கணவனைப் பயமுறுத்துவதற்காக தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீமுட்டிக் கொள்ள முற்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரும், அவளைக் காப்பாற்ற முயன்ற கணவரின் தாயும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரிவுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிசாம் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் தீக்காயங்களுக்குள்ளான உயிரிழந்த பெண்ணின் கணவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி, செவ்வமடு எனும் பிரதேசத்தைச் சேர்ந்த நிபால் நிலாரா (வயது 35) மற்றும் செல்வநாயகி (வயது 58) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.
உயிரிழந்த பெண்ணின் மாமியாரான கணவரின் தாய் பலத்த தீக்காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு உயிரிழந்ததுடன் இப்பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் மனைவியுடன் தினமும் சண்டையிட்டுக்கொள்வதாகவும், நோன்புப் பெருநாள் தினத்துக்கு முதல்நாள் இரவும் குறித்த கணவர் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளதாகவும், அன்றைய தினம் நோன்பு திறந்து விட்டு இப்பெண் தனது கணவரின் துன்புறுத்தல்களைத் தாங்கிக்கொள்ள முடியாது வீட்டுக்கு வெளியில் சென்றிருந்த நிலையில்….
இரவு அவளது பிள்ளைகள் தனது தாயை வீட்டுக்கு அழைத்துள்ளதாகவும், அதன் பின்னர் வீட்டுக்கு வந்த அப்பெண் தனது கணவரைப் பயமுறுத்துவதற்காக தன் மீது மண்ணெண்ணெயினை ஊற்றிக்கொண்டு தீப்பெட்டியைப் பற்ற வைத்தபோது பயந்து போன அப்பெண்ணின் கணவரும் கணவரின் தாயும் விரைந்து தீப்பெட்டியைப் பறிக்க முற்பட்டபோதே எதிர்பாராத விதமாக அவர்கள் மூவர் மீதும் தீப்பற்றிக் கொண்டுள்ளமை மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணைகளின்போது தெரிவிக்கப்பட்டதாக திடீர் மரண விசாரணை அதிகாரி ஹிசாம் தெரிவித்தார்.
பின்னர் அவர்கள் மூவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கணவரின் தாய் கடந்த வியாழக்கிழமையும், மனைவி நேற்று முன்தினம் சனிக்கிழமை காலையும் உயிரிழந்துள்ளதுடன் கணவர் பலத்த தீக்காயங்களுடன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வியாழக்கிழமை உயிரிழந்த பெண்ணின் சடலம் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவரது இறுதிக் கிரியைகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றதாகவும் தெரிவித்த திடீர் மரண விசாரணை அதிகாரி ஹிசாம், நேற்று முன்தினம் உயிரிழந்த பெண் தனக்குத்தானே தீமூட்டிக் கொண்டதால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பை வழங்கி சடலத்தை நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.