தேசிய புலனாய்வுத்துறைத் தலைவர் பதவியில் இருந்தாலும், தனக்குப் போதிய அதிகாரம் இல்லை என்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் குறித்து தனக்குக் கிடைத்த தகவல் ஒன்றை, பொலிஸ் மா அதிபருக்குத் தெரிவித்ததாகவும், அது குறித்து, கடிதம் மூலம் அறிவித்ததாகவும் கூறிய தேசிய புலனாய்வுத்துறைத் தலைவர் சிரிர மெண்டிஸ், இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தனக்குத் தெரியாது என்றும் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலும் ஆராயப்படவில்லை என்றும் சாட்சியமளித்தார்.
சஹ்ரானின் தாக்குதல்கள் திட்டங்கள் குறித்தோ அல்லது அது தொடர்பாக வந்த முன்னெச்சரிக்கை தொடர்பிலோ, தனக்கு எதுவுமே தெரியாதென சாட்சியமளித்த அவர், புலிகளின் கல்லறைகளைத் துப்பரவு செய்வது தொடர்பிலான பிரச்சினை வவுணதீவில் இருந்தமையால், வவுணதீவில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திசைதிருப்பப்பட்டது என்றார்.
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடத்தப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் இலங்கைக்கு வந்திருந்தார்.
அவர், ஏப்ரல் 8ஆம் திகதியன்று இலங்கையில் இருந்தார். புலனாய்வுத் துறையினரின் அறிக்கை, மறுநாளே (ஏப்ரல் 9) எனது கைக்குக் கிடைத்தது என்றார்.
மாவனல்ல சம்பவம் குறித்தும் நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டோம். ஆனால், அந்த விசாரணைகளின் பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகள் அமுலாக்கப்பட்டதா என்பது தொடர்பில் பார்க்கவேண்டும் எனத் தெரிவித்த அவர், புலிகளின் தாக்குதலுக்குப் பின்னர், பெருமளவிலான வெடிபொருள்கள் வனாத்தவில்லுவில் கைப்பற்றப்பட்டன என்றார்.
தனது பெயருக்குக் கிடைத்த புலனாய்வு தகவல்கள் அடங்கிய கடிதத்தை, “புலனாய்வுச் சொல்லை” குறிப்பிட்டு அனுப்பியிருந்தேன்.
அதற்குப் பின்னர் என்ன நடந்ததென தெரியவில்லை. அவை தொடர்பில், தேசியப் பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று, இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து, நாடாளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான நாடாளுமன்ற விஷேட குழுவின் முதலாவது அமர்வு, நேற்று (29) ஆரம்பமானது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சாந்த கோட்டாகொட, முதலாவதாக வாக்குமூலமளித்தார். அதன்பின்னர், தேசிய புலனாய்வுத் துறைத் தலைவர் சிரிர மெண்டிஸ் வாக்குமூலமளித்தார்.
பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிரி தலைமையில் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் முதலாவது அமர்வு, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், நேற்று (29) ஆரம்பமானது. தெரிவுக்குழு சாட்சியங்களை அறிக்கையிடுவதற்கு, ஊடகங்களுக்கும் முதன்முறையாக அனுமதியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தெரிவுக்குழுவின் உறுப்பினர்களான அமைச்சர் ராஜித சேனாரத்னவும் சுமந்திரன் எம்.பியும், வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதால், இதில் கலந்துக்கொள்ளவில்லை என்பதுடன், பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி வருகை தராததன் காரணமாக, ஜயம்பதி விக்ரமரத்ன, குழுவுக்குத் தலைமைத் தாங்கினார்.
இந்தத் தெரிவுக்குழுவில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லையென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களும் தெரிவித்திருந்தனர். அதேபோல பங்கேற்கவில்லை.
தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், ஊடகவியலாளர்களுக்கான விசேட தெளிவுப்படுத்தல் ஒன்றும் தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளை அறிக்கையிடுவதில் உள்ள கட்டுப்பாடு தொடர்பிலும் அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய, காலை 9.25க்கு ஆரம்பிக்கப்பட்ட முதலாவது சாட்சியாளராக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சாந்த கோட்டேகொடவிடம், சத்தியப்பிரமாணம் பெற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
கேள்வி: உங்களது பதவி, அதன் கடமைகள், தற்போதைய உங்கள் தொழில் பற்றி முதலில் அறிவியுங்கள்.
