உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைய விரும்பி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்நாட்டின் எல்லைப் பகுதிகளில் குவிந்தவாறு உள்ளனர்.
இப்படி வருபவர்களை லாரிகளில் கள்ளத்தனமாக கடத்தி அழைத்து வருவதற்கு சில இடைத்தரகர்களும் செயல்படுகின்றனர்.
ஆயிரக்கணக்கான டாலர்களை கட்டணமாக பெற்று, இப்படி அழைத்து வரப்படும் அகதிகள் மெக்சிகோ நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள பாலைவனத்தில் இறக்கி விடப்படுவதுண்டு.
அவ்வகையில், இந்தியாவை சேர்ந்த ஒரு தாயும் அவரது 6 வயது மகளும் இடைத்தரகர்கள் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் உள்ள அரிசோனா பாலைவனப்பகுதியை வந்தடைந்தனர்.
பாலைவனத்தில் சுட்டெரிக்கும் 108 டிகிரி வெயிலில் தாயும் மகளும் சுற்றித் திரிந்துள்ளனர். இவர்களின் காலடித்தடங்களை மோப்பம் பிடித்த அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள் தீவிரமாக பின்தொடர்ந்த நிலையில் தாகத்தில் தவித்த தனது 6 வயது மகளுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வருவதற்காக அடைக்கலம் தேடிவந்த இந்தியப் பெண் வேறொரு பெண்ணுடன் புறப்பட்டு சென்றார்.
அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப்பகுதியில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தூரத்தில் லூக்வில்லி என்ற இடத்தின் அருகே கொளுத்தும் வெயிலில் தனியே இருந்த குருப்ரீத் கவுர் என்ற அந்த சிறுமி நாவறண்டுஇ துடிதுடித்து உயிரிழந்தார்.
இதற்குள் அவர்கள் இருந்த இடத்தை ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடித்த அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள் இந்த மரணத்துக்கு ஆள்கடத்தல் ஏஜெண்ட்டுகள் தான் காரணம் என்று குறை கூறுகின்றனர்.