சுகா­தார அமைச்­ச­ராக இருக்கும் ராஜித சேனா­ரத்­னவின் நிய­ம­னங்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றமே தீர்ப்பு வழங்­கி­யுள்ள நிலையில் அவர் நிய­மித்­துள்ள குழு­வி­ட­மி­ருந்து உண்­மை­யையும் நியா­யத்­தையும் எதிர்­பார்க்க முடி­யாத அக்­கு­ழுவின் விசா­ர­ணை­களை மக்­களும் நம்­பப்­போ­வ­தில்லை.

ஆகவே, ஜனா­தி­பதி உட­ன­டி­யாக அமைச்சர் ராஜி­தவை அப்­ப­த­வி­யி­லி­ருந்து நீக்கி சுயா­தீன விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என அரச மருத்­துவ அதி­கா­ரிகள் சங்­கத்தின் செய­லாளர் வைத்­தியர் ஹரித அளுத்கே வீர­கே­ச­ரிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு,

 

கேள்வி:- குரு­ணா­கலில் கைது செய்­யப்­பட்­டுள்ள வைத்­தியர் மீது சொத்­துக்­கு­விப்­புக்கு அப்பால் கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொண்­டமை தொடர்­பிலும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் அவ்­வி­டயம் குறித்து எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளீர்கள்?

பதில்:- குறித்த வைத்­தியர் தொடர்பில் பத்­தி­ரி­கை­களில் செய்­திகள் வெளி­யா­வ­தற்கு முன்­ன­தாக எந்­த ­வொரு தாய்­மா­ரி­டத்­தி­லி­ருந்தும் எமக்கு முறைப்­பா­டுகள் கிடைத்­தி­ருக்­க­வில்லை.

தாய்­மாரின் அனு­ம­தி­யின்றி 4ஆயிரம் பேருக்கு கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொண்­ட­தாக சிங்­கள பத்­தி­ரி­கை­யொன்று, பிர­தான தலைப்­புச்­செய்­தி­யாக வெளி­யிட்­டி­ருந்­தது.

அத்­துடன் இதில் இன­ரீ­தி­யான விட­யமும் உள்­ள­டங்­கி­யி­ருந்­தது. அவ்­வாறு பார்க்­கையில், மிகப் பாரிய குற்றம் தொடர்­பான தக­வ­லொன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றது என்­பதை உணர்ந்து உட­ன­டி­யாக இந்த விடயம் தொடர்பில் முழு­மை­யான சுயா­தீன விசா­ர­ணை­யொன்றை நடத்­து­வ­தற்­காக எமது சங்­கத்தின் உப­த­லைவர் தலை­மையில் குழு­வொன்றை நிய­மித்­துள்ளோம்.

அத்­துடன், குறித்த செய்­தியை வெளி­யிட்ட பத்­தி­ரிகை ஆசி­ரி­ய­ரு­டனும் இவ்­வி­டயம் தொடர்­பி­லான தக­வல்­களை வழங்­கு­மாறு எழுத்து மூல­மாக கோரி­யி­ருந்தோம்.

இருப்­பினும் அந்த விடயம் சம்­பந்­த­மான குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க ஆரம்­பித்­துள்­ளதால் எவ்­வி­த­மான தக­வல்­க­ளையும் மூன்றாம் தரப்­பிற்கு பகிர்ந்து கொள்ள முடி­யாது என்று கூறினார்.

அதே­நே­ரத்தில், பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர், குறித்த வைத்­தியர் மீது கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான முறைப்­பா­டுகள் எவையும் கிடைக்­க­வில்லை.

ஆனால், வரு­மா­னத்­திற்கு அதி­க­மான சொத்­துக்­களை குவித்­தமை தொடர்பில் முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­மையால் அவரை கைது செய்­துள்­ள­தா­கவும் அறி­வித்தார்.

கேள்வி:- உங்­களால் அமைக்­கப்­பட்ட குழுவின் விசா­ர­ணைகள் எந்த நிலை­மையில் உள்­ளன?

பதில்:- எம்மால் நிய­மிக்­கப்­பட்ட குழு­வா­னது, குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லையில் உள்ள எமது கிளைச்­சங்­கத்தின் ஊடாக முழு­மை­யான தக­வல்­களைப் பெற்று வரு­கின்­றது.

