* தாக்குதலின் அனைத்து விடயங்களும் இந்தியாவுக்குத் தெரியும்.
* கோத்தா தேர்தலில் களமிறங்கமாட்டார்
* அபுதாபி புலனாய்வு அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டது ஏன்?
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் முஸ்லிம்களை பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே கோத்தபாய ராஜபக் ஷ தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் நெருக்கமான தொடர்பை பேணி வந்ததாகவும் மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக் ஷ களமிறங்கப்போவதில்லை எனவும் அவருக்கு பதிலாக பசில் ராஜபக் ஷவே களமிறங்குவார் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியாக களமிறங்க ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் அனைத்து விடயங்களும் இந்திய அரசாங்கத்துக்கு தெரியும். சம்பவம் தொடர்பிலான சகல உண்மைகளையும் இந்திய அரசாங்கம் விரைவில் வெளிப்படுத்தும் எனவும் கூறினார்.
அந்த செவ்வியின் முழு வடிவம் வருமாறு,
கேள்வி: இலங்கையில் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு குறித்தும் அதன் செயற்பாடுகள் குறித்தும் நீங்கள் அறிந்திருந்தீர்களா?
நிச்சயமாக. 1994 ஆம் ஆண்டிலிருந்து தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு ஒரு புற்று நோயை போன்று எம்மை தொற்றிக்கொண்டது.
இதற்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே குரல்கொடுத்தோம். 94 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்தின் நிறுவுனர் பி.ஜெய்னுல் ஆப்தீன் இலங்கைக்கு வந்து கிழக்கு மாகாணத்தில் பல அநியாயங்களை செய்தார்.
உடனடியாக இந்த பி.ஜெய்னுல் என்ற விஷம் கொண்ட நபரை அப்போதைய ஆளுநர் அலவி மௌலானாவுடன் சேர்ந்து நாடு கடத்தினோம். இதை வெளிப்படையாக கூற நான் அஞ்சமாட்டேன்.
இதன் பின்னர் பி.ஜெய்னுல் ஆப்தீன் இலங்கைக்கு வருவதற்காக நான்கு முறை முயற்சித்துள்ளார். தற்போது 5ஆவது முறையாகவும் இலங்கைக்கு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அறிய வந்துள்ளது.
அதாவது மருத்துவ தேவைக்காக இலங்கை வருவதற்கு அவர் விண்ணப்பித்துள்ளார். இந்தியாவில் இல்லாத மருத்துவ வசதியா இலங்கையில் உள்ளது?. ஏற்கனவே தமிழ்நாட்டை நாசமாக்கிய பி.ஜெய்னுல் ஆப்தீன், எமது மக்களின் நிம்மதியையும் கெடுத்துவிட்டார்.
இவரின் செயற்பாடு முற்றிலும் ஆபத்தானது. இவரால் தமிழாக்கம் செய்யப்பட்ட குர்ஆனே தற்போது சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு மஹிந்த ராஜபக் ஷ, கோத்தபாய ராஜபக் ஷ மற்றும் உதய கம்பன்பில போன்றோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி: நாட்டில் ஏற்பட்ட முழு பிரச்சினைக்கும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பே காரணம் என நீங்கள் கருதுகின்றீர்களா?
ராஸிக்கை ஏன் கைது செய்யவில்லை
ஆம். சகல பிரச்சினைகளுக்கும் இவர்களே காரணம். இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவர்களின் காரணமாக பள்ளிவாசல்களுக்குள்ளும் இன்று பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினுள் இருந்த உட்பூசல்கள் காரணமாக பல பிரிவுகளாக இவர்கள் பிரிந்தார்கள்.
பிரிந்து ஒவ்வொரு இடங்களிலும் காணி, கட்டிடங்களை வாங்கினார்கள். இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வந்தது என்று தெரியவில்லை.
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று உருவாகிய என்.டி.ஜே., எஸ்.டி.ஜே., சி.பி.ஜே. எஸ்.எல்.டி.ஜே என ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி கொண்டிருக்கின்றார்கள். பாரம்பரியமாக சிங்கள மக்களோடு ஒற்றுமையாக வாழ்ந்து வந்த வாழ்க்கையை சிதறடித்துள்ளார்கள்.
சிலோன் தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ராஸிக்கை ஏன் கைது செய்யவில்லை. அப்துல் ராஸிக்கும் அரசாங்கமும் ஒன்றாக இணைந்தே வேலை செய்கின்றார்கள்.