1970ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து 36 வருடங்கள் கடமையாற்றி, 17ஆவது இராணுவத் தளபதியாகப் பதவி வகித்துள்ளதுடன்.2005ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஓய்வுப்பெற்றேன். அதன் பின்னர் பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவராகவும், தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவராகவும் கடமையாற்றியுள்ளேன். இப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டேன்.
கேள்வி: பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான தங்கள் கடமைகள் என்ன?
நாட்டின் சகல பாதுகாப்பு பிரிவுகள் தொடர்பில் பொறுப்புடன் அவதானம் செலுத்துவது. முப்படை, பொலிஸ், பொலிஸ் விசேட படை என்பன பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படுகின்றன
கேள்வி: பாதுகாப்பு தொடர்பான விவரங்களை யாருக்கு அறிக்கையிடுவீர்கள்?
ஜனாதிபதிக்கே அறிக்கையிடுவேன்.
கேள்வி: தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் யாரெல்லாம் கலந்துக்கொள்வார்கள்?
பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர், புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்வர்.
கேள்வி: சட்டம், ஒழுங்குகள் அமைச்சர், பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் கலந்துக்கொள்வாரா?
இப்போது சட்டம் ஒழுங்குகள் அமைச்சர் ஒருவர் இல்லை. முன்னர் அழைக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை.
கேள்வி: பாதுகாப்பு சபைக் கூட்டம் எப்போது கூடும்?
எனக்குத் தெரிந்தவரை வாரத்துக்கு ஒரு தடவை கூட வேண்டும். ஆனால், நான் பதவியேற்றதன் பின்னர், 2 அல்லது 3 தடவைகள் மாத்திரமே புதன் கிழமைகளில் பாதுகாப்புச் சபை கூடியது.
கேள்வி: இதன்போது எதைப்பற்றி பேசுவீர்கள்?
நாட்டின் பாதுகாப்பு, சகல பிரிவுகளினதும் புலனாய்வு அறிக்கைகள் தொடர்பில் பேசுவோம்.
கேள்வி: பாதுகாப்பு சபையின் கூட்டங்களுக்கு கடந்த 1 வருடத்தில் கலந்துக்கொண்டவர்கள் தொடர்பான அறிக்கையைத் தரமுடியுமா?
நான் முன்வைக்கிறேன்.
கேள்வி: நீங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் பாதுகாப்பு சபை உரிய முறையில் கூடியதா?
கூடியுள்ளது. சரியான முறையில் கூடியுள்ளதா எனக் கூறமுடியாது. நான் அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கிறேன்.
கேள்வி: நீங்கள் கூறினீர்கள், பிரதமர் பாதுகாப்பு சபைக்கு வருவாரென, அப்படியாயின் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட புதிய பிரதமர், பாதுகாப்பு சபை கூட்டத்துக்கு வருகைத் தந்தாரா?
அது தொடர்பில் தனக்கு சரியாக தெரியவில்லை.
கேள்வி: பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு சபைக்கு வருவது அவசியமல்லாவா? அவர் வந்தாரா?
ஆம்! வந்தார்.
கேள்வி: கிடைக்கபெறும் புலனாய்வு தகவல்களைப் பரிமாறும் நிறுவனங்கள் எத்தனை உள்ளன.
பொலிஸ், சீ.ஐ.டி, டி.ஐ.டி, இராணுவப் புலனாய்வு பிரிவு, கடற்படை புலனாய்வு, விமானப்படை புலனாய்வு உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.
கேள்வி: இவர்களிடையே தகவல்களைப் பரிமாறும் முறை எவ்வாறு உள்ளது. முறையிருக்கிறதா?