அத்­த­க­வல்­களின் அடிப்­ப­டையில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. விசே­ட­மாக தாய்­மார்­களால் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை விட­யத்­திற்கே முன்­னு­ரிமை வழங்கி விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

வெகு விரைவில் அவற்றை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு தயா­ராகி வரு­கின்றோம். மேலும் அவர் 2015ஆம் ஆண்டு தேர்­தலில் கள­மி­றங்கும் வரையில் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் உறுப்­பி­ன­ரா­கவும் அங்­கத்­து­வத்­தினைக் கொண்­டி­ருந்தார். இருப்­பினும் அதன் பின்­ன­ரான நிலையில் அவர் அங்­கத்­து­வத்­தினை மீளப்­பு­துப்­பித்­துக்­கொள்­ள­வில்லை என்­பதும் அறி­யப்­பட்­டுள்­ளது.

கேள்வி:- மகப்­பேற்­றின்­போதோ அல்­லது பரி­சோ­த­னை­களின் போதோ கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்­சை­களை மேற்­கொள்­வ­தற்கு வாய்ப்­புக்கள் உள்­ள­னவா?  

பதில்:- இதில் இரு­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. விசேட சத்­தி­ர­சி­கிச்சை வைத்­திய நிபுணர் முன்­னி­லையில் குழு­வொன்­றா­கவே

சத்­தி­ர­சி­கிச்­சைகள் இடம்­பெ­று­வதால் இர­க­சி­ய­மாக கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்­சை­களை மேற்­கொள்ள முடி­யாது என்று ஒரு­த­ரப்­பினர் வாதத்­தினை முன்­வைக்­கின்­றார்கள்.

மகப்­பேற்­றுத்­து­றையில் அனு­பவம் வாய்ந்த விசேட வைத்­திய நிபு­ணர்­களில் சிலர் இர­க­சி­ய­மாக சத்­தி­ர­சி­கிச்­சை­களை செய்ய முடியும் என்றும் வாதங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். ஆகவே இந்த விட­யங்கள் தொடர்பில் நாம் ஆழ­மான கவனம் செலுத்த தலைப்­பட்­டி­ருக்­கின்றோம்.

கேள்வி:- உங்­க­ளு­டைய சங்­கத்­தினால் குறித்த வைத்­தி­யரின் மீள்­நி­ய­மனம் மற்றும் இட­மாற்றம் தொடர்­பாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில்:- ஆம், இந்த வைத்­தியர் தம்­புள்ளை வைத்­தி­ய­சா­லையில் பணி­யாற்­றிய காலத்தில் தான் 2015ஆம் ஆண்டு பொதுத்­தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தற்­காக அரச சேவை­யி­லி­ருந்து இரா­ஜி­நாமா செய்­துள்ளார்.

அத்­தேர்­தலில் அவர் தோல்வி அடைந்­ததன் கார­ண­மாக, மீண்டும் அரச சேவையில் இணை­வ­தற்­கான முறை­யீட்­டினை செய்­துள்ளார்.

அவ்­வாறு முறை­யீடு செய்­கின்­ற­போது பொதுச்­சேவை ஆணைக்­கு­ழுவின் அனு­ம­தி­யுடன் தான் சேவையில் மீண்டும் இணைய முடியும். அவ்­வாறு சேவையில் இணை­வ­தற்­கான அனு­மதி கிடைத்­தாலும், மீண்டும் புதிய நிய­ம­னத்­திற்­கான நடை­மு­றை­க­ளையே பின்­பற்ற வேண்டும்.

அதா­வது கஷ்­டப்­பி­ர­தே­சங்­களில் குறிப்­பிட்­ட­காலம் பணி­யாற்­றிய பின்­னரே இட­மாற்­றத்­திற்­கான படி­மு­றை­களின் பிர­காரம் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்ட இட­மாற்­றத்­தினை பெற முடியும்.

ஆனால், இந்த செயற்­பா­டுகள் எவையும் பின்­பற்­றப்­ப­டாது, அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் மற்றும் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன ஆகி­யோரின் மூலம் அமைச்­ச­ரவை பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­பட்டு அவர் ஏற்­க­னவே பணி­யாற்­றிய இடத்­திற்­கான நிய­ம­னத்­தினை மீண்டும் பெற்­றுக்­கொள்­கின்றார்.

சொற்­ப­ கா­லங்­களில் அமைச்சர் ராஜித மீண்டும் ஒரு அமைச்­ச­ரவை பத்­தி­ரத்­தினை சமர்ப்­பித்து அந்த வைத்­தி­ய­ருக்கு குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லையில் நிய­ம­னத்­தினை வழங்­கி­யுள்ளார்.

இவ்­வா­றான சம்­பி­ர­தாயம் ஒன்று எங்­குமே இல்லை. சுகா­தார அமைச்சின், திணைக்­க­ளங்­களின் விதி­மு­றை­களை முற்­றாக மீறும் செயற்­பா­டொன்­றாகும்.

கேள்வி:- அமைச்சு மட்­டத்­திலும் விசா­ரணைக் குழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அக்­கு­ழுவும் விசா­ரணை அறிக்­கை­யொன்றை தயா­ரிக்­க­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- குரு­ணாகல் வைத்­தியர் தவ­று­களை இழைத்­தாரா இல்­லையா என்­பது உறு­தி­யா­காத நிலையில் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, ஊட­க­வி­ய­லா­ளர்­களைச் சந்­தித்­தி­ருந்­த­போது, முழு­மை­யாக அவ்­வைத்­தி­யரை பாது­காக்கும் செயற்­பாட்­டி­னையே மேற்­கொண்­டி­ருந்தார்.

இதன்மூலம் அவர் வைத்­தி­ய­ருக்கு சார்­பாக செயற்­ப­டு­கின்றார் என்ற பிம்­பமே மக்கள் மத்­தியில் சென்­ற­டைந்­துள்­ளது. அத்­துடன் அமைச்சர் வெளி­யிட்ட கருத்­துக்கள் எரிந்­து­கொண்­டி­ருக்கும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முறு­கல்­களை மேலும்  அதி­க­ரிப்­ப­தா­கவே இருக்­கின்­றது.

கேள்வி:- பேரா­தெ­னிய வைத்­தி­ய­சா­லை­யிலும் கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்­சைகள் இடம்­பெற்­றுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.பி.திஸா­நா­யக்க குறிப்­பிட்­டுள்ள நிலையில் அது­கு­றித்த முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­னவா?

பதில்:- இது­வ­ரையில் எமக்கு எவ்­வி­த­மான முறைப்­பா­டு­களும் கிடைக்­க­வில்லை. மிகவும் பார­தூ­ர­மான விட­ய­மொன்­றா­க­வுள்ள இந்தக் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து ஜனா­தி­ப­தி­யினால் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு விசா­ரணை முன்­னெ­டுப்­பதே தீர்­வுக்­கான ஒரே­வ­ழி­யாகும்.

இல்­லையேல், இவ்­வாறு பல்­வேறு நபர்கள் அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் முன்­வைக்க முடியும். அது­மட்­டு­மன்றி வைத்­தி­யர்கள் சம்­பந்­த­மாக பொது­மக்கள் மத்­தியில் சந்­தே­கங்கள் அதி­க­ரிக்கும். விசே­ட­மாக முஸ்லிம் வைத்­தி­யர்கள் குறித்து மாறு­பட்ட மன­நிலை ஏற்­படும். சத்­தி­ர­சி­கிச்சை தொடர்­பிலும் பொதுமக்கள் மத்தியில் பாரிய அச்சம் ஏற்படும் ஆபத்துள்ளது.

அதேநேரம், குருணாகல் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் ஊடாக குறித்த வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அண்மையில் ஓளடத அதிகாரிகளை அமைச்சர் ராஜித நியமித்தமை தொடர்பான வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றினால் அது சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜித 1990களில் ஏற்கனவே அமைச்சுப்பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் இந்த தீர்ப்பு உட்பட அவர் சுகாதார அமைச்சராக பதவியில் இருக்கும் காலத்தில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. ஆகவே அவருடைய செயற்பாடுகள் அப்பதவியிலிருந்து அவரை நீக்குவதற்கான அடிப்படைகளைக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், அமைச்சர் ராஜித தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் இனங்களுக்கிடையிலான உறவு ஆகிய உணர்வு ரீதியான விடயங்களில் விளையாடுகின்றார். இத்தகைய ஒருவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்கி கைது செய்ய வேண்டும். இதனை ஜனாதிபதியிடத்தில் கோரவுள்ளோம்.

 

Share.
Leave A Reply