கேள்வி: குறித்த அமைப்பினர் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவித்தீர்களா?
94 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வந்தோம். இதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் திகதி சஹ்ரானை உடனடியாக கைது செய்யுமாறு பகிரங்கமாக ஊடகவியலாளர்
சந்திப்பின் மூலம் கோரிக்கை விடுத்தேன். ஆனால், இவரை கைது செய்யாமலிருந்தது அரசாங்கத்தின் தவறு. சஹ்ரான் தொடர்பில் யாரும் அறிந்திருக்கவில்லை என அரசாங்கத்தில் இருக்கும் யாராலும் கூற முடியாது. ஜனாதிபதியும் இதனை அறிந்து வைத்திருந்தார்.
தாக்குதலுக்கு முதலில் ஆலயங்களே இலக்கு
கேள்வி: குறித்த அமைப்பினரால் உங்களுக்கு அச்சுறுத்தல் ஏதேனும் விடுக்கப்பட்டதா?
அச்சுறுத்தல் இருக்கின்றது. ஆனால், பொலிஸாரால் எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. நாங்கள் பாரம்பரியத்தை கொண்ட முஸ்லிம் இனத்தவர்கள். 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் முதலில் ஆலயங்களே இலக்கு வைக்கப்பட்டன. இதன் பின்னணியில் சர்வதேச உள்ளீடு இருக்கின்றதா என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ஒரு பிச்சைக்கார இயக்கம். இந்த இயக்கத்தின் பெயரை வைத்துக்கொண்டு யார் பின்னணியில் செயற்படுகின்றார்கள் என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
மேலும் இதுதொடர்பில் ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். ”21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் முஸ்லிம்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இதுவொரு இரகசிய உடன்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்” என கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்தும் கூறியிருந்தார்.
1915 ஆம் ஆண்டு சிங்கள, முஸ்லிம் மக்கள் இடையே கலவரம் ஒன்று ஏற்பட்டது. இதன் 100 வருட பூர்த்தியை 2015 ஆம் ஆண்டு கொண்டாடுவோம் என 2014 ஆம் ஆண்டு ஊடகங்களின் முன்பாக உதய கம்பன்பில தெரிவித்திருந்தார்.
ஆனால், ஆட்சி மாறியதால் இவர்களால் அதனை செய்ய முடியாமல் போய்விட்டது. தற்போது இந்த தாக்குதல் சம்பவத்தை சாதகமாக்கிக் கொண்டே அண்மையில் முஸ்லிம் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன. இதில் உதய கம்பன்பிலவின் தேசிய அமைப்பாளரும் உடன்பட்டுள்ளார். ஆனால் அரசாங்கம் அவரை கைது செய்யவில்லை.
அப்துல் ராஸிக்கை கைது செய்யாதது போன்றே மது மாதுவ அரவிந்தையும் அரசாங்கத்தால் கைது செய்ய முடியாமல் போனது. இவர்கள் பாதுகாப்பு தரப்பின் இரகசிய புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவர்களா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது.
கேள்வி: இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் ஒப்பந்தம் இருக்கின்றது எனவும், சர்வதேசம் இருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டினீர்கள். இதேவேளை இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் ஐ.எஸ் அமைப்பை ஒழிப்பதற்கு மேற்குலக நாடுகள் கூட்டாக முன்வந்துள்ளன. இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
இலங்கைக்கு யாரும் உதவி செய்யலாம். இலங்கையில் தாக்குதல் இடம்பெற்று முடிந்தவுடன் முதன் முதலாக எப்.பி.ஐ என அறியப்படும் அமெரிக்க பொலிஸ் அமைப்பான ‘பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்” என்ற அமைப்பு நாட்டுக்குள் வந்திறங்கியது. இவர்கள் ஏன் அவசரமாக வரவேண்டும்? ஏன் இஸ்ரேல் அவசரமாக வந்தது? இதுதொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும்.
ஆனால், அபுதாபியிலிருந்து புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 6 அதிகாரிகள் இலங்கைக்கு வந்தார்கள். இவர்களை சந்தித்த எமது அரசாங்கம் உங்களின் உதவி எமக்கு தேவையில்லை என திருப்பி அனுப்பிவிட்டது.
அல் கொய்தா, ஐ.எஸ் அமைப்பு தொடர்பில் அரபு நாடுகளுக்கு நன்றாக தெரியும். இவற்றையெல்லாம் பார்க்கும் போது பின்னணியில் வேறு ஒரு வலைப்பின்னல் இருக்கின்றது என எண்ணத் தோன்றுகின்றது.
