சமயபுரம் அருகே நேற்று அதிகாலையில் சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 ஆசிரியைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
சமயபுரம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் திருநகர் ஆஸ்பிட்டல் காலனியைச் சேர்ந்த சேவியர்ராஜ் என்பவரின் மகன் பிலிக்ஸ் ஆன்டனி (வயது 40). இவருடைய மனைவி ஸ்டெல்லா ஜெயந்தி (32). இவர்களின் மகள்கள் ஜார்ஜியா (16), கிளிடாஸ் பெனட் (13). பிலிக்ஸ் ஆன்டனி தனது உறவினர்களுடன் காரில் வேளாங்கண்ணி ஆலயத்துக்கு செல்ல திட்டமிட்டார்.

201906160055355991_Early-morning-crashes-near-Samayapuram-Car-collides-with_SECVPF.gif
இதற்காக அவர், தனது சகோதரர் வர்க்கீஸ் (47) மற்றும் உறவினர்களான அருள்ராஜின் மனைவி எமல்டா ஜூலியட் (35), அருள்ராஜின் மகள்கள் இன்டிப்பென்டினா வர்ஜின் (12), ஜோஸ்பின் ஆல்பினா (10) மற்றும் ரெஜினாஜோன் ஆர்ப் (46) ஆகியோரை அழைத்திருந்தார்.

இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் மேட்டூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர். காரை பிலிக்ஸ் ஆன்டனி ஓட்டினார்.

நேற்று அதிகாலை திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த மண்ணச்சநல்லூர் மான்பிடிமங்கலம் பகுதியில் சேலம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பு கம்பியில் மோதி, பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் கார் முற்றிலும் உருக்குலைந்தது.

காரில் பயணம் செய்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதனால் அவர்கள் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பினர்.

சத்தம்கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

இதில் பிலிக்ஸ் ஆன்டனியின் மனைவி ஸ்டெல்லா ஜெயந்தியும், அருள்ராஜின் மனைவி எம்ல்டா ஜூலியட்டும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த மற்றவர்கள் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த ரெஜினாஜோன்ஆர்ப், வலது கால் துண்டிக்கப்பட்ட நிலையிலிருந்த இன்டிப்பென்டினா வர்ஜின் ஆகிய இருவருக்கும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து பற்றி தகவலறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக், ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்னர், உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான எம்ல்டா ஜூலியட், ஸ்டெல்லா ஜெயந்தி ஆகியோர் மேட்டூரில் உள்ள புனித மரியன்னை தொடக்கப்பள்ளியில் ஆசிரியைகளாக வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Share.
Leave A Reply