சபரிமலை கோயிலுக்கு பெண்கள் போகலாமா… கூடாதா என்கிற சர்ச்சை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், நான்கு திருநங்கைகள் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று ஐயப்பனைத் தரிசித்தனர்.
அந்த நால்வருள் ஒருவர்தான் கேரளாவைச் சேர்ந்த திருப்தி ஷெட்டி. திருநங்கையான திருப்தி ஷெட்டி, ஹிரித்திக் என்கிற திருநம்பியை காதலித்து கரம் பிடித்திருக்கிறார்.
இவர்களுடைய காதல் திருமணம் குறித்துக் கேட்டதும், புன்னகைத்து பேசத் தொடங்கினார், திருப்தி.
திருநங்கை திருப்தி – திருநம்பி ஹிரித்திக்
என்னுடைய சொந்த ஊர் கேரளா. என் சின்ன வயசிலேயே எனக்குள்ள இருந்த பெண்மையை உணர ஆரம்பிச்சேன்.
ஆறாம் வகுப்பு வரைக்கும்தான் பள்ளிக்கூடத்துக்குப் போனேன். அதுக்கும் மேல என்னைப் படிக்க அனுப்பலை. வேலை பார்த்துட்டு இருந்தேன். வீட்டுல யாரும் என்னைப் புரிஞ்சிக்கலை.
ஒரு கட்டத்துக்கு மேல என் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறிட்டேன். அப்புறம் என் எதிர்காலமே கேள்விக்குறியாகிடுச்சு. என்னை மாதிரியான திருநங்கைகள் சமூகத்தோட சேர்ந்தேன்.
ரெஞ்சு அம்மாதான் என்னை அவங்க பொண்ணா தத்தெடுத்துக்கிட்டாங்க. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன்.
வாழ்க்கையில் எதுக்காகவும் துவண்டு போகக் கூடாதுங்குறதுல ரொம்பவே உறுதியா இருந்தேன். ரொம்பக் கடினமா உழைக்க ஆரம்பிச்சேன்.
சொந்தமா ஹேண்ட்கிராஃப்ட் தொழில் பண்றேன். கைவினைப் பொருள்கள், ஆடைகளை விற்பனை பண்றேன்.
கேரளாவின் முதல் திருநங்கை தொழில்முனைவோர் என்கிற பட்டத்தை வாங்கியிருக்கேன். அதுமட்டுமில்லைங்க ‘Thripthi Handicrafts’ன்னு பிளே ஸ்டோர் ஆப் ஓப்பன் பண்ணியிருக்கேன்.
இதுதவிர, நிறையப் பள்ளி, கல்லூரிகளுக்கு தன்னம்பிக்கை பேச்சாளராகவும் போறேன். எனக்கு என் வேலையில் மட்டும்தான் கவனம் இருந்துச்சு” என்றதும் ஹிரித்திக் தொடர்ந்தார்.
இவங்க, கடந்த ஆண்டு ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அங்கே வெச்சுதான் இவங்களைப் பார்த்தேன்.
பார்த்ததுமே மனசுக்குள்ளே ஒரு ஈர்ப்பு இருந்துச்சு. அவங்க ரொம்பவே கேஷுவலா பேசுனாங்க. ஆனா, நான் அவங்களை நேசிக்க ஆரம்பிச்சேன்.
இதை என் ஃப்ரெண்டுகிட்டதான் முதல்ல சொன்னேன். எனக்காக திருப்திகிட்ட அவங்களும் பேசுனாங்க. ஆனா, திருப்தி சம்மதிக்கலை. அதுக்கப்புறம் நட்பா அவங்க என்கூட பேசுனாங்க. என் மனசுக்குள்ளே அவங்க மேல இருந்த காதல் அதிகமாகிட்டே போச்சு என்றவரை நிறுத்தி, திருப்தி தொடர்ந்தார்.
என்னைப் பொறுத்த வரைக்கும் நல்லா சம்பாதிக்கணும்… லைஃப்ல நல்ல நிலைமைக்குப் போகணும்கிறதில் ரொம்பவே வைராக்கியமா இருந்தேன்.
காதலெல்லாம் இப்போதைக்கு தேவையில்லைனு நினைச்சேன். என்னைத் தத்தெடுத்த ரெஞ்சும்மாகிட்ட இவர் பொண்ணு கேட்டார். பிறகு, ரெஞ்சும்மா என்கிட்ட வந்து இவருக்காகப் பேசினாங்க.
அவங்க பேசும்போதும் நான் சம்மதிக்கலை. எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். எனக்கும் திருமணம் குறித்த கனவுகளெல்லாம் இருந்துச்சு.
ஒரு பையனை திருமணம் செஞ்சுக்கிட்டா எத்தனை நாள்கள் அவங்க என்கூட வாழுவாங்கன்னே தெரியாது. அதுக்கு நம்ம கம்யூனிட்டியைச் சேர்ந்தவங்களையே திருமணம் செஞ்சுக்கலாமேன்னு முடிவெடுத்தேன்.
ஹிரித்திக்கும் என்னை மாதிரி பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ஆபரேஷன் பண்ணியிருக்கார். அவர் மேல எனக்கு எப்பவுமே மரியாதை உண்டு. அதனால் இவரையே திருமணம் செஞ்சுக்கலாம்னு முடிவெடுத்தேன்” என்று புன்னகைத்தார்.
என் திருமணத்தை கோயில்ல நடத்தணும்னு ஆசை. அதே மாதிரி கோயில்ல எங்களுடைய திருமணம் நடந்துச்சு. சாயங்காலம் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தோம்.
எங்களுடைய திருமணத்துக்கு எங்க திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த பலரும் வந்திருந்தாங்க. நடிகர் ஜெயசூரியா, இயக்குநர் ரஞ்சித் சங்கர்னு திரைத்துறை சார்ந்த நண்பர்களும் வந்திருந்தாங்க.
மலையாள மீடியா நண்பர்கள் எல்லோரும் எங்க திருமணத்தில் கலந்துகிட்டது மிகப்பெரிய சந்தோஷம் என்றவரிடம் அடுத்தகட்ட பிளான் குறித்துக் கேட்டோம்.
ஹிரித்திக் டிரான்சிலேஷன் ஒர்க் பண்ணிட்டு இருந்தாரு. இப்போ என்கூட பிசினஸில் ஹெல்ப் பண்றார். இரண்டு பேரும் சேர்ந்து பிசினஸை அடுத்தடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகணும்.
என்னால குழந்தை பெத்துக்க முடியாதுங்குறதுனால இரண்டு குழந்தைங்களை அடுத்த வருஷம் தத்தெடுத்து வளர்க்கணும்னு நாங்க முடிவெடுத்திருக்கோம்.
எனக்கு நிறைய படிக்கணும்னு ஆசை. ஆனா, என்னால படிக்க முடியலை. அதனால, என் பசங்களை நல்லா படிக்க வைக்கணுங்கிறது என் கனவு. என் கனவுகளுக்கு சிறகு கொடுத்தவர் என் ஹிரித்திக் எனப் புன்னகைக்கிறார், திருப்தி!
வாழ்த்துகள் திருப்தி – ஹிரித்திக்