சுகாதார அமைச்சராக இருக்கும் ராஜித சேனாரத்னவின் நியமனங்களுக்கு எதிராக நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அவர் நியமித்துள்ள குழுவிடமிருந்து உண்மையையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாத அக்குழுவின் விசாரணைகளை மக்களும் நம்பப்போவதில்லை.
ஆகவே, ஜனாதிபதி உடனடியாக அமைச்சர் ராஜிதவை அப்பதவியிலிருந்து நீக்கி சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,
கேள்வி:- குருணாகலில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர் மீது சொத்துக்குவிப்புக்கு அப்பால் கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டமை தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவ்விடயம் குறித்து எத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?
பதில்:- குறித்த வைத்தியர் தொடர்பில் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாவதற்கு முன்னதாக எந்த வொரு தாய்மாரிடத்திலிருந்தும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருக்கவில்லை.
தாய்மாரின் அனுமதியின்றி 4ஆயிரம் பேருக்கு கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக சிங்கள பத்திரிகையொன்று, பிரதான தலைப்புச்செய்தியாக வெளியிட்டிருந்தது.
அத்துடன் இதில் இனரீதியான விடயமும் உள்ளடங்கியிருந்தது. அவ்வாறு பார்க்கையில், மிகப் பாரிய குற்றம் தொடர்பான தகவலொன்றாகவே காணப்படுகின்றது என்பதை உணர்ந்து உடனடியாக இந்த விடயம் தொடர்பில் முழுமையான சுயாதீன விசாரணையொன்றை நடத்துவதற்காக எமது சங்கத்தின் உபதலைவர் தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளோம்.
அத்துடன், குறித்த செய்தியை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியருடனும் இவ்விடயம் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு எழுத்து மூலமாக கோரியிருந்தோம்.
இருப்பினும் அந்த விடயம் சம்பந்தமான குற்றப்புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளதால் எவ்விதமான தகவல்களையும் மூன்றாம் தரப்பிற்கு பகிர்ந்து கொள்ள முடியாது என்று கூறினார்.
அதேநேரத்தில், பொலிஸ் ஊடகப்பேச்சாளர், குறித்த வைத்தியர் மீது கருத்தடை சத்திரசிகிச்சை குற்றச்சாட்டுக்கள் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் கிடைக்கவில்லை.
ஆனால், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை குவித்தமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையால் அவரை கைது செய்துள்ளதாகவும் அறிவித்தார்.
கேள்வி:- உங்களால் அமைக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் எந்த நிலைமையில் உள்ளன?
பதில்:- எம்மால் நியமிக்கப்பட்ட குழுவானது, குருணாகல் வைத்தியசாலையில் உள்ள எமது கிளைச்சங்கத்தின் ஊடாக முழுமையான தகவல்களைப் பெற்று வருகின்றது.
அத்தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. விசேடமாக தாய்மார்களால் முன்வைக்கப்படுகின்ற கருத்தடை சத்திரசிகிச்சை விடயத்திற்கே முன்னுரிமை வழங்கி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெகு விரைவில் அவற்றை வெளிப்படுத்துவதற்கு தயாராகி வருகின்றோம். மேலும் அவர் 2015ஆம் ஆண்டு தேர்தலில் களமிறங்கும் வரையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினராகவும் அங்கத்துவத்தினைக் கொண்டிருந்தார். இருப்பினும் அதன் பின்னரான நிலையில் அவர் அங்கத்துவத்தினை மீளப்புதுப்பித்துக்கொள்ளவில்லை என்பதும் அறியப்பட்டுள்ளது.
கேள்வி:- மகப்பேற்றின்போதோ அல்லது பரிசோதனைகளின் போதோ கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா?
பதில்:- இதில் இருவேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. விசேட சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் முன்னிலையில் குழுவொன்றாகவே
சத்திரசிகிச்சைகள் இடம்பெறுவதால் இரகசியமாக கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள முடியாது என்று ஒருதரப்பினர் வாதத்தினை முன்வைக்கின்றார்கள்.
மகப்பேற்றுத்துறையில் அனுபவம் வாய்ந்த விசேட வைத்திய நிபுணர்களில் சிலர் இரகசியமாக சத்திரசிகிச்சைகளை செய்ய முடியும் என்றும் வாதங்களை முன்வைத்து வருகின்றனர். ஆகவே இந்த விடயங்கள் தொடர்பில் நாம் ஆழமான கவனம் செலுத்த தலைப்பட்டிருக்கின்றோம்.
கேள்வி:- உங்களுடைய சங்கத்தினால் குறித்த வைத்தியரின் மீள்நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றதே?
