மாத்தறை -தல்பாவில பகுதியில் நச்சு திரவம் கலந்த கைக்குட்டையை பயன்படுத்தி இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலை சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே வேளை சம்பவம் தொடர்பில் பெண்னொருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று முற்பகல் 11 மணியளவில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தெனிபிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 52வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மே – 31 ஆம் திகதி மாத்தறை – தல்பாவில பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இனம் தெரியாத நபர்கள் அங்கிருந்த பெண்கள் இருவருக்கும் நச்சுத்தன்மை கலந்த கைக்குட்டையால் முகத்தை மறைத்து பெண்கள் இருவரையும் மயக்கமடைய செய்துவிட்டு வீட்டிலிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றிருந்தனர்.
சம்பவத்தை அடுத்து பெண்கள் இருவரும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தல்பாவில பகுதியை சேர்ந்த 77வயதுடைய பெண் சிகிச்சைப்பலனின்றி உயிழந்திருந்தார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய அந்த கைக்குட்டையில் நச்சுதிரவம் கலந்திருந்தமையும் அதனை சுவாசித்தமையின் காரணமாகவே அவர் உயிரிழந்தமையும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தொடர்விசாரணைகளுக்கு அமையவே சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டதுடன், கொலையுடன் தொடர்புடைய பெண்ணொருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.