“அவங்க திருமணத்துக்கு வாழ்த்து சொல்லி நான் போஸ்ட் போட்டதைப் பார்த்துட்டு `ஏன்டா இப்படிப் பண்ணுனன்னு கேட்டாங்க. இது தப்புலாம் இல்லைம்மா.. சந்தோஷமான விஷயம்தான். எல்லோருக்கும் தெரியட்டும்’னு சொல்லவும் சிரிச்சாங்க.”
விவாகரத்து ஆன பின்னர் இரண்டாவது திருமணம் செய்யும் பெண்களை இந்தச் சமூகம் அவ்வளவு எளிதில் வரவேற்பதில்லை.
விவாகரத்து ஆன பின்னர் தந்தையையும், தாயையும் பிரியும் குழந்தை எப்படி வளரும் என்கிற கேள்வியை இந்தப் பொதுச்சமூகம் கட்டமைத்திருக்கிறது.
தனது தந்தையை விவாகரத்து செய்த பிறகு இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்ட தனது தாய்க்கு முகநூலில் வாழ்த்துச் சொல்லி உருகியிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த கோகுல் ஶ்ரீதர். இது குறித்து கூடுதல் தகவல் தெரிந்து கொள்வதற்காக அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
“என்னுடைய சொந்த ஊர் கேரளாவிலுள்ள கொல்லம். என்னுடைய சின்ன வயசிலேயே என் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையே நிறைய சண்டைகள் வர்றதைப் பார்த்திருக்கேன்.
அவங்களுக்குள்ளே கருத்து வேறுபாடுகள் அதிகமாகவே இருந்துச்சு. முதல் திருமணம் அவங்களுக்குச் சரியாக அமையலை.
பல துயரங்களை அனுபவிச்சாங்க. ஒருநாள் நெத்தியில் அடிபட்டு ரத்தம் வழிய நின்னுட்டு இருந்தாங்க. ஏன்மா இதையெல்லாம் சகிச்சிட்டு இங்கே இருக்கீங்கன்னு கேட்டேன்.
அவங்க அந்த வலியைக் கூடப் பொருட்படுத்தாமல் எல்லாமே உனக்காகத்தான். இப்போ மட்டுமல்ல கோகுல் இனியும் தாங்கிப்பேன்னு சொன்னாங்க. அந்தச் சம்பவம் என்னை ரொம்பவே பாதிச்சது.
என் அம்மா சூப்பரா படிப்பாங்க. ஸ்கூல் டீச்சரா வேலை பார்த்துட்டு இருந்தாங்க. அந்த வேலையைக் கூட எனக்காக விட்டுட்டாங்க.
நமக்காக மட்டுமே வாழுற அம்மாவுக்கு நாம என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வி எனக்குள்ளே ஓடிட்டே இருந்துச்சு.
என் கையைப் பிடிச்சு அந்த வீட்டிலிருந்து என் அம்மா என்னைக் கூட்டிட்டு வந்தப்போ கண்டிப்பா அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணினேன்.
நான் பத்தாவது படிக்கும்போது என் அம்மா விவாகரத்து வாங்கினாங்க. அதுக்கப்புறம் என் அம்மாவுடைய சொந்தக்காரங்க வீட்டில்தான் நானும், அம்மாவும் இருந்தோம்.
அம்மா கூடப் பிறந்தவங்க நிறைய பேர். அவங்க என்னையும் சரி, அம்மாவையும் சரி நல்லா பார்த்துக்கிட்டாங்க.
நான் இன்ஜினீயரிங் முடிச்சிருக்கேன். இப்போ படிப்புக்கு ஏற்ற வேலை தேடிட்டு இருக்கேன். இதுதவிர்த்து சமூகப் பிரச்னைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துட்டு இருக்கேன்.
அடிக்கடி அம்மாகிட்ட இரண்டாவது திருமணம் பண்ணிக்கமான்னு சொல்லிட்டே இருப்பேன். ஆனா, அம்மா சம்மதிக்கலை. அம்மாகூடப் படிச்சவர் அம்மாவைத் திருமணம் செஞ்சுக்க விரும்பினார்.
அவருக்கும் இது இரண்டாவது திருமணம். அம்மாவை ரொம்ப அன்பா பார்த்துப்பார்னு எனக்குத் தோணுச்சு. இதுக்கப்புறமாச்சும் நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை அவங்க வாழட்டுமேன்னு நினைச்சேன். அம்மாவைச் சம்மதிக்க வைச்சேன். இந்த முடிவுக்கு அம்மா குடும்பத்திலுள்ள எல்லோரும் பயங்கர ஹாப்பி.
அவங்க திருமணத்துக்கு வாழ்த்து சொல்லி நான் போஸ்ட் போட்டதைப் பார்த்துட்டு `ஏன்டா இப்படிப் பண்ணுனன்னு கேட்டாங்க.
இது தப்புலாம் இல்லைம்மா.. சந்தோஷமான விஷயம்தான். எல்லோருக்கும் தெரியட்டும்’னு சொல்லவும் சிரிச்சாங்க.
அவங்க முகத்தில் அந்தச் சிரிப்பை பார்க்கத்தான் தவம் இருந்தேன். அதைப் பார்த்துட்டேன். இப்போ அம்மாவும் ஹேப்பி, நானும் ஹேப்பி.
பலரும் இந்தப் பதிவைப் பார்த்துட்டு அம்மாவுக்குத் திருமண வாழ்த்துகள் சொன்னாங்க. எல்லோருக்கும் நன்றி! சிலர் எதிர்ப்பு தெரிவிச்சாங்க அவங்களோட வெறுப்பை நான் பெருசாவே எடுத்துக்கலை.
இப்போ அம்மா இடுக்கியில் சந்தோஷமா இருக்காங்க. நான் கண்ட கனவு இப்போ நிறைவேறிடுச்சி. இந்த சந்தோஷம் போதும் எனக்கு!” எனப் புன்னகைக்கிறார், கோகுல்.