தாம் இரகசியப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் என அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குச் சென்று சோதனை என்ற பெயரில் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்கள் மூவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மேலதிக நீதவான் நீதி மன்ற நீதிபதி பி.சிவகுமார் உத்தவிட்டுள்ளார்.

குறித்த கொள்ளைச் சம்பவத்தில் 26 பவுண் தங்க நகைகளும் நான்கு இலட்சத்து எட்டாயிரம் ரூபா பணமும் களவாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்தேக நபர்கள் பயன்படுத்திய வேனை ஆதாரமாகக் கொண்டு பொலிஸார் மேற்கொண்ட  தேடுதலின்போது நால்வர் கைது செய்யப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேச நபர் அம்பாறை விஷேட பொலிஸ் குழுவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏனைய சந்தேக நபர்கள் மூவரும் இன்று(11) பிற்பகல் அக்கரைப்பற்று நீதவான் நீதி மன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

குறித்த சந்தேக நபர்கள் அக்கரைப்பற்று பதுர்ப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வேனொன்றில் சென்று தாம் புலனாய்வுத் துறை அதிகாரிகள் எனவும் தமது வீட்டினை சோதனையிட வேண்டுமெனவும் வீட்டாரிடம் கூறிவிட்டு வீட்டினை சோதனையிடும் போர்வையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Photos__5_

கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த வீட்டில் மூன்று பெண்கள் மாத்திரமே இருந்ததாகவும், தங்களிடம் உள்ள நகை பணம் போன்றவற்றை கொண்டு வந்து வைக்குமாறு சந்தேக நபர்கள் கூறியதும் தங்களிடமுள்ள பணம் மற்றும் நகைகள் போன்றவற்றை அப்பெண்கள் இவர்கள் முன்னிலையில் ஒன்று சேர்த்து காண்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த நகைகள் மற்றும் பணம் போன்றவற்றை ஓர் அறையில் கொண்டு போய் வைக்குமாறு கூறிய சந்தேக நபர்கள் இப்பணமும் நகையும்  சஹ்ரானுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் அவற்றை சோதனை செய்வற்கு பெண் பொலிஸாரும் துறைசார்ந்த உத்தியோகத்தர்களும் மாலை 5 மணியளவில் வருகை தரவுள்ளதால் குறித்த அறைக்குள் எவரும் செல்ல வேண்டாமென கூறி அந்த அறை கதவினை மூடி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவ் அறையினுள் சோதனையிடப் போகின்றோம் என சென்றவர்கள் அங்கிருந்த பணத்தினையும் நகையினையும் சூட்சுமமாக கொள்ளையிட்டுள்ளனர்.

இவ்விடயம் அறியாத வீட்டுப் பெண்கள் மாலை 8 மணியாகியும் வீட்டினைச் சோனையிட எவரும் வருகை தரவில்லை என்ற காரணத்தினால்  ஆண்களின் உதவியுடன் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு விடயத்தினை தெரியப்படுத்தியதையடுத்து அவ்வீட்டுக்கு விரைந்த பொலிஸார் கதவினைத் திறந்து பார்த்தபோது பணமும் நகைகளும் கொள்ளையிடப்பட்டமை தெரியவந்துள்ளது.

இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் அன்றைய தினம் அவ்வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கண்காணிப்புக் கெமராக்களையும் ( சி.சி.ரி.வி) அதனோடு தொடர்பு பட்ட இலத்திரனியல் சாதனங்களையும் கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.

Photos__1_

அதுமாத்திரமல்லாமல் தாம் இவ்வீட்டினை சோதனை செய்து விட்டுச் செல்லும் வரை எவரும் கையடக்கத் தொலைபேசிகளை உபயோகிக்கக் கூடாது எனக்கூறி கையடக்கத் தொலைபேசிகளை செயலிழக்கச் செய்துவிட்டும் சென்றுள்ளனர்.

இவ்விடயம் தொர்பில் விரைந்து செயற்பட்ட அக்கரைப்பற்று பொலிஸார் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விடயத்தினை தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, அவரின் பணிப்புரைக்கமைவாக அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் பதியத்தலாவ பொலிஸார் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட விஷேட தேடுதலின்போது சந்தேக நபர்கள் நால்வரும் கண்டி வத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொள்ளைச் சம்வத்துடன் தொடர்பு பட்ட வேனும் கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் நகைகளில் ஒரு பகுதியினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply