அண்மையில் நடைபெற்று முடிந்த லோக் சபா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறுவதுடன், தமிழகத்தில் வெற்றிடமாக இருந்த 22 தொகுதிகளிலும் வெற்றிபெறுவதே தி.மு.க வின் குறிக்கோளாக இருந்தது.
தேர்தல் நடைபெற்ற லோக்சபா தொகுதிகளில் ஒன்றைத் தவிர, ஏனைய 37 தொகுதிகளிலும் வெற்றிபெற்று சாதனை படைத்தது. எனினும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் வெற்றிபெற்று தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றுவது என்ற தி.மு.க வின் திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது.
இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தால் தி.மு.க வின் எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கும். மு.க.ஸ்டாலினும் தமிழக முதல்வராகியிருப்பார்.
13 தொகுதிகளில் மாத்திரம் வெற்றிபெற்றதால் தி.மு.க வின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனது.
அதேவேளை, எதிர்பாராத வகையில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் ஆளும் அ.தி.மு.க. தமது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
எடப்பாடியின் ஆட்சி தப்பியது.
தற்போது மத்தியில் பா.ஜ.க. தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்துள்ள நிலையில், எடப்பாடி அரசை எதுவும் செய்ய முடியாது என்பதை தி.மு.க. நன்கு உணர்ந்துள்ளது.
ஆனால், இடைத்தேர்தல்களில் அதிகளவு பணத்தை செலவுசெய்து வெற்றிபெற்றதன்மூலம் எம்.எல்.ஏக்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள், தி.மு.க.ஆட்சி அமைத்தால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
எனவே, எடப்பாடி அரசு கவிழ்க்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க வின் மாற்றுத் திட்டம்
இந்த நிலையிலேயே அ.தி.மு.க வின் சில எம்.எல்.ஏ.க்களை தமது பக்கம் இழுத்தெடுப்பதன்மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்ற ரீதியிலும் தி.மு.க. காய்நகர்த்தி வருகிறது.
அதற்கமைய தி.மு.க. விரித்துள்ள வலைக்குள் சிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இது ஆளும் அ.தி.மு.க.வுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக இருக்கப்போகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.
முதல்வர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கப் போவதில்லை என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடாக இருந்தது.
சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் அத்தனை தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும் எனவும், அதன்மூலம் எடப்பாடி அரசு தானாக கவிழும் எனவும் தி.மு.க. எதிர்பார்த்துக் காத்திருந்தது உண்மை.
ஆனால், சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் 9 தொகுதிகளில் வெற்றிபெற்றதன்மூலம் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது அ.தி.மு.க. எனவே,தற்போதைய நிலையில், எடப்பாடி அரசாங்கத்தை தி.மு.க. கவிழ்க்க முடியாது என்பது உண்மை.
ஆரம்பத்தில் மூன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மாத்திரமே தி.மு.க. வலையில் சிக்கியிருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தை டெல்லியிலுள்ள பா.ஜ.க. உயர்மட்டத்துக்கு தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும், அங்கிருந்து தி.மு.க.வின் திட்டத்தை முறியடிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இதனால் அ.தி.மு.க.அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
தமிழக சட்டப்பேரவைச் சபாநாயகர் தனபால் மீதான, நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அ.தி.மு.க. வின் எம்.எல்.ஏ.க்கள் சிலரின் ஆதரவுடன், சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கு, தி.மு.க. இரகசிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நீடிக்குமா என்ற, கேள்வி தற்போது எழுந்துள்ளது.
எனவே, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக, அ.தி.மு.க. வின் எம்.எல்.ஏ.க்களுடன் சென்னையில், சில தினங்களுக்கு முன்னர் முதல்வரும், துணை முதல்வரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சபாநாயகர் மீதான, நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிப்பதற்கு, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
சபாநாயகருக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தி.மு.க, அந்தத் தீர்மானத்தை, அ.தி.மு.க, – எம்.எல்.ஏ,க்கள் சிலரின் ஆதரவுடன், சட்டசபையில் வெற்றி பெற வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஆளும் கட்சியைச் சேர்ந்த சில, எம்.எல்.ஏ.,க்களிடம், இதுதொடர்பில் தி.மு.க., தரப்பில் பேசப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
இதில், தி.மு.க., வெற்றி பெற்று விட்டால், எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும்.
அ.தி.மு.க., ஆட்சி பெரும்பான்மை இழந்து விட்டதாக, தி.மு.க. பிரச்சினையை கொண்டுவரும்.
ஆட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்து விடும். எனவே, தி.மு.க.,வின், இந்த முயற்சியை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில், அ.தி.மு.க. இருக்கின்றது. அதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், தமது கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப்பேசியுள்ளனர்.
180 தொகுதிகளில் வெற்றி தேவை
இதேவேளை, சட்டப்பேரவை பொதுத்தேர்தலை எதிர்கொண்டு, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும்.
இந்த இலக்கை அடைவதற்கு ஒன்றுபட்டு முயற்சிப்போம். தமிழகத்தில், 150 -– 180 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு அனைவரும் தயாராகுங்கள் என்று, தி.மு.க.வின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்கட்சியின் தலைவர், மு.க.ஸ்டாலின் பணிப்புரை விடுத்துள்ளார்.
தி.மு.க., மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகமான, சென்னை, அறிவாலயத்தில், சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இதில், ஒன்பது சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் தேனி லோக்சபா தொகுதியில், தி.மு.க., தோல்வியுற்றதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டது.
அப்போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நடந்து முடிந்த, 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றிருந்தால், அ.தி.மு.க., ஆட்சி கவிழ்ந்திருக்கும்; தி.மு.க., ஆட்சி அமைந்திருக்கும்.
ஒன்பது தொகுதிகளில், தி.மு.க. தோற்றதால், ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
சில காரணங்களால் அ.தி.மு.க. ஆட்சி எந்த நேரத்திலும் கவிழக்கூடிய நிலை காணப்படுகின்றது. ஆட்சியை கவிழ்த்து, தி.மு.க., ஆட்சி அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கலாம்.
ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில், அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. இந்த நேரத்தில், ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், கெட்டப் பெயர்தான் ஏற்படும்.
கடந்த, 2006 தி.மு.க., ஆட்சியில், கூட்டணியில் இருந்த, பா.ம.க., உள்ளிட்ட சில கட்சிகள், நமக்கு அளித்த நிபந்தனைகள், நெருக்கடிகளால், அந்தக் கட்சிகள்தான் இலாபமடைந்தன.
அதுவே, தி.மு.க. தோல்விக்கு காரணமாகிவிட்டது. எனவேதான், சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே, தமது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான மறைமுகத் திட்டம் இடம்பெற்று வருவதை அறிந்தகொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வருமான வரித்துறையின் உதவியை நாடியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
லோக் சபா தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. இது தி.மு.க.வுக்கு இருக்கும் பெரும் மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
அதேபோல இடைத்தேர்தலிலும் தி.மு.க. 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது.
அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 123 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்களில் கலைச்செல்வன், ரத்தினசபாபதி உள்ளிட்ட மூவரும் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலையில் உள்ளனர். மேலும் கருணாஸும் அ.தி.மு.க. வுக்கு எதிரான நிலையில்தான் இருக்கிறார்.
அதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின் மொத்த எண்ணிக்கை 119 தான் . இதனால் இன்னும் சில எம்.எல்.ஏக்களை அ.தி.மு.க.வில் இருந்து தமதுபக்கம் இழுப்பதற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட சிரல் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக தி.மு.க. மாவட்ட செயலாளர் உள்ளிட்ட சில நிர்வாகிகள் ரகசியமாக சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. அதற்காக பெரியத் தொகை ஒன்று தி.மு.க. தரப்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, வருமான வரித்துறையின் உதவியை நாடியுள்ளதாக தெரிகிறது. தேர்தல் நேரத்தில் தி.மு.க. வின் பணப் புழக்கத்தைத் தடுப்பதற்காக சோதனைகளை நடத்தியதுபோன்று, தற்போதும் சோதனைகளை நடத்தவேண்டும் எனக் கோரிக்கைகளை வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதனால் தி.மு.க. உறுப்பினர்கள் சிலரது வீடுகளில் விரைவில் சோதனை மேற்கொள்ளப்படலாம் என நம்பப்படுகிறது.
ஆட்சியைக் கலைக்க காங்கிரஸ் ஆதரவு
அ.தி.மு.க. ஆட்சியைக் கலைப்பதற்கு தி.மு.க. இரகசியமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் அதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தி.மு..க 13 தொகுதிகளில் வெற்றி பெற்று, 109 எம்.எல்.ஏக்களைக் கைவசம் வைத்துள்ளது.
அ.தி.மு.க. அரசைக் கலைக்க இன்னும் சில எம்.எல்.ஏக்களின் ஆதரவே தி.மு.க.வுக்கு தேவையாக உள்ள நிலையில், சில அதிமுக எம்.எல்.ஏ.களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் தி.மு.க.ஈடுபட்டுள்ளது.
திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இததொடர்பில் கெருத்துத் தெரிவிக்கையிலேயே, தி.மு.க.வுக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அ.தி.மு.க. ஆட்சி கவிழ்வது தவிர்க்க முடியாதது குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க.- பா.ஜ.க.பிளவு?
நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் இந்தியா முழுவதும் பெரும் வெற்றிபெற்ற பா.ஜ.க. தமிழகத்தில் வலுவான கூட்டணி இருந்தும் மண்ணை கவ்வியமை அக்கட்சியின் தலைவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.
இந்த தோல்விக்கு அ.தி.மு.க.வே காரணம் என்பது பா.ஜ.க. தலைவர்களின் கருத்தாகும். சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு காட்டிய முக்கியத்துவத்தை மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. காட்டவில்லை என்பதால் அ.தி.மு.க. மீது கடும் அதிருப்தியில் பா.ஜ.க. தலைமை உள்ளது.
எனவே அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி விரைவில் உடையவிருப்பதாகவும், அ.தி.மு.க. ஆட்சியை கலைத்துவிட்டு ஆறு மாதங்கள் குடியரசு தலைவர் ஆட்சியை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.