பதில்:- ஆம், இந்த வைத்தியர் தம்புள்ளை வைத்தியசாலையில் பணியாற்றிய காலத்தில் தான் 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்காக அரச சேவையிலிருந்து இராஜிநாமா செய்துள்ளார்.
அத்தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததன் காரணமாக, மீண்டும் அரச சேவையில் இணைவதற்கான முறையீட்டினை செய்துள்ளார்.
அவ்வாறு முறையீடு செய்கின்றபோது பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் தான் சேவையில் மீண்டும் இணைய முடியும். அவ்வாறு சேவையில் இணைவதற்கான அனுமதி கிடைத்தாலும், மீண்டும் புதிய நியமனத்திற்கான நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும்.
அதாவது கஷ்டப்பிரதேசங்களில் குறிப்பிட்டகாலம் பணியாற்றிய பின்னரே இடமாற்றத்திற்கான படிமுறைகளின் பிரகாரம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட இடமாற்றத்தினை பெற முடியும்.
ஆனால், இந்த செயற்பாடுகள் எவையும் பின்பற்றப்படாது, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரின் மூலம் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அவர் ஏற்கனவே பணியாற்றிய இடத்திற்கான நியமனத்தினை மீண்டும் பெற்றுக்கொள்கின்றார்.
சொற்ப காலங்களில் அமைச்சர் ராஜித மீண்டும் ஒரு அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்து அந்த வைத்தியருக்கு குருணாகல் வைத்தியசாலையில் நியமனத்தினை வழங்கியுள்ளார்.
இவ்வாறான சம்பிரதாயம் ஒன்று எங்குமே இல்லை. சுகாதார அமைச்சின், திணைக்களங்களின் விதிமுறைகளை முற்றாக மீறும் செயற்பாடொன்றாகும்.
கேள்வி:- அமைச்சு மட்டத்திலும் விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில் அக்குழுவும் விசாரணை அறிக்கையொன்றை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகின்றதே?
பதில்:- குருணாகல் வைத்தியர் தவறுகளை இழைத்தாரா இல்லையா என்பது உறுதியாகாத நிலையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஊடகவியலாளர்களைச் சந்தித்திருந்தபோது, முழுமையாக அவ்வைத்தியரை பாதுகாக்கும் செயற்பாட்டினையே மேற்கொண்டிருந்தார்.
இதன்மூலம் அவர் வைத்தியருக்கு சார்பாக செயற்படுகின்றார் என்ற பிம்பமே மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளது. அத்துடன் அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் எரிந்துகொண்டிருக்கும் இனங்களுக்கிடையிலான முறுகல்களை மேலும் அதிகரிப்பதாகவே இருக்கின்றது.
கேள்வி:- பேராதெனிய வைத்தியசாலையிலும் கருத்தடை சத்திரசிகிச்சைகள் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ள நிலையில் அதுகுறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவா?
பதில்:- இதுவரையில் எமக்கு எவ்விதமான முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை. மிகவும் பாரதூரமான விடயமொன்றாகவுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணை முன்னெடுப்பதே தீர்வுக்கான ஒரேவழியாகும்.
இல்லையேல், இவ்வாறு பல்வேறு நபர்கள் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்க முடியும். அதுமட்டுமன்றி வைத்தியர்கள் சம்பந்தமாக பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் அதிகரிக்கும். விசேடமாக முஸ்லிம் வைத்தியர்கள் குறித்து மாறுபட்ட மனநிலை ஏற்படும். சத்திரசிகிச்சை தொடர்பிலும் பொதுமக்கள் மத்தியில் பாரிய அச்சம் ஏற்படும் ஆபத்துள்ளது.
அதேநேரம், குருணாகல் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் ஊடாக குறித்த வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அண்மையில் ஓளடத அதிகாரிகளை அமைச்சர் ராஜித நியமித்தமை தொடர்பான வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றினால் அது சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜித 1990களில் ஏற்கனவே அமைச்சுப்பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் இந்த தீர்ப்பு உட்பட அவர் சுகாதார அமைச்சராக பதவியில் இருக்கும் காலத்தில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. ஆகவே அவருடைய செயற்பாடுகள் அப்பதவியிலிருந்து அவரை நீக்குவதற்கான அடிப்படைகளைக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், அமைச்சர் ராஜித தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் இனங்களுக்கிடையிலான உறவு ஆகிய உணர்வு ரீதியான விடயங்களில் விளையாடுகின்றார். இத்தகைய ஒருவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்கி கைது செய்ய வேண்டும். இதனை ஜனாதிபதியிடத்தில் கோரவுள்ளோம்.