முறையொன்று இருந்தது. எனினும் தகவல் பரிமாறும் நிறுவனங்கள் ஓர் அமைப்பாகச் செயற்பட வேண்டும்.எனவே இந்த விடயத்தில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம். புலனாய்வுப் பிரிவை பலப்படுத்த வேண்டும்.
கேள்வி: புலனாய்வு அதிகாரிகளின் தகவல்கள் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற பட்டியல் இருக்கும். இப்போது அது பின்பற்றப்படுகின்றதா?
அதை ஆராய்ந்து கூறுகிறேன்.
கேள்வி: நீங்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர், இடம்பெற்ற சகல பாதுகாப்பு சபை கூட்டங்களிலும் ஜனாதிபதி கலந்துக்கொண்டாரா?
இல்லை. அவர் வெளிநாடு சென்றிருக்கும் சந்தர்ப்பங்களில் பிரதமர் தலைமையில் பாதுகாப்பு சபை கூடியது.
கேள்வி: ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர் சகல பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கும் பிரதமர் வருகை தந்தாரா?
இல்லை. சில கூட்டங்களுக்கு வந்தார். சில கூட்டங்களுக்கு வருகைத் தரவில்லை.
கேள்வி: இலங்கையின் பாதுகாப்பு நிலைவரத்தின் தற்போதைய நிலை என்ன?
இப்போதைய பாதுகாப்பு 99 சதவீதம் உள்ளது. ஆனால் இது குறுகிய பாதுகாப்பு செயற்பாடு, இதை 2, 3 மாதங்களில் முடித்து விடமுடியாது. பாதுகாப்பு தொடர்பில் நீண்டகால திட்டங்கள் அவசியம். பாதுகாப்பு விடயத்தில் தொழில்நுட்ப ரீதியில் பலப்படுத்துவதுடன் எல்லைப் பாதுகாப்பையும் அதிகரிக்க வேண்டும்.
கேள்வி: கைது செய்யப்படுவர்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்
13,000 விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதைப் போல், இவர்களுக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவர்.
கேள்வி: தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான தகவல் எவ்வளவு காலத்துக்கு முன்னர் கிடைத்துள்ளது.
எனக்குத் தெரிந்தவரை 2014ஆம் ஆண்டு தகவல் கிடைத்திருந்தது.
இந்த விசாரணைகளுக்காக இரண்டாவது சாட்சியாளராக தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் அழைக்கப்பட்டிருந்தார்.
கேள்வி: உங்களது தற்போதைய பதவி, கடமைகள், முன்னைய பதவி குறித்து அறிவிக்கவும்.
1972ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி உப பொலிஸ் பரிசோதகராக இலங்கை பொலிஸில் இணைந்துக்கொண்டதுடன், வவுனியா, நெல்லியடி, முருங்கன், யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றியுள்ளதுடன் 1978ஆம் ஆண்டு குற்ற விசாரணை திணைக்களத்தில் இணைந்துக்கொண்டு, 2008ஆம் ஆண்டு வரை குற்றவிசாரணைப் பிரிவில் கடமையாற்றி 2011ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதுடன், பெப்ரவரி 2015 ஜூன் 28 ஆம் திகதி தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக கடமையாற்றி வருகின்றேன்.
கேள்வி: குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் போது உங்கள் கடமைகள் என்ன?
அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறும். இதில் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி, SIS, குற்றப்புலனாய்வு பிரிவின் சார்பில் நான், விசேட பொறுப்பு அதிகாரிகள், இராணுவப் புலனாய்வு பிரதானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன்போது நாட்டின் புலனாய்வு தொடர்பான தகவல்கள் பரிமாறப்பட்டன.
கேள்வி: நவம்பர் 23ஆம் திகதிக்கு பின்னர் பாதுகாப்பு சபை கூடப்பட்டதா, இதில் அப்போதைய பிரதமர் கலந்துக்கொண்டாரா?
ஒரு தடவை கூடப்பட்டது.இதில் அப்போதைய புதிய பிரதமர் கலந்துக்கொண்டாரா என்பது நினைவில் இல்லை.
கேள்வி: சாஹரான் தொடர்பில் எப்போது அறியக் கிடைத்தது.
