ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரத்தில் மர்ம மனிதர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர்.

ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு இன்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்துள்ளார். ஓட்டலில் இருந்தவர்களை குறிவைத்து திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் இனி அஞ்சவேண்டாம் என வடக்கு மாகாண தலைமை காவல் அதிகாரி கேவின் கென்னடி தெரிவித்துள்ளார். விசாரணைக் கைதி ஒருவன் துப்பாக்கியுடன் தப்பிவிட்டதாக காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

இதைப்பற்றி பிரதமர் ஸ்காட் மோரிசன் லண்டனில் நிருபர்களிடம் கூறுகையில், இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்றும், பொதுமக்கள் அஞ்ச வேண்டாம், என்றும் கேட்டுக்கொண்டார்.

சம்பவத்தை நேரில் பார்த்த ஜான் ரோஸ் கூறும்போது, “கைத்துப்பாக்கியுடன் ஒரு மனிதர் டார்வின் ஓட்டலினுள் நுழைந்தார் . ஓட்டலின் எல்லா அறைகளிலும் யாரையோ தேடிய அவர் அறையினுள் இருந்த அனைவரையும் சுட்டார். பின்பு அவர் அங்கே இருந்து வெளியில் குதித்து தப்பியோடினார்” என்றார்.

காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் ஒருவருக்கு உதவி செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொரு பெண் கூறினார். இச்சம்பவத்தின் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Share.
Leave A Reply