ஏப்ரல் 21ஆம் திகதி நடை­பெற்ற தற்­கொலை தாக்­கு­தல்­களை அடுத்து முஸ்­லிம்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­களின் உடை, உணவுப் பழக்கம், கலா­சாரம், அர­சியல், பொரு­ளா­தாரம் ஆகி­ய­வற்றில் தேவை­யற்ற விதத்தில் மூக்கை நுழைத்து, முஸ்­லிம்­களை வந்­தேறு குடி­க­ளாக கணித்துச் செயற்­பட்ட பௌத்த கடும் போக்­கா­ளர்­களும், இன­வா­தி­களும் கிடைத்­தி­ருக்­கின்ற சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி தங்­க­ளது நீண்ட கால எண்­ணங்­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு முயற்­சி­களை எடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இவர்­களின் முஸ்லிம் விரோத செயற்­பா­டு­க­ளுக்கு பேரி­ன­வாதக் கட்­சி­களின் தலை­வர்­களும், ஏனை­ய­வர்­களும் துணை­யாக இருந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆட்சி அதி­கா­ரத்தை கைப்­பற்ற வேண்டும்.

ஆட்சி அதி­கா­ரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்­த­னை­க­ளி­லேயே சிங்­கள அர­சியல் தலை­வர்கள் உள்­ளார்கள். தங்­களின் இந்த அதி­கார வெறிக்கு முஸ்லிம் சமூ­கத்தை பலி­யாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இன்­றைய சூழலில் முஸ்­லிம்கள் பாது­காப்­பற்­ற­தொரு சமூ­க­மாக மாறிக் கொண்­டி­ருப்­ப­தா­கவே தோன்­று­கின்­றது.

குறிப்­பாக முஸ்லிம் பெண்கள் பல இடங்­களில் இன­வா­தி­க­ளினால் அச்­சு­றுத்­தப்­பட்­டுள்ள சம்­ப­வங்கள் நடை­பெற்­றுள்­ளன. முஸ்லிம் பெண்­களின் ஆடை அணியும் உரிமை மீது பலத்த சவால்கள் ஏற்­பட்­டுள்­ளன. இதனை தட்டிக் கேட்­ப­தற்கு கூட தலை­வர்­க­ளில்­லாத நிலையில் முஸ்­லிம்கள் உள்­ளார்கள். முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள், அதி­கா­ரிகள் மீது முன் வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­க­ளினால் தங்­களை பாது­காத்துக் கொள்ள வேண்­டு­மென்­பதில் தலை­வர்கள் கவ­ன­மாக இருக்­கின்­றார்கள்.

முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் புர்கா மற்றும் நிகாப் ஆகி­ய­வற்­றுக்கு அர­சாங்கம் தடை விதித்­துள்­ளது. முஸ்­லிம்கள் நாட்டின் பாது­காப்­புக்­காக தமது உரி­மையை விட்டுக் கொடுத்­துள்­ளார்கள் என்­றுதான் சொல்ல வேண்டும். அதே­வேளை, நாட்டின் பாது­காப்­புக்கு முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, நிகாப் ஆகி­ய­வைதான் அச்­சு­றுத்தல் என்று சொல்­வ­தற்­கில்லை. பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு இதுதான் ஆடை என்ற வரை­யறை கிடை­யாது.

தமது நோக்­கத்தை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு எந்த ஆடைக்­குள்ளும் அவர்கள் நுழைந்து கொள்­வார்கள். ஆயினும், இப்­போ­தைக்கு புர்கா, நிகாப் ஆகி­ய­வற்­றுக்கு தடை வந்­துள்­ளன. இதனை முஸ்­லிம்கள் மதித்து நடக்க வேண்டும். தவறும் பட்­சத்தில் தேவை­யில்­லாத பிரச்­சி­னை­களை தலையில் அள்ளிப் போட வேண்­டிய நிலை ஏற்­படும். ஒரு சில முஸ்லிம் பெண்கள் புர்கா, நிகாப் ஆகி­ய­வற்றை அணிந்து சென்­ற­மையால் கைது செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே வேளை, முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்தை மறைக்­காத பர்தா, அபாயா, ஹிஜாப் ஆகி­ய­வற்­றுக்கு எந்தத் தடையும் கிடை­யாது. ஆயினும், ஒரு சில பாட­சா­லை­க­ளிலும், வைத்­தி­ய­சா­லை­க­ளிலும், அலு­வ­ல­கங்­க­ளிலும், பஸ் வண்­டி­க­ளிலும் முஸ்லிம் பெண்கள் அபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து கொண்டு வரக் கூடா­தென்று நிர்­வா­கத்­தி­ன­ராலும், பாட­சா­லை­களின் பெற்­றோர்­க­ளி­னாலும், சக ஊழி­யர்­க­ளி­னாலும் தடை­களை ஏற்­ப­டுத்­தி­ய­தோடு மட்­டு­மல்­லாது, முஸ்லிம் பெண்­களை அச்­சு­றுத்­திய சம்­ப­வங்­களும் நடை­பெற்­றுள்­ளன. இத்­த­கைய அச்­சு­றுத்­தல்­களை மேற்­கொண்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்­கா­தி­ருப்­பது வேத­னைக்­கு­ரி­ய­தாகும்.

