதவி நீக்கம் செய்து தங்களது அரசியல் விரோதியாகத் திகழ்ந்த மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமித்திருந்தார். அவர்தான் இப்போது தேசிய அரசாங்கம் உருவாகுவதை அனுமதிக்க மாட்டேன் என்று பிடிவாதமாகக் கருத்துரைத்திருக்கின்றார். இதுதான், ஜனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற நடவடிக்கையோ? இதுதான் ஜனநாயகத்தை நிலைநிறுத்துகின்ற இலட்சணமோ?
எதிர்க்கட்சித் தலைவருடைய நிலைமை
அக்டோபர் 26 ஆம் திகதிய திடீர் அரசியல் மாற்றத்தின்போது திடீர் பிரதமராக நியமனம் பெற்று, 52 நாட்களாக பிரதமருடைய அலுவலகத்தையே எட்டிப்பார்க்காத ஒரு பிரதமராகத் திகழ்ந்து பின்னர், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக் ஷ மறுபுறத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கான வழிவகைகளைக் கொண்டிருக்கும் என்ற கூறப்படுகின்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இடமளிக்கமாட்டேன் என்று தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
மஹிந்த ராஜபக் ஷவின் இந்த நிலைப்பாட்டை சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாட்டிற்காகத் தெரிவிக்கப்பட்ட ஒரு சாதாரண அரசியல் கூற்றாகக் கொள்ள முடியாது. ஏனென்றால், ஊடகங்களின் பிரதானிகள் மற்றும் ஆசிரியர்களுடன் வலிந்து நடத்திய ஒரு சந்திப்பில்இஇ – ஓர் ஊடக மாநாட்டில் இதனை வெளிப்படுத்தியிருக்கின்றார். இது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது முக்கியம்.
பிரதான கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்து 2015 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே தேசிய அரசாங்கம் அல்லது நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படுகின்ற அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அந்த அரசாங்கத்தையே குட்டிச்சுவராக்கி நாட்டில் அரசாங்கமே இல்லாத ஒரு நிலைமையை உருவாக்கிய பெருமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே சேரும். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, 52 நாட்கள் இந்த நிலைமை நீடித்திருந்தது. நீதிமன்றத்தின் தலையீட்டின் பின்னரே இந்த அவல நிலையில் இருந்து நாடு மீட்சி பெற்றது.
இத்தகையதோர் அரசியல் நிலைமையின் பின்னணியில்தான் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி ஏற்றுள்ள மஹிந்த ராஜபக் ஷ புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார். அது சாத்தியமற்றது என்று குறிப்பிட்டிருக்கின்றார். அது மட்டுமல்லாமல், அந்த முயற்சியானது தேர்தலை நோக்கிய ஒரு நடவடிக்கை என்பது அவருடைய நிலைப்பாடு. தேர்தலில் தனக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும். அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அரசியல் தீர்வு காண தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
யுத்தம் முடிவடைந்ததும், அரசியல் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளின்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைக்கவில்லை என்று அவர் கூட்டமைப்பின் மீது குற்றம் சுமத்தியிருக்கின்றார். அரசியல் தீர்வுக்காக 18 சுற்று பேச்சுக்கள் அவருடைய ஆட்சியில் கூட்டமைப்புடன் நடத்தப்பட்டன. அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட சில முடிவுகளை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. வேண்டுமென்றே அவற்றை உதாசீனம் செய்தது.
அத்தகைய ஒரு நிலையிலும் பேச்சுவார்த்தைகளைக் குழப்பி தாங்கள் அதில் இருந்து வெளியேறக் கூடாது. அவ்வாறு வெளியேறினால் அரசியல் தீர்வுக்கான முயற்சியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பே குழப்பியடித்து நாசமாக்கியது என்ற அவப்பெயர் ஏற்படும் என்பதற்காக பொறுமை காத்து அந்தப் பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். ஆனால் அரச தரப்பினர் கூட்டமைப்புத் தலைவர்கள் பொறுமை இழந்து பேச்சுவார்த்தை மேசையை விட்டு எழுந்து செல்ல வேண்டும் என்ற தந்திரோபாய நோக்கத்தில் பேச்சுவார்த்தைகளின் போது நடந்து கொண்டிருந்தார்கள்.