2017ஆம் ஆண்டு சாஹரான் இனவாத ரீதியாக செயற்படுவதாகத் தகவல்கள் கிடைத்தன. இது தொடர்பான விசாரணைகளை முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா முன்னெடுத்திருந்தார்.
கலீல் என்ற மௌலவி ஏற்கனவே இது தொடர்பாக முறையிட்டுள்ளதாகவும் எனவே குறித்த மௌலவி உள்ளிட்ட இந்த தீவிரவாத குழு தொடர்பில் முறைபாடு வழங்கிய அனைவரையும் இந்த விசாரணைக்கு அழைக்க வேண்டும் என இதன்போது தெரிவுக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
கேள்வி: 2014ஆம் ஆண்டு தொடக்கம் ஐ.எஸ். அமைப்பினரின் தாக்குதல் எச்சரிக்கை இருப்பதாக பிரதமர் நாடாளுமன்றில் அறிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அப்போது கலந்துரையாடப்பட்டதா?
நான் 2015ஆம் ஆண்டே நியமிக்கப்பட்டேன். அதற்கு முன்னர் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரியாது. 6ஆம் திகதி புலனாய்வு பிரிவின் கடிதம் எனக்கு கிடைத்தது. அது தொடர்பில் 7ஆம் திகதி அது தொடர்பில் அறிவித்தேன்.
கேள்வி: இறுதியாக நடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் எது தொடர்பில் பேசப்பட்டது. ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் பாதுகாப்பு சபை எப்போது கூடியது?
இறுதியாக ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடியது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 4ஆம் திகதி இந்திய புலனாய்வு பிரிவினர் தகவல் வழங்கியுள்ளதாக, ஆனால் எனக்கு 8ஆம் திகதியே இது தொடர்பான கடிதம் கிடைத்தது. எங்கிருந்து வந்ததென்று தெரியாது. எனினும் இது தகவலாகவே வந்தது. அன்று மாலை பாதுகாப்பின் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தேன்.
கேள்வி: நீங்கள் கூறும் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்தக் கடிதம் தொடர்பில் அறிந்திருந்தாரா?
இல்லை அறிந்திருக்கவில்லை.
கேள்வி: ஏப்ரல் 9ஆம் திகதி இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்தக் கடிதம் முக்கியதுவம் பெறவில்லையா?
இல்லை. எவ்விதத்திலும் கலந்துரையாடப்படவில்லை. இந்த விசேட கூட்டத்தில் இந்தக் கடிதத்தின் முக்கியதுவம் தொடர்பில் EYES ONLY என எழுதி இந்தக் கடிதத்தை பொலிஸ்மா அதிபருக்கு வழங்குமாறு பொலிஸ் தலைமையகத்தில் கையளித்தேன்.
கேள்வி: 21ஆம் திகதி வரை இந்தக் கடிதத்தின் பாரதூரமான நிலைமைக் குறித்து பொலிஸ்மா அதிபர் கதைத்தாரா?
இல்லை கதைக்கவில்லை.
இந்தக் கடிதம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளருக்கு நீங்கள் தெரிவித்த பின்னர் அவர் இது தொடர்பில் கலந்துரையாடியிருக்க வேண்டும். இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக பொலிஸ்மா அதிபரை தண்டிக்க கூடாது.
கேள்வி: பாதுகாப்பு சபையில் இந்தக் கடிதம் குறித்து கலந்துரையாடப்படவேயில்லையா?
இல்லை கலந்துரையாடப்படவில்லை
கேள்வி: கடந்த வாரம் பாதுகாப்பு சபை எந்தத் திகதிகளில் கூடப்பட்டது?
இந்த வருடம் ஜனவரி- 5, பெப்ரவரி-19, மார்ச்- 5, மே-22, ஜூலை-10, டிசெம்பர்- 3, நவம்பர்-13, ஒக்டோபர் 23ஆம் திகதி கூடியது.
இதேவேளை அடுத்த தெரிவுக்குழு விசாரணை ஜூன் மாதம் 4ஆம் திகதி மாலை 3மணி தொடக்கம் இரவு 9 மணிவரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.