நாடக நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசன கர்த்தா, திரைப்பட நடிகர், நாடக இயக்குநர் என பன்முகத்திறன் பெற்ற கிரேசி மோகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருடைய உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

மாது பிளஸ் 2, ஜுராஸிக் பேபி, மேரேஜ் மேட் இன் சலூன், அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், கிரேசி கிஷ்கிந்தா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியவர் கிரேசி மோகன்.

அத்துடன் மெட்டிஒலி, ஆச்சி இண்டர்நேஷனல் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களுக்கும் வசனம் எழுதியவர்.

பொய்க்கால் குதிரை என்ற படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் எழுதி தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கிய கிரேசி மோகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன், இந்திரன் சந்திரன், மகளிர் மட்டும், வியட்நாம் காலனி, அருணாச்சலம், பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமான கிரேசி மோகன், 2013ம் ஆண்டில் வெளியான ‘கல்யாண சமையல் சாதம் ’வரை 15 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார்.

உலகம் முழுவதும் ஆறாயிரம் முறைக்கு மேல் நாடகத்தை மேடையேற்றி நாடகக் கலையை அழியாமல் காப்பாற்றி வருபவர்களில் கிரேசி மோகனும் ஒருவர் என்பதும், அண்மையில் ரமண மகிரிஷியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் எழுதி நூலாகவும், பக்தி பாடல் அல்பமாகவும் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி பன்முகத் தன்மை வாய்ந்த படைப்பாளியான கிரேசி மோகன் அவர்களின் உடலுக்கு திரையுலகினரும், அவருடைய திரையுலக நண்பர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Share.
Leave A Reply