அர­சாங்­கத்­தினால் தடை செய்­யப்­பட்­டுள்ள புர்கா, நிகாப் ஆகி­ய­வற்றை முஸ்லிம் பெண்கள் அணிந்து சென்றால் பொலிஸார் கைது செய்து சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்­கின்­றார்கள். ஆனால், அர­சாங்­கத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள அபாயா, ஹிஜாப்பை அணிந்து கொண்டு செல்லும் முஸ்லிம் பெண்­களை குறித்த ஆடை­களை அகற்­று­மாறு அச்­சு­றுத்தல் விடுக்கும் நபர்­க­ளுக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இதன் மூல­மாக இன­வா­திகள் சட்­டத்தைக் கையில் எடுத்துச் செயற்­ப­டு­வ­தற்கு அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ள­தா­கவே இருக்­கின்­றது. தனி நபர்கள் அல்­லது ஒரு குழு­வினர் சட்­டத்தை கையில் எடுத்துச் செயற்­படும் போது அங்கு சட்­டத்தின் ஆட்­சிக்குப் பதி­லாக காட்­டுத்­தர்பார் ஆட்­சியே காணப்­படும். இத்­த­கைய நிலை இலங்­கையில் ஏற்­ப­டா­தி­ருப்­ப­தற்கு சட்டம் பார­பட்­ச­மின்றி அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

அபாயா அணி­வது தொடர்பில் உயர்­நீ­தி­மன்­றத்தில் தொட­ரப்­பட்ட வழக்கு ஒன்றின் போது  2014ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24ஆம் திகதி உயர்­நீ­தி­மன்றம் எந்­த­வொரு பிர­ஜையும் தமது முக அடை­யா­ளத்தை மறைக்­காத வகையில் தமது கலா­சார ஆடை­களை அணி­வ­தற்கு அனு­ம­தி­யுள்­ள­தென்று அப்­போது பிர­தம நீதி­ய­ர­ச­ராக இருந்த மொஹா பீரிஸ் தலை­மை­யி­லான நீதி­ப­திகள் குழு தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது. இது போன்று அபாயா அணி­வதில் பிரச்­சி­னைகள் ஏற்­பட்டு நீதி­மன்­றத்­திற்கு சென்ற அனைத்து வழக்­கு­க­ளிலும் முஸ்லிம் பெண்கள் அணியும் அபா­யா­வுக்கு தடை விதிப்­பது சட்ட விரோதம் என்றே தீர்ப்­புக்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில், அர­சாங்கம் முகத்தை மறைக்கும் புர்கா, நிகாப் ஆகி­ய­வற்­றுக்கு அவ­ச­ர­கால சட்­டத்­திற்கு அமை­வாக பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக தடை விதித்­துள்­ள­மையை சரி­யாக விளங்கிக் கொள்­ளாது அல்­லது இந்த தடையை பயன்­ப­டுத்திக் கொண்டு எதிர்ப்­புக்கள் வலு­வ­டைந்து வரு­கின்­றன.

ஒரு சில வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்­சைக்­காக அபாயா, ஹிஜாப் அணிந்து சென்ற முஸ்லிம் பெண் நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிப்­ப­தற்கு மறுக்­கப்­பட்­டுள்­ளது. அபாயா, ஹிஜாப்பை அகற்­றி­விட்டு வந்­தால்தான் சிகிச்சை வழங்­குவோம் என்று எச்­ச­ரிக்கை செய்­யப்­பட்­டுள்­ளது.

தங்­களின் பாது­காப்­புக்­கா­கவே தாங்கள் இவ்­வாறு செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தாக அபா­யா­வுக்கு எதிர்ப்­புக்­களை காட்­டு­கின்­ற­வர்கள் நியாயம் கற்­பித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இது ஏற்றுக் கொள்ளக் கூடி­ய­தா­கவும், அறி­வு­பூர்­வ­மா­ன­தா­கவும் தென்­ப­ட­வில்லை.

