லண்டன் பேருந்தில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் நான்கு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மெலெனியா கெய்மொனாட் என்ற யுவதியும் அவரது தோழியும் இரவு வேளையில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற பின்னர் எடுக்கப்பட்ட படமொன்றை கெய்மொனாட் முகநூலில் பதிவு செய்துள்ளார். அந்த படத்தில் அவரும் அவரது நண்பியும் இரத்தக்காயங்களுடன் காணப்படுகின்றனர்.
தாங்கள் முத்தமிட்டதை பார்த்த நான்கு இளைஞர்கள் எங்களை துன்புறுத்த ஆரம்பித்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர்கள் ஆபாசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டனர்,என தெரிவித்துள்ள அவர் எங்களை தங்களை முத்தமிடுமாறு அவர்கள் எங்களை கேட்டனர் நாங்கள் அதற்கு மறுத்தவேளை எங்களை மோசமாக தாக்கிவிட்டு எங்கள் பணத்தை திருடிச்சென்றுவிட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் காடையர்கள் போல நடந்துகொண்டனர், எங்களை லெஸ்பியன்கள் என அழைத்தனர் தங்களை முத்தமிடுமாறு வற்புறுத்தினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான நிலையை தணிப்பதற்காக நான் அவர்களுடன் வேடிக்கையாக பேசினேன் ஆனால் அவர்கள் தொடர்ந்தும் எங்களை துன்புறுத்தினார்கள் நாணயங்களை எங்கள் மீது வீசினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் எனது நண்பி அவர்களுடன் மோத தொடங்கினார், அவர்கள் எனது நண்பியை மோசமாக தாக்கினார்கள் அவளது முகத்திலிருந்து இரத்தம் பெருக்கெடுத்தது பின்னர் அவர்கள் என்னையும் தாக்கினார்கள் என மெலெனியா கெய்மொனாட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் 15 முதல் 18 வயதுடைய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ள லண்டன் மேயர் சாதிக்கான் இது அருவருப்பான தவறான கருத்துடைய சம்பவம் என குறிப்பிட்டுள்ளார்.
ஓரினச்சேர்க்கையாளர்களிற்கு எதிரான குற்றங்களை லண்டன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது சகித்துக்கொள்ளாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஸ் பிரதமர் தெரேசா மேயும் இந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது வேதனை தரும் தாக்குதல் எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியதாக உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவரும் ஒருபோதும் தாங்கள் யார் என்பதையும் தாங்கள் யாரை நேசிக்கின்றார்கள் என்பதையும் மறைக்ககூடாது என தெரிவித்துள்ள தெரேசா மே ஓரினச்சேர்க்கையாளர்களிற்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்காக பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
https://www.dailymail.co.uk/news/article-7114415/Horrifying-picture-shows-lesbian-couple-covered-blood-gang-men-attacked-them.html