“இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்…” என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை பலருடனான உரையாடல் மூலம் அறிய முடிகின்றது.
இது உண்மையில் “அறியாமை, இனவாதம், முட்டாள்தனம்” கலந்த கற்பனாவாதக் கருத்து. பாமரர் முதல் படித்தவர் வரையில் இந்தத் தப்பெண்ணம் நிலவுகின்றது.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர்கள் குறித்தும் இது போன்றதொரு தப்பெண்ணம் சிங்களவர் மத்தியில் இருந்தது.
அதாவது “தமிழர் மீது கைவைத்தால் இந்தியா தலையிடும்…” என்று நம்பினார்கள். அவர்களைப் பொறுத்த வரையில் (ஈழத்)தமிழர்கள் எல்லோரும் இந்துக்கள். இந்தியாவில் இருப்பவர்களும் இந்துத் தமிழர்கள் தான்.
இன்று இதைக் கேட்டு பலர் சிரிக்கலாம். ஆனால், ஐம்பதுகள் முதல் எண்பதுகள் வரையான காலகட்டத்தில், பெரும்பாலான சிங்களவரின் சிந்தனை அவ்வாறாகத் தான் இருந்தது.
அவர்களும் தம்மை ஒடுக்கப்படும் சிறுபான்மை இனமாகக் கருதிக் கொண்டனர். பெரும்பான்மை இனமான தமிழர்கள் இந்திய உதவியுடன் சிங்களவரை அழித்து விடுவார்கள் என்று அஞ்சினார்கள். குறிப்பாக, இந்திய – இலங்கை ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் தான் இந்த சிந்தனையில் மாற்றம் வந்தது.
ஆகையினால் “முஸ்லிம் நாடுகள் தலையிடும்… கேள்வி கேட்கும்…” என்றெல்லாம் நினைத்துக் கொள்வது ஒரு முட்டாள்தனமான இனவாதக் கருத்து.
நவீன உலகில் எல்லா நாடுகளும் தத்தமது அரசியல், பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றன. முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமை, கிறிஸ்தவ நாடுகளின் ஒற்றுமை என்று எதுவும் கிடையாது.
அந்த நாடுகளே தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. ஏனென்றால் மத உணர்வை விட, இன உணர்வை விட பண உணர்வே முக்கியமானது. அது தான் யதார்த்தம்.
இந்தியாவில், 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப் பட்ட பின்னர் நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர்.
2002 ம் ஆண்டு, குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையில் முஸ்லிம்கள் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப் பட்டனர்.
அதை விட முஸ்லிகளுக்கு எதிரான அரச பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மாட்டிறைச்சி வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப் பட்ட முஸ்லிம்கள் ஏராளம்.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை எந்த முஸ்லிம் நாடு தட்டிக் கேட்டது? இதன் எதிர்விளைவாக, அயலில் உள்ள முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தானும், பங்களாதேஷும் இந்தியா மீது படையெடுத்தனவா?
வளைகுடா முஸ்லிம் நாடுகள் இந்தியாவுக்கு ஒரு சொட்டு எண்ணை கொடுக்க மாட்டோம் என்று பகிஷ்கரித்தனவா?
தமது நாடுகளில் வேலை செய்யும் இலட்சக் கணக்கான இந்தியத் தொழிலார்களை, துறை சார் நிபுணர்களை திருப்பி அனுப்பி விட்டனவா? குறைந்த பட்சம், எல்லா முஸ்லிம் நாடுகளும் ஒன்று சேர்ந்து இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்புகளை முறித்துக் கொண்டனவா? இல்லை. இதில் எதுவுமே நடக்கவில்லை.
அன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு காரணமான நரேந்திர மோடி, இன்று இந்தியாவின் பிரதமராக இருக்கிறார்.
அவரது வெளிநாட்டுப் பயணங்களில் பல முஸ்லிம் நாடுகளும் அடங்கி இருந்தன. அந்த நாடுகளின் தலைவர்கள் எல்லாம், மோடியின் இரத்தக் கறை படிந்த கரங்களை பிடித்துக் குலுக்கி வரவேற்றார்கள். அந்த முஸ்லிம் நாடுகளின் அரசாங்கத்தில் இருந்த ஒருவர் கூட எதிர்ப்புக் காட்டவில்லை.
அதே நேரம், இனப்படுகொலை குற்றவாளி நரேந்திர மோடி தனது நாட்டுக்கு வரக் கூடாது என்று கிறிஸ்தவ அமெரிக்கா விசா கொடுக்க மறுத்தது.
முஸ்லிம் இனப்படுகொலையில் ஈடுபட்ட, ஒரு காலத்தில் மோடி உறுப்பினராக இருந்த இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். அமைப்பை, வெளிநாட்டு பயங்கரவாத இயக்கம் எனத் தடை செய்தது.
நரேந்திர மோடி இன்னொரு கிறிஸ்தவ நாடான பிரித்தானியாவுக்கு சென்ற நேரம் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வெளியில் தலைகாட்டவில்லை.
இலங்கை அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தார்கள் என்றால், அதற்கு காரணம் முஸ்லிம் நாடுகளின் செல்வாக்கு அல்ல.
முஸ்லிம் அமைச்சர்களை வைத்திருந்தால், முஸ்லிம் நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளைப் பேணலாம். அது மட்டுமல்ல, தனது நாட்டில் இனப் பிரச்சினை இல்லையென்று உலகை ஏமாற்றுவதற்கான பேரினவாத அரசின் தந்திரம்.
அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை சேர்த்துக் கொண்டுள்ளதாக காட்டி, இங்கே சிறுபான்மையினருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்லி வருகின்றது. இலங்கையில் தேர்தல் ஜனநாயகம் சிறப்பாக இயங்குவதாக காட்டிக் கொள்கிறது.
-கலையரசன்-