பேச்சுவார்த்தைகளுக்கான நாட்களில் அரச தரப்பினர் வருகை தருவதில் இருந்து பிரச்சினைகளை விவாதித்து முடிவு காண்பது வரையில் ஒத்துழையாத ஒரு போக்கையே கடைப்பிடித்திருந்தனர். ஆனால் கூட்டமைப்பினர் இறுதி வரையில் அந்தப் பேச்சுக்களில் விடாப்பிடியாகக் கலந்துகொண்டிருந்தார்கள். அது மட்டுமல்லாமல் இறுதிச்சுற்றுப் பேச்சுவார்த்தை தினத்தன்று அரச தரப்பினர் வருகை தருவதற்குத் தாமதித்து நேரத்தை இழுத்தடித்திருந்த போதிலும், கூட்டமைப்பினர் அசாத்திய பொறுமையுடன் அவர்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்ததன் பின்பே வெளியேறியிருந்தனர். அத்துடன் அந்தப் பேச்சுவார்த்தையை அரசாங்கமே முடித்துக் கொண்டது.
அந்தப் பேச்சுவார்த்தையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கூடிய கவனம் செலுத்துவதைத் தவிர்த்து, பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று திசை திருப்புகின்ற நடவடிக்கையை மேற்கொண்டு கூட்டமைப்பினர் அந்தக் குழுவில் இடம்பெற வேண்டும் என்று அரச தரப்பினர் வலியுறுத்தினர். அதற்குக் கூட்டமைப்பினர் இணங்கவில்லை. இந்த நிலையில்தான் அந்தப் பேச்சுவார்த்தைகள் இடை நடுவில் பலனேதுமின்றி, முற்றுப் பெற்றிருந்தன.
முழு பூசணிக்காயை மறைக்கும் முயற்சி..?
ஆனால், இப்போது கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக் ஷஇஇ அந்த நேரம் கூட்டமைப்பினர் ஒத்துழைக்காத காரணத்தினாலேயே அரசியல் தீர்வு காண முடியாமல் போனது என்று அப்பட்டமாக உண்மைக்கு மாறான கருத்தை வெளியிட்டிருக்கின்றார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற முயற்சியாகும். அத்துடன், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அவர் கொண்டுள்ள முரண்பாடான நிலைப்பாட்டின் வெளிப்பாடும் ஆகும்.
அதேபோன்றதொரு முரண்பாடான நிலைப்பாட்டையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கொண்டிருக்கின்றார். ஏனெனில், நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்பதும், அதன்மூலம் அரசியல் தீர்வு காண்பது என்பதும் முக்கிய நோக்கமாக இருந்தது. அதனால்தான், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது. இது நிபந்தனைகளற்ற ஆதரவு என்பதைத் தெரிவித்து. கடந்த நான்கு வருடங்களாக அதனைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வந்துள்ளது.
ஆனால் இந்த நான்கு வருடங்களிலும் அரசாங்கம் அரசியல் தீர்வு காண்பதற்கான உளப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
மறுபக்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சாதகமான அரசியல் நிலைமைகள் நிலவியபோது, நல்லாட்சி அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வந்து அல்லது அதற்கு உரிய முறையில் மென்வழியில் அழுத்தத்தைப் பிரயோகித்து, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும். அத்துடன் அரசியல் தீர்வு காண்பதற்குரிய தந்திரோபாய நடவடிக்கைகளையும் கூட்டமைப்பு மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.
ஜனாதிபதியின் பதவிக்காலமும், அரசாங்கத்தின் பதவிக்காலமும் முடிவை நெருங்குகின்ற சந்தர்ப்பத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கும், அரசியல் தீர்வு காண்பதற்கும் மேற்கொள்கின்ற முயற்சிகள் எந்த அளவுக்குப் பலனளிக்க முடியும் என்பது கேள்விக்குரியது.
வலுவான பெரும்பான்மை பலமுள்ள அரசாங்கத்தினால்தான் அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கவும், அதன் ஊடாக அரசியல் தீர்வு காணவும் முடியும். அதற்கு அவசியமான அரசியல் ஸ்திரத்தன்மை இப்போது நாட்டில் இல்லை. அதற்கு அவசியமான பெரும்பான்மை பலமும் அரசாங்கத்திடம் இல்லை. அது மட்டுமல்லாமல், ஐக்கிய தேசிய கட்சியின் தனிக்கட்சி அரசாங்கமே இப்பொது பதவியில் இருக்கின்றது. அதுவும் இறுக்கமான அரசியல் கருத்து நிலைப்பாட்டின் விளைவாக – அரசியல் நோக்க நிலைப்பாட்டின் விளைவாக ஏற்பட்ட ஒரு மோசமான அரசியல் குழப்பத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள ஓர் அரசியல் நிலைமையில் இத்தகைய பாரிய அரசியல் முயற்சி சாத்தியப்பட முடியாது.
இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்திருந்த போது முடியாத காரியம், இரண்டு கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஒரு சூழலில் வெற்றியளிக்கும் என்று கூறுவதற்கில்லை.
அதேநேரம், ஆட்சி அதிகாரத்தை அடுத்ததாக யார் கைப்பற்றுவது என்பதில் தீவிரமான அரசியல் போட்டி மனப்பாங்கும் நிலவுகின்றது. இதற்குத் தூபம் போடும் வகையில் மாகாண சபைக்கான தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என்று அடுத்தடுத்த தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான காலச் சூழலும் காணப்படுகின்றது.
இந்தத் தேர்தல்களில் எந்தத் தேர்தலை முதலில் நடத்தவது என்பதுபற்றிய விவாதம் ஒரு பக்கத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. எந்தத் தேர்தலானாலும்சரி, வரப்போகின்ற தேர்தலில் வெற்றியடைந்துவிட வேண்டும் என்பதற்கான மக்களைக் கவர்ந்திழுப்பதற்கான அரசாங்கத்தின் வழமையான தேர்தல் கால நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக கம்பரெலிய என்ற கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பித்தாகிவிட்டது. இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் 30 கோடி ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ள நடவடிக்கையும் இடம்பெற்றிருக்கின்றது.
.இந்த அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக எப்படியாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை முறியடித்து, எப்படியாவது மக்களுடைய ஆதரவைத் தங்கள் பக்கம் திருப்பிவிட வேண்டும் என்பதில் மஹிந்த ராஜபக்ச ஒரு பக்கத்திலும் மற்ற பக்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். இந்த முயற்சிகளில் இனவாத அரசியல் பிரசாரம் முதன்மை நிலையில் ஏற்கனவே தலைதூக்கி இருப்பதையும் காண முடிகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அபிவிருத்தி அரசியலின் மூலம் மக்களுடைய ஆதரவைத் திரட்ட முயற்சிக்கின்றார். மஹிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் வேறு வேறாக இனவாத அரசியல் பிரசாரம் உள்ளிட்ட சிங்கள மக்களைக் கவர்வதற்கான தேர்தல் பிரசார உத்திகளைக் கையாளத் தொடங்கியிருக்கின்றனர்.
இதற்கிடையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் தேசிய அரசாங்க உருவாக்கம் என்ற போர்வையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீரவு காண்பதற்கான அரசியல் நகர்வை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மேலோட்டமாகக் காட்டி காய் நகர்த்தல்களை மேற்கொண்டிருக்கின்றது.
ஆனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரித்துள்ள பொருளாதார அபிவிருத்தி என்ற தேர்தல் பிரசார வலைக்குள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் ஏற்கனவே சிக்கியிருக்கின்றது. அபிவிருத்தி நடவடிக்கைகளின் மூலம் மக்களுடைய ஆதரவைத் திரட்டிவிட முடியும் என்ற அரசாங்கத்தின் எண்ணப்பாட்டுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இணங்கிச் செல்கின்ற ஒரு போக்கு தெரிகின்றது.
அரசியல் தீர்வை முதன்மைப்படுத்தி உரிமை அரசியலுக்காகக் காய் நகர்த்தினாலும், அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி அரசியல் என்ற வேகமும் கவர்ச்சியும் நிறைந்த காய் நகர்த்தலுக்கு முன்னால் கூட்டமைப்பின் செயற்பாடுகள் வலிமை உடையதாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை.
ஆளாளுக்கொரு நிலைப்பாடு என்று தோன்றினாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் (கொழும்பு மற்றும் மலையகப் பிரதேசங்களில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளையும்கூட சேர்த்துக்கொள்ளலாம்) ஆகிய அனைத்துத் தரப்பினருமே, தேர்தல்களின் மூலம் எவ்வாறு மக்களுடைய செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் தீவிரம் காட்டுகின்ற அரசியல் சூழலே யதார்த்தமான அரசியல் நிலைப்பாடாகும்.
இந்த நிலையில் கொள்கைகளாக அல்லது கோட்பாடுகளாகத் தெரிவிக்கின்ற கருத்துக்கள் ஆழ்ந்து நோக்குபவர்களுக்கு வேடிக்கையான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே மக்கள் காணப்படுகின்றார்கள். எனவே அரசியல் கட்சிகளினதும் அரசியல் தலைவர்களினதும் நடவடிக்கைகள் உண்மையான நாட்டு மக்களின் ஈடேற்றத்திற்கான அரசியல் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றனவா அல்லது மக்களை ஏமாற்றுவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றனவா என்ற கேள்வி இயல்பாகவே தடுக்க முடியாத நிலையில் எழுந்திருக்கின்றது.