யாழில் மதுபோதையில் வீதியில் வில்லங்கம் புரிந்த ஒருவரை இரண்டு யுவதிகள் நையப்புடைத்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

மதுபோதையில் சைக்கிளில் சென்ற நபர், மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் யுவதிகளை பயணத்தை தொடர முடியாதவாறு சேட்டை விட்டதால் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

சில தினங்களின் முன்னர், யாழ் கோப்பாய் இராஜவீதி பகுதியில் மதிய நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது.

மதுபோதையில் துவிச்சக்கர வண்டியில் சென்ற சுமார் 50 வயது ஆசாமியொருவர், வீதியில் செல்பவர்களிற்கு இடையூறாக குறுக்கும் நெடுக்குமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

பின்னால் வருபவர்கள், பயணத்தை தொடர முடியாதபடி அவர் சேட்டை விட்டபடி சென்றார். இதனால் பெரும் சிரமத்தின் மத்தியில்தான் அவரை கடந்து சென்று கொண்டிருந்தனர் பயணிகள்.

இரண்டு யுவதிகள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். பின்னால் யுவதிகள் வருவதை கண்டதும் உற்சாகமான ஆசாமி, அவர்கள் தன்னை கடக்க முடியாதபடி வீதியில் அங்கும் இங்குமாக ஓட்டம் காட்டியபடி இருந்தார்.

சிறிது நேரமாக ஆசாமியை கடக்க முயன்று முடியாமல் யுவதிகள் தவித்தபடியிருந்தனர். கோர்ன் அடித்தும் ஆசாமி அசரவில்லை. மேலும் உற்சாகமாகி, வேகமாக வீதியை மறித்து ஓட்டம் காட்டினார்.

பொறுமையிழந்த யுவதிகள், அவரை கடக்க முற்பட, ஆசாமியும் சைக்கிளை அவர்களிற்கு குறுக்கே விட விபத்து நேர்ந்தது.

இதனால் ஆத்திரமடைந்த யுவதியொருவர் தான் கையில் வைத்திருந்த குடையால் ஆசாமியை சரமாரியாக தாக்க தொடங்கினார்.

மற்றைய யுவதியும் தாக்க, திடீர் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத ஆசாமி சைக்கிளை நடுவீதியில் போட்டு விட்டு அருகிலுள்ள தோட்டத்திற்குள் விழுந்து தப்பியோடினார்.

தோட்ட வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் ஓடிச்சென்று அடைக்கலம் தேடினார். வீதியால் சென்றவர்களும் இந்த அதிரடி தாக்குதலை பார்த்து ரசித்தார்கள்.

ஆசாமி தப்பியோடியதும் யுவதிகள் கிளம்பி சென்று விட்டனர்.

இதன் பின்னர்தான் ஆசாமி நிம்மதி பெருமூச்சு விட்டார். அவரை ஆசுவாசப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர் தோட்ட வேலை செய்பவர்கள்.

Share.
Leave A Reply