தாம் பாதுகாப்பு செயலராக இருந்த போதும், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியை இலகுவாகச் சந்திக்க முடிவதில்லை என்றும், சிலவேளைகளில் ஆவணங்களில் கையெழுத்துப் பெறுவதற்காக 3 மணி நேரம் கூட காத்திருந்திருக்கிறேன் என்றும் ஹேமசிறி பெர்னாண்டோ கூறியிருக்கிறார்
21/4 தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அளிக்கப்படும் சாட்சியங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கழுத்தை நெரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
இந்தப் பத்தி எழுதப்படும் வரை, அளிக்கப்பட்டுள்ள நான்கு சாட்சியங்களுமே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இயலாமையை, பொறுப்பின்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கின்றன.
முதலில் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் அளித்த சாட்சியமும், அதற்குப் பின்னர், பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் நாலக சில்வா அளித்த சாட்சியமும், அதையடுத்து, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவும் அளித்துள்ள சாட்சியங்களும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்களை கையாளுவதற்குரிய, ஆற்றலைக் கொண்டிருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்ப வைத்திருக்கின்றன.
இந்த தெரிவுக்குழு விசாரணையில் இரண்டு விடயங்கள் அம்பலமாகியிருக்கின்றன.
முதலாவது, தாக்குதல்கள் தொடர்பான போதிய முன்னெச்சரிக்கைகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், அதனைத் தடுப்பதற்கான சரியான பொறிமுறை கையாளப்படவில்லை என்பது.
இந்த விடயத்தில், புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், தொடக்கம், ஜனாதிபதி வரை தவறிழைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இரண்டாவது விடயம். பாதுகாப்பு விடயங்களைக் கையாளுவதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கறையுடன் செயற்பட்டிருக்கவில்லை.
அதற்குரிய ஆளுமையை அவர் கொண்டிருக்கவில்லை என்பது. “விடுதலைப் புலிகளை அழித்ததில் எனக்கு முக்கிய பங்கு இருக்கிறது, மஹிந்த ராஜ பக் ஷ வெளிநாடு சென்றிருந்த போது, ஒன்பது முறை பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்து, போரை வழி நடத்தினேன்.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்படும் போது கூட, புலிகளின் விமானத் தாக்குதலுக்குப் பயந்து மஹிந்த ராஜபக் ஷ, கோத்தாபய ராஜபக் ஷ எல்லோரும் வெளிநாட்டுக்கு ஓடி விட்டார்கள்,
நானே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்து, புலிகளை அழிக்கும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கினேன்,” என்றெல்லாம், முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தமை உங்களில் பலருக்கு நினைவில் இருக்கக் கூடும்.
பதில் பாதுகாப்பு அமைச்சராக ஒன்பது முறை பதவி வகித்தும் கூட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாதுகாப்பு அமைச்சையும், சட்டம் ஒழுங்கு அமைச்சையும் சரியாக நிர்வகிக்க முடியவில்லை அல்லது தெரியவில்லை என்பதையே தெரிவுக்குழுவில் இதுவரை அளிக்கப்பட்ட சாட்சியங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
இதுவரை சாட்சியமளித்த நான்கு அதிகாரிகளுமே, கிட்டத்தட்ட எல்லா விடயங்களிலும், ஒரே மாதிரியான கருத்தையே கூறியிருக்கிறார்கள். முரண்பட்ட தகவல்களை வெளியிடவில்லை. இதிலிருந்து, அவர்கள் உண்மையை மறைக்க முனையவில்லை என்று தெரிகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஒக்டோபர் 26 ஆட்சிக்கவிழ்ப்புடன் தான், பிரச்சினையே ஆரம்பமானது. அப்போது தான் அவர், பாதுகாப்பு அமைச்சுடன், சட்டம் ஒழுங்கு அமைச்சை தன்வசப்படுத்திக் கொண்டிருந்தார்.
ஜனாதிபதி மற்றும் கோத்தாபய ராஜபக் ஷவை படுகொலை செய்யும் சூழ்ச்சி தொடர்பான குற்றச்சாட்டுகளை சரியாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியே, அதனை தன்வசப்படுத்தினார்.
அதிபர் பூஜித ஜயசுந்தர
அத்துடன், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுடன் முரண்பட்டுக் கொண்டு, அவரை ஓரங்கட்டினார். இதற்குப் பின்னரே, தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அழைக்கப்படவில்லை.
அவரை அழைக்கக் கூடாது என்று ஜனாதிபதி தமக்கு கட்டளையிட்டிருந்தார் என, அப்போதைய பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஏற்கனவே, சாட்சியமளித்த தேசிய புலனாய்வுப் பணியக தலைவர் சிசிர மென்டிஸும், பொலிஸ்மா அதிபர் இன்றியே தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்று கூறியிருந்தார்.
ஆக, பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் பங்கேற்க அழைக்கப்படாமல் தடுக்கப்பட்டார் என்பது உறுதியாகியிருக்கிறது. அது ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே நடந்திருக்கிறது.
அடுத்து, தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் ஒழுங்காக நடத்தப்பட்டிருக்கவில்லை என்பதும் இப்போது அம்பலமாகியுள்ளது. சிசிர மென்டிஸின் சாட்சியத்திலும் அதுபற்றிக் கூறப்பட்டிருந்தது. பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவும் அதனை உறுதி செய்திருக்கிறார். தாம் பாதுகாப்புச் செயலராக இருந்தபோது,
2018 நவம்பருக்கும், 2019 ஏப்ரல் 19 இற்கும் இடையில், நான்கு முறை மாத்திரமே பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடத்தப்பட்டது என்று அவர் கூறியிருக்கிறார்.
Sisira-Mendis
சிசிர மென்டிஸின் சாட்சியத்துக்குப் பின்னர், ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிக்கையும் அதனை உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
தேசிய பாதுகாப்புச் சபைக்குப் பதிலாக, தனியான பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டம் வாரத்தில் இரண்டு முறை நடத்தப்பட்டது என்றும், எப்படியும் ஜனாதிபதி வாரம் ஒருமுறை அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் ஊடகங்களுக்கு கசிந்ததால் தான், அதற்குப் புறம்பாக, தனியான பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்றும், அந்த அறிக்கை நியாயப்படுத்தியிருந்தது.
முன்னதாக, பாதுகாப்புச் சபையின் இரகசியங்களை கசிய விட்டதால் தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவையும், பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு அழைக்கவில்லை என்று, தயாசிறி ஜயசேகர கூறியிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயலக அறிக்கையும் அமைந்திருந்தது,
பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பொலிஸ் மா அதிபர் ஆகியோரை பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கு அழைக்கக் கூடாது என்று ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார் என்று பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவும் சாட்சியமளித்திருக்கிறார்.
அவர்கள் மூவருக்கும் அழைப்பு விடுக்கப்படாத போதும் கூட, பாதுகாப்புச் சபை வாரம் ஒரு முறையோ, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையோ கூடத் தவறியது ஏன்?
பிரதமரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் தான் தகவல்களை கசிய விடுகின்றனர் என்றால், அவர்களுக்கு அழைப்பு விடுக்கக் கூடாது என்ற உத்தரவு இருந்தும், பாதுகாப்புச் சபைக்கு அப்பால் தனியான பாதுகாப்புக் குழுவொன்றை அமைக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன்?
இவையிரண்டும் இப்போது முக்கியமாக எழுந்திருக்கின்றன கேள்விகள். இதற்கு ஜனாதிபதியே பதிலளிக்க வேண்டும்.
பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில், குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் தொடர்பாக விவாதிக்கப்பட்டிருக்கிறது, தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அவற்றுக்கு ஜனாதிபதி முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றே தெரிகிறது.
அண்மைய பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில், சட்டவிரோத முறையிலான மீன்பிடி குறித்தும், மாகந்துர மதூஷ் குறித்துமே அதிகம் விவாதிப்பதில் ஜனாதிபதி ஆர்வம் கொண்டிருந்தார் என்று, ஹேமசிறி பெர்னாண்டோவின் சாட்சியத்தில் கூறப்பட்டிருக்கிறது.
அதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனம் முழுவதும், தன்னையும், கோத்தாபய ராஜபக் ஷவையும் படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான விசாரணையின் மீதே இருந்தது. அதிலுள்ள அரசியல் தொடர்புகளின் மீதே கவனம் செலுத்தியிருக்கிறார்.
அண்மையில் சரத் பொன்சேகா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருந்த ஒரு செவ்வியில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாமல் குமாரவைத் தவிர, வேறெவரையும் நம்பத் தயாராக இல்லை” என்று கூறியிருந்தார். அது முற்றிலும் சரியான கருத்தே.
நாமல் குமார தான், ஜனாதிபதி, மற்றும் கோத்தாபய ராஜபக் ஷ படுகொலைச் சதித்திட்டம் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தியவர். அந்த விசாரணைகளால் தான், ரிஐடியின் பணிப்பாளர் நாலக சில்வா கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
சஹ்ரானை கைது செய்வதற்கு, தாம் பகிரங்க பிடியாணை பெற்றிருந்ததாகவும், தாம் கைது செய்யப்பட்ட பின்னர், அந்த பிடியாணை செயற்படுத்தப்படவில்லை என்றும், நாலக சில்வா சாட்சியம் அளித்திருக்கிறார்.
ஆக, ஒக்டோபர் 26 ஆட்சிக்கவிழ்ப்பு தான், ஒன்றன் பின் ஒன்றான பாதுகாப்பு தவறுகள், குழப்பங்களுக்கு காரணமாகியிருக்கிறது. அதற்குப் பின்னர், பாதுகாப்பு அமைச்சுடன், சட்டம் ஒழுங்கு அமைச்சையும் தனது தலையின் மீது சுமக்க ஆசைப்பட்ட ஜனாதிபதி, அந்த வேலையையும் உருப்படியாகச் செய்யத் தவறி விட்டார்.
ஒருவேளை, சட்டம் ஒழுங்கு அமைச்சு ஐ.தே.கவிடம் இருந்திருந்தால், பூஜித ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருடன், அந்த அமைச்சை வைத்திருந்தவரின் தலையும் உருட்டப்பட்டிருக்கும்.
hemasiri-fernando-
தாம் பாதுகாப்பு செயலராக இருந்தபோதும், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியை இலகுவாகச் சந்திக்க முடிவதில்லை என்றும், சிலவேளைகளில் ஆவணங்களில் கையெழுத்துப் பெறுவதற்காக 3 மணி நேரம் கூட காத்திருந்திருக்கிறேன் என்றும் ஹேமசிறி பெர்னாண்டோ கூறியிருக்கிறார்.
கோத்தாபய ராஜபக் ஷ பாதுகாப்பு அமைச்சின் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்தார் என்றும், ஆனால், தனக்கு அந்த அதிகாரம் இல்லாததால், எதுவும் செய்ய முடியவில்லை என்றும் அவர் ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார்.
அதைவிட, புலனாய்வுத் தகவல்கள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தன மூலமே ஜனாதிபதி பெற்றுக் கொண்டு வந்திருக்கிறார் என்பதும், இந்த சாட்சியங்களில் இருந்து தெரியவந்திருக்கிறது,
ஜனாதிபதிக்கு புலனாய்வுத் தகவல்களை அளிக்கும் அதிகாரம், தனக்கு இருக்கவில்லை என்று தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் சிசிர மென்டிஸிம் கூறியிருந்தார்.
இந்த விடயத்தில் பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள, அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவீரவும், குற்றப் புலனாய்வுப் பணியக தலைவரும், தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்க முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சாட்சியங்கள் மற்றும் குறுக்கு விசாரணையில் அம்பலமான தகவல்கள், எல்லாமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளன
குறிப்பாக, பாதுகாப்பு அமைச்சைக் கையாளுவதற்குத் தேவையான திறன் அவருக்கு இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது,
அண்மையில் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி, தமக்கு புலனாய்வு அறிக்கைகள் முன்கூட்டியே கிடைக்கவில்லை என்றும், கிடைத்திருந்தால் வெளிநாடு சென்றிருக்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.
அவர் வெளிநாடு செல்வதற்கு முன்னர், பாதுகாப்புச் செயலரோ, பொலிஸ் மா அதிபரோ, தேசிய புலனாய்வு பணியக தலைவரோ, தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவலை கூறவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. அதனை அவர்கள் மூவரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் வழக்கமாக, அவருக்கு புலனாய்வு தகவல்களை வழங்கும், அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜெயவீர அந்த முன்னெச்சரிக்கையை கொடுத்தாரா என்பது, அவர் தெரிவுக்குழு முன்பாக உண்மையைக் கூற முன்வந்தால் மாத்திரமே, வெளிச்சத்துக்கு வரும்.
அதுவரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தச் சம்பவங்களுக்கான நேரடியாக பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருந்து தப்பிக்கலாம்.
எவ்வாறாயினும், தான் நாட்டில் இல்லாததால், இதற்குப் பொறுப்பேற்க முடியாது என்றும், இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறும், அதற்காக வெளிநாட்டுத் தூதுவர் பதவியை தருவதாகவும் ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக பூஜித ஜயசுந்தர கூறியிருக்கிறார். இதனை ஹேமசிறி பெர்னாண்டோவின் சாட்சியமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற நிலையில் செயற்பட்டாரா, பேரம் பேசுகின்ற ஒரு வணிகரைப் போல செயற்பட்டாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அவற்றுக்கு அப்பால், இந்த தாக்குதல்களுக்கான பொறுப்பை யாராவது ஒருவரின் தலையில் கட்டி, இந்த விவகாரத்தை மூடிமறைத்து விட அவர் எத்தனித்திருக்கிறார் போலவே தென்படுகிறது.
தெரிவுக்குழு விசாரணைகளில் அம்பலமாகும் இரகசியங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று எழுப்பப்படும் கூச்சல்களுக்கு மத்தியில், பாதுகாப்பு விடயத்தில் இருந்து வந்த அலட்சியம் மற்றும் ஓட்டைகளை இந்த விசாரணைகள், நாட்டு மக்கள் உணரும் நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றன.
இந்த விசாரணைகளின் முடிவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறியப்படாத பல பக்கங்களை வெளிப்படுத்துவதாகவும், அவரது இயலாமையை அம்பலப்படுத்துவதாகவும் மாத்திரம் இருக்கப் போவதில்லை. அதற்கும் அப்பால், மீண்டும் ஒரு அரசியல் பூகம்பத்துக்கும் இது வழிவகுக்கக் கூடும்.
– சுபத்திரா-