இவ்­வாறு ஆங்­காங்கே நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் சம்­ப­வங்கள் குறித்து சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்­க­ளுக்கும், அதி­கா­ரி­க­ளுக்கும், பொலி­ஸா­ருக்கும் முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்ட போதிலும் சரி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. இதனால் அபாயா, ஹிஜாப் அணிந்து செல்லும் முஸ்­லிம்கள் அசௌ­க­ரி­யங்­களை எதிர் கொண்டே வரு­கின்­றார்கள்.

அண்­மையில் ஏற்­பட்ட குண்டு வெடிப்­புக்­களின் பின்­னர்தான் இந்த நிலைமை ஏற்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்க முடி­யாது. இதற்கு முதலும் முஸ்லிம் பெண் ஆசி­ரி­யைகள், மாண­விகள், உத்­தி­யோ­கத்­தர்கள் அணியும் பர்தா, அபாயா, ஹிஜாப் ஆகி­ய­வற்­றிக்கு எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த எதிர்ப்­புக்­களை இன­ரீ­தி­யான அணு­கு­மு­றை­யா­கவே கருத வேண்­டி­யுள்­ளது. ஒவ்­வொரு பாட­சா­லையும் அலு­வ­ல­கமும் நினைத்த மாதிரி சட்­டத்தை கையில் எடுத்து செயற்­ப­டு­வ­தற்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்டும். இது தொட­ரு­மாயின் இன உற­வு­களில் பாரிய விரி­சல்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­விடும்.

ஹலால் விவ­கா­ரத்தில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம். இதுவே எமது இலக்­காக இருந்­தது. இது நமக்கு மகிழ்ச்­சியைத் தரு­கி­றது. அடுத்து முஸ்லிம் பெண்­களின் அபாயா தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது என பொது பல­சேனா அமைப்பின் தலைவர் கிரம விம­ல­ஜோதி தேரர் 2015ஆம் ஆண்டு தெரி­வித்­தி­ருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஆதலால், இஸ்­லா­மிய மத­வி­ழு­மி­யங்­களை தழு­விய வகையில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை­க­ளுக்கு தடை­களை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்­பது பௌத்த இன­வா­தி­க­ளி­னதும், அமைப்­புக்­க­ளி­னதும் நீண்­ட­காலத் திட்­ட­மாகும்.

ஆகவே, ஒரு சமூகம் தனக்­கு­ரிய ஒரு உரி­மையை விட்டுக் கொடுக்கும் போது, அதன் எதிர்­வி­ளை­வாக இன்னும் சில உரி­மை­களை இழக்க வேண்­டி­யேற்­படும் என்­ப­தற்கு ஹலால் விவ­கா­ரத்தில் முஸ்லிம் தலை­வர்கள் விட்டுக் கொடுப்பு செய்­த­மையால், தற்­போது முஸ்லிம் பெண்­களின் ஆடைக்கு தடை விதிக்கும் நிலையை தோற்­று­வித்­துள்­ளது. அத்­தோடு, முஸ்லிம் பெண்கள் இவ்­வா­றுதான் ஆடை அணிய வேண்­டு­மென்று திணிக்கும் நிலையும் ஏற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.

உண்­மையில் முஸ்லிம் பெண்கள் தற்­போது அணியும் பெரும்­பா­லான ஆடைகள் மட்­டு­மன்றி ஒரு தொகை முஸ்லிம் ஆண்கள் அணியும் ஆடை­களும் மத்­திய கிழக்கு முஸ்லிம் நாடு­களின் ஆடை­களை ஒத்­த­தா­கவே இருக்­கின்­றன. இஸ்லாம் ஆணும், பெண்ணும் எந்த உறுப்­புக்கள் மறையும் வகையில் ஆடை அணிய வேண்­டு­மென்று சொல்­லி­யுள்­ளது. ஆனால், இவ்­வா­றுதான் அந்த ஆடை அமைய வேண்­டு­மென்று ஒரு வடி­வத்தைக் குறிக்­க­வில்லை.

இதனால், மலே­ஷியா, இந்­தோ­னே­ஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடு­களில் முஸ்­லிம்கள் அணியும் ஆடைக்கும், மத்­திய கிழக்கு அரபு நாட்டு முஸ்­லிம்கள் அணியும் ஆடைக்கும் இடையே வேறு­பா­டு­களைக் காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றன. என்­றாலும், இந்­நா­டு­களில் உள்ள முஸ்­லிம்­களின் ஆடை­களில் ஒரு ஒற்­று­மையை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. அதா­வது, ஆடை­களின் வடி­வத்தில் மாற்றம் இருந்­தாலும், அந்த ஆடைகள் இஸ்லாம் சொல்­லி­யுள்ள வகையில் அமைந்­தி­ருப்­பது கவ­னிக்­கப்­பட வேண்­டி­ய­தாகும்.

 ஒரு சமூகம் தொடர்ந்தும் இவ்­வா­றுதான் ஆடை அணிய வேண்­டு­மென்று எதிர்­பார்க்க முடி­யாது. நாக­ரிக வளர்ச்சி மற்றும் கவர்ச்சி போன்­ற­வை­க­ளினால் தமது ஆடை­க­ளிலும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்திக் கொள்­கின்­றார்கள். சாரன், சேர்ட், புடவை, வேஷ்டி என்­ப­னவே இலங்கை சமூ­கத்­தி­ன­ரி­டையே பாரம்­ப­ரிய ஆடை­க­ளாக இருந்­தன. ஆனால், ஐரோப்­பிய நாக­ரி­கத்­தினால் காற்­சட்டை, லோங்ஸ், கொலர் வைக்­கப்­பட்ட சேர்ட் ஆகி­ய­வற்­றுக்கு மாறி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அந்த வகை­யில்தான் முஸ்லிம் பெண்­களும் தமது பாரம்­ப­ரிய ஆடை­க­ளி­லி­ருந்து மாறி­யுள்­ளார்கள். பெரும்­பா­லான முஸ்லிம் பெண்­களை அரே­பிய ஆடைகள் ஆக்­கி­ர­மித்­துள்­ள­தனைப் போன்று ஏனைய இன பெண்­க­ளி­டையே ஐரோப்­பிய ஆடைகள் ஆக்­கி­ர­மிப்புச் செய்­துள்­ளன. இதனை தவிர்க்க முடி­யாது. அது போலவே உணவுப் பழக்க வழக்­கங்­க­ளிலும் பாரம்­ப­ரி­யத்தை விட்டு எல்லா இனங்­களும் விலகிக் கொண்டு வரு­வ­தனைக் காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றன.

இஸ்­லாத்தை பொருத்­த­வரை கருப்பு நிற ஆடை­யைத்தான் அணிய வேண்­டு­மென்­ப­தல்ல. அது போலவே, ஆண்கள் வெள்ளை நிற ஜுப்­பாதான் அணிய வேண்­டு­மென்றும் சொல்­ல­வில்லை. ஆனால், ஆடை எவ்­வாறு இருக்க வேண்­டு­மென்று கட்­ட­ளை­யிட்­டுள்­ளது. அதன்­படி ஆடை அமை­யு­மாயின் அதனை இஸ்­லா­மிய ஆடை எனலாம். அரே­பிய முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையின் வடி­வத்தை மாத்­திரம் கொண்­டி­ருப்­ப­தனால் இஸ்­லா­மிய ஆடை­யா­கி­வி­டாது.

முஸ்லிம் பெண்கள் அரே­பிய முஸ்லிம் பெண்­களை போன்று கறுப்ப நிற ஆடைக்கு மாறிக்­கொண்டு வரு­வ­தனால் பெரும்­பான்­மை­யின மக்­க­ளி­டையே இந்த நாட்டை முஸ்­லிம்கள் அரபு நாடு­களைப் போன்று மாற்­றி­வி­டு­வார்­களோ என்ற பயம் ஏற்­பட்­டுள்­ளது. அத­னால்தான் அபா­யா­வுக்கு பௌத்த கடும்­போக்­கா­ளர்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் சிலர் கருத்துரைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியாக இருந்தால் எதற்காக முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்க வேண்டுமென்று தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள்.

இந்த தாக்குதல்கள் இலங்கை முஸ்லிம்கள் மீது 1915ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அன்றைய முஸ்லிம்கள் சாரனும், சேட்டும், புடவையும்தான் அணிந்தார்கள். இதே காலத்திலிருந்தே பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆகவே, முஸ்லிம்களின் மீது இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னதாகவே காழ்ப்புணர்ச்சியால் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றார்கள். அதன் தொடர்ச்சிதான் இன்று முஸ்லிம்களின் ஆடை முதல் அனைத்து விடயங்களிலும் தலையீடுகளைச் செய்வதற்கு காரணமாகும்.

இதே வேளை, சில முஸ்லிம் பெண்கள் அபாயா அணிந்தாலும் அது இஸ்லாமிய வரையறைக்கு அப்பாற்பட்ட வகையில் இறுக்கமாக இருப்பதனையும் சுட்டிக் காட்டியாக வேண்டும். இன்று பெரும்பாலான இளம் முஸ்லிம் பெண்கள் இவ்வாறுதான் ஆடை அணிந்து கொண்டு வருகின்றார்கள். இதனை தவிர்க்க வேண்டும். இதனை இஸ்லாமிய ஆடை என்று வாதிடவும் முடியாது.

Share.
Leave A Reply