கோவையில் தனியார் கல்லூரி பெண் பணியாளரை டிக் டாக்கில் அடிக்கடி வீடியோ வெளியிட்டதாலும், செல்போனில் அதிகநேரம் பேசிக்கொண்டிருந்ததாலும் பணியாற்றும் கல்லூரியிலேயே வைத்து கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். அவரது மனைவி நந்தினி. அதே பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிளம்பராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக மனைவி நந்தினி கடந்த ஒருவருடமாக கணவரை பிரிந்து குளத்து பாளையம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
நந்தினி டிக் டாக்கில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். மேலும், செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசிக் கொண்டும் இருந்துள்ளார்.
இது தொடர்பாக பக்கத்தில் வசித்து வந்த கனகராஜ், மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் கனகராஜ் செல்போன் மூலம் நந்தினியை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார்.
ஆனால், நீண்ட நேரம் நேரமாகியும் செகன்ட் காலில் சென்றுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ் மது அருந்திவிட்டு, நந்தினி வேலை செய்யும் கல்லூரி வளாகத்துக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றியதால், தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினியின் வயிறு உள்ளிட்ட 3 இடங்களில் குத்தியுள்ளார். இதில் நந்தினி ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதை அடுத்து கனகராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அருகில் இருந்தவர்கள் நந்தினியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நந்தினி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் கனகராஜை கைது செய்தனர். மது போதையாலும், சந்தேகத்தாலும் நடந்த கொலையால் 2 குழந்தைகள் தாய், தந்தையை இழந்து நிற்கிறது.