மோடியின் விஜயம் பற்றி….
கேள்வி: இரண்டாவது முறையாகவும் பதவியேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, முதன் முதலாக இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்தது. ஐ.எஸ் அமைப்பானது இலங்கைக்கு மாத்திரமல்ல இந்தியாவுக்கும் பாரிய அச்சுறுத்தல்.
இந்த அமைப்பை இல்லாதொழிக்க இலங்கைக்கு இந்தியா உதவியாக இருக்கும் என மோடி விஜயத்தின் போது தெரிவித்திருந்தார். மோடியின் கருத்தையும் அவரது விஜயத்தையும் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
இந்திய அரசாங்கத்துக்கு அனைத்து விடயங்களும் தெரியும். இந்த சம்பவம் தொடர்பிலான சகல உண்மைகளையும் விரைவில் அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
ஐ.எஸ். கொடியுடன் கிழக்கில் பேரணி
கேள்வி: கடந்த அரசாங்க காலத்தில் நீங்கள் கைது செய்யப்பட்டதுடன் கடுமையான விமர்சனத்துக்கும் ஆளானீர்கள். அதற்கு தௌஹீத் ஜமாஅத் அமைப்பு காரணமென கருதுகின்றீர்களா?
இல்லை. எனது கைதுக்கும் தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இந்த அமைப்பு பெரிய ஒரு இயக்கமில்லை. ஐ.எஸ். அமைப்பை போன்று சீரழிந்த இயக்கம் ஒன்றே இந்த தௌஹீத் ஜமாஅத் அமைப்பு.
பாரம்பரியத்தை கொண்ட முஸ்லிம்கள் 95 வீதம் இந்த நாட்டில் இருக்கின்றார்கள். தௌஹீத் ஜமாஅத் அமைப்பில் உள்ளவர்கள் அடிப்படைவாதத்தை கொண்டவர்கள். 120 வீடுகளுக்கு தீவைத்தனர்.
ஐ.எஸ் கொடியுடன் கிழக்கில் பேரணி சென்றார்கள். பொலிஸ் புலனாய்வு பிரிவு என்ன செய்துகொண்டிருந்தது. அரசாங்கம் ஒன்று இருந்ததா இல்லையா என கூட தெரியவில்லை. இதைதான் தெரிவுக்குழுவிடமும் கேட்டேன்.
இந்த தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தொழுகைகளும் எம்முடன் ஒப்பிடும் போது முற்றிலும் வேறுபட்டது. அரசாங்கத்தில் சிலர் இந்த அமைப்புக்கு ஆதரவாக இன்னமும் குரல் கொடுக்கின்றார்கள்.
கேள்வி: தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிற்கும் தொடர்புள்ளதாக தெரிவித்துள்ளீர்களே?
நல்ல தொடர்பு இருக்கின்றது. கோத்தபாய ராஜபக் ஷ கட்டளைக்கு இணங்கவே ஊர்வலம் சென்றார்கள். இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் முதன் முதலாக ஆண், பெண், பிள்ளைகள் என அனைவரையும் வீதிக்கு இறக்கி சீரழித்தவர்கள் தான் இந்த தௌஹீத் ஜமாஅத் அமைப்பு .
தெரிவுக் குழு முன்னிலையில் அஸாத் சாலி காட்டி கொடுத்து விட்டார் என நினைப்பார்கள். ஆனால் நான் யாரையும் காட்டி கொடுக்கவில்லை. கள்வனை கள்வன் என்றும் தீவிரவாதியை தீவிரவாதி என்றும் வெளிப்படையாக கூறியுள்ளேன்.
கோத்தபாய ராஜபக் ஷ தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்பை பேணியதற்கான நோக்கம் எதுவாக இருந்திருக்கலாம்?முஸ்லிம்களை பிரிக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். இப்போது முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து பதவி விலகியதே இந்த நாட்டில் பிரச்சினையாக இருக்கின்றது. இவர்கள் எதிர்பார்க்கவில்லை.
மஞ்சள் தீவிரவாதம்
மஞ்சள் உடையணிந்த தீவிரவாதமே இப்போது நாட்டில் இருக்கின்றது. உண்ணாவிரதம் என்ற போர்வையில் ஜீவனியை குடித்துகொண்டிருந்த ரத்ன தேரருக்கும் கோத்தபாயவுக்கும் தொடர்பு உள்ளது. அவசர காலச் சட்டம் அமுலில் இருக்கும் போது எவ்வாறு உண்ணாவிரதம் இருக்க முடியும். ஏன் நீதியை நிலைநாட்டவில்லை.
கேள்வி: விடுதலைப் புலிகள் அமைப்பை ஒடுக்குவதற்காகவே தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் இருக்கின்றன. உங்கள் பார்வையில்…?
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கு அந்தளவுக்கு திறமை இருக்கவில்லை. பணத்துக்காக உருவாக்கப்பட்ட அமைப்பே இது. எஸ்.எல்.டி. அமைப்பு உள்ள கட்டிடம் எவ்வாறு வந்தது. இதை யார் வாங்கி தந்தார்கள்? கோத்தபாய ராஜபக் ஷ வாங்கி தந்தாரா? அல்லது சர்வதேசத்திடமிருந்து பணம் வந்ததா என யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் பள்ளிவாசல்களுக்கு சென்று கேள்வி கேட்கின்றார்கள்.
பணத்துக்கு ஏமாறவில்லை
தனது வீட்டில் ஐந்து வாள்கள் உள்ளதாக இராணுவத் தளபதி கூறுகிறார். எனது வீட்டில் 13 பிள்ளைகள் என்பதால் கட்டலுக்கு அடியில் தனது அப்பா வாள் ஒன்றை வைத்திருந்தார் என ஜனாதிபதி கூறியுள்ளார். ஒவ்வொரு சிங்களவரின் வீட்டிலும் வாள் உள்ளது என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதனை பொன்சேகா பொய் என்கிறார்.
தௌஹீத் ஜமாஅத் அமைப்பை சிங்களவர்கள் காட்டிகொடுக்கவில்லை. முஸ்லிம்களே காட்டிகொடுத்தார்கள். தம்மை காட்டிகொடுக்க வேண்டாம் என 14 மில்லியன் ரூபா பணத்தை வீதியில் வீசினார்கள்.
ஆனால் எமது மக்கள் பணத்துக்கு ஏமாறவில்லை. நாட்டின் அமைதியை கருதி ஒன்றிணைந்து செயற்பட்டார்கள். தற்போது அந்த மக்களையே சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் அச்சத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அரசாங்க உத்தியோகம் செய்த முஸ்லிம்களை கூட இந்த அரசாங்கம் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலையை உருவாக்கி கொடுத்துள்ளது.
சிங்களத்தில் மாத்திரம் நல்லிணக்கம்
முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றாக விலகியது மொட்டு கட்சியினருக்கே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘முஸ்லிம் தலைவர்கள் சிங்களத்தில் நல்லிணக்கம் சமாதானம் என கதைக்கின்றார்கள்.
ஆனால் தமிழில் தீவிரவாதமே பேசுகின்றார்கள்” என மஹிந்த ராஜபக் ஷ கூறியுள்ளார். இவர்களே அடிப்படைவாதிகள். முஸ்லிம்கள் சிலர் இந்த நபர்களை நம்புகின்றார்கள். இது தொடர்பில் முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
மொட்டு சின்னத்தை சேர்ந்தவர்களே முஸ்லிம்களின் சொத்துக்களை இலக்கு வைத்து தாக்கினார்கள். முதலில் தமிழர்களை தாக்கினோம் இப்போது முஸ்லிம்களை தாக்கியுள்ளோம். எனவே சிங்களவர்கள் எமக்கு ஆதரவாக ஒன்று திரள வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், சிறுபான்மையினரின் வாக்குகள் இன்றி வெற்றி பெறமுடியாது. மஹிந்த ராஜபக் ஷ குழுவினருக்கு சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவது என்பது எட்டாக்கனியாகும்.
இதற்காக சிங்கள மக்கள் அனைவரையும் இலக்காக வைத்து சிறுபான்மையின மக்கள் மீது அட்டகாசங்களை கட்டவிழ்த்துள்ளனர்.
அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால்…
2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் ஊழல் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி வழங்கினார்கள். ஆனால் இதுவரை ஒருவரை கூட சிறையிலடைக்கவில்லை.
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் இன்று மஹிந்த குடும்பமே சிறையினுள் இருந்திருக்கும். யாரும் வாய் திறந்திருக்கமாட்டார்கள்.
கேள்வி: ஊழல் செய்தவர்களை இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு காