கூகுள் அளித்த ரூ.405 கோடி மதிப்புள்ள பங்குகளைப் பெற சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார். சம்பளமாக ஏற்கெனவே ஏராளமாக தான் பெற்றிருப்பதாகவும் தன்னிடம் போதுமான அளவு பணம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015- ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த சுந்தர்பிச்சை பொறுப்பேற்றார்.

2014- ம் ஆண்டு ரூ.1,750 கோடி மதிப்பு கொண்ட பங்குகளை அவர் பெற்றார். 2015- ம் ஆண்டு மேலும் ரூ.700 கோடி மதிப்புள்ள ஷேர்கள் அவருக்கு வழங்கப்பட்டன.

2016- ம் ஆண்டு மேலும் ரூ.1,400 கோடி மதிப்பு கொண்ட பங்குகளை அவர் பெற்றார். எனினும், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 2017 மற்றும் 2018- ம் ஆண்டு சுந்தர்பிச்சைக்கு 58 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.405 கோடி வழங்க முன்வந்தது.

ஆனால், இந்தப் பங்குகளைப் பெற சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார். மேலும், தன்னிடம் போதுமான செல்வம் சேர்ந்திருப்பதாக சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

சிலிக்கான் வேலியில் அதிக சம்பளம் வாங்கும் தலைமைச் செயல் அதிகாரிகளில் சுந்தர்பிச்சை முதன்மையானவர். `

கூகுள் நிறுவனத்தைப் புத்திசாலித்தனமாகவும் திறம் படவும் வழி நடத்திச் செல்வதோடு, தன்னையும் பணியில் ஃபிட்டாக வைத்துள்ளார்.

அவர் மீது பணிரீதியான அழுத்தம் இருந்தாலும் மனரீதியாகத் திறமையாகச் செயல்படுகிறார்’ என்று ஆல்பாபெட் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு அதிகளவில் சம்பளம் வழங்கப்படுவதாக மற்ற ஊழியர்கள் கேள்வி எழுப்பியதால், தனக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வைப் பெற சுந்தர் பிச்சை மறுத்ததாகச் சொல்லப்படுகிறது.

சிலிக்கான் வேலியில் உள்ள மற்றொரு நிறுவனத்துக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்க அவர் உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். `அல்பாபெட் நிறுவனமோ அதன் இயக்குநர்களோ கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி குறித்து எந்தக் கருத்தையும் பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது என்பது நிறுவனத்தின் கொள்கை ‘என்றும் அந்தச் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply