சமபால் ஈர்ப்பு காரணமாக 2 சிறுமிகள் தாலி கட்டி திருமணம் செய்துகொண்ட சம்பவம் திருக்கோவிலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் இருக்கும் உலகளந்த பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் (1.6.2019) காலை 2 சிறுமிகள் கையில் தாலி மற்றும் மாலையுடன் நின்றிருந்தனர்.
17 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் கையில் தாலியுடனும், படபடப்புடனும் அதிகாலை 6 மணிக்கு நின்றிருந்ததால் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சிறிது நேரத்தில் அவர்களில் ஒரு சிறுமி மற்றொரு சிறுமியின் கழுத்தில் தாலி கட்டியதோடு, காலில் மெட்டி போட்டு மாலை மாற்றிக்கொண்டதைப் பார்த்ததும் அதிர்ந்து போன அங்கிருந்த பக்தர்கள், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனே கோயிலுக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 2 சிறுமிகளையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடலூரைச் சேர்ந்த அந்த 2 சிறுமிகளும் ஒரே பள்ளியில் ப்ளஸ் டூ வரை ஒன்றாக படித்ததும், அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும், இருவரும் நெருங்கிப் பழகிவிட்டதால் சமபால் ஈர்ப்பாளராக மாறிவிட்டதால், பள்ளிப் படிப்புக்குப் பிறகு ஏற்படும் பிரிவை ஏற்க முடியாமல் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள்.
அதன்படி `ஆங்கில பேச்சு வகுப்புக்குச் செல்கிறோம்’ என்று கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள் சிறுமிகள்.
தனிமையில் பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்த சிறுமிகள் திருக்கோவிலூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
தாலி வாங்குவதற்கு பணம் வேண்டுமென்பதால் கழுத்தில் இருந்த தங்கச் செயினை கழற்றி முதல் நாளே 20,000 ரூபாய்க்கு விற்று, அந்தப் பணத்தில் தாலியை வாங்கி மஞ்சள் கயிற்றில் கட்டியதோடு, மெட்டியையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.
அதிகாலை நேரத்தில் கோயிலில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்துதான் அந்தச் சிறுமிகள் அன்றைய தினம் தாலி கட்டிக்கொண்டார்களாம்.
தொடர்ந்து சமபாலின ஈர்ப்பு குறித்து அந்தச் சிறுமிகளுக்கு வி்ளக்கி அறிவுரை வழங்கிய காவல்துறையினர், அவர்களின் பெற்றோர்களை அழைத்து ஒப்படைத்தனர்.
காவல்நிலையத்தில் அந்தப் பெற்றோர்கள் கண்ணீர் வடித்தது அனைவரையும் கலங்க வைத்துவிட்டது.
வளரிளம் பருவத்தில் இயல்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து பெற்றோர்கள் பேச ஆரம்பித்தாலே இப்படியான நிகழ்வுகளைத் தவிர்க்கலாம்