தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 69 பேர் போட்டி களத்தில் உள்ளனர். இரு அணியினரும் வாக்குச் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஷால் அணி சார்பாக தேர்தல் பிரசாரத்துக்காக ஒரு விடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நடிகர் சங்கத்தில் முறைகேடு செய்ததாகக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தனது தந்தையைத் தவறாகச் சித்தரித்ததற்குக் கண்டனம் தெரிவித்து நடிகை வரலட்சுமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

varu_vishal9191ccஅன்புள்ள விஷால்,

உங்களுடைய சமீபத்திய தேர்தல் பிரசார விடியோவில் எந்தளவுக்கு கீழ்த்தரமாகச் சென்றுள்ளீர்கள் என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன்.

உங்கள் மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விட்டது. உங்களால் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில் என் தந்தையின் கடந்த காலத்தைப் பற்றி முத்திரை குத்துகிறீர்கள்.

சட்டத்தை மதிப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால் அதே சட்டம் தான் எந்தவொரு மனிதனும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி தான் என்கிறது.

என் தந்தை குற்றவாளி என்றால் இந்நேரம் அவர் தண்டனை பெற்றிருப்பார். எனவே, கொஞ்சம் நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள். பக்குவமாக இருங்கள்.

இதுபோன்ற கேவலமான விடியோவை வெளியிடும்போது அது உங்களுடைய தகுதியை வெளிப்படுத்துகிறது.

உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. நீங்கள் வளர்ந்த விதம் அப்படி. நீங்கள் ஒரு புனிதர் போல நடந்துகொள்ளவேண்டாம்.

உங்களுடைய இரட்டை வேடத்தையும் பொய்களையும் அனைவரும் அறிவார்கள். நீங்கள் புனிதர் என்றால் உங்களுடைய பாண்டவர் அணியிலிருந்து சிலர் வெளியேறி இன்னொரு அணியை உங்களுக்கு எதிராக உருவாக்கியிருக்க மாட்டார்கள்.

உங்களுடைய செயலில் பெருமிதப்படுபவர் என்றால் அதைச் சொல்லி வாக்கு கேட்கலாமே? இந்தமுறை தேர்தலில் போட்டியிடாத என் தந்தையை ஏன் கீழிறக்க வேண்டும்?

உங்களைப் பற்றிய பலருடைய கருத்து தவறாக இருக்கமுடியாது. இத்தனை காலமும் உங்களை மதித்தேன்.

ஒரு தோழியாக எப்போதும் ஆதரவாக இருந்தேன். ஆனால் நீங்கள் இதை இவ்வளவு தூரம் கொண்டுவந்துவிட்டீர்கள்.

நீங்கள் சாதித்தவற்றைப் பற்றி நேர்மறையான விடியோவை வெளியிடுவதற்குப் பதிலாகத் தரம் தாழ்ந்த பிரசாரத்தில் ஈடுபடுகிறீர்கள்.

திரைக்கு வெளியேயாவது நீங்கள் நல்ல நடிகர் என எண்ணுகிறேன். நீங்கள் சொல்வது போல, உண்மை வெல்லட்டும். என்னுடைய வாக்கை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்று கூறியுள்ளார்.

Share.
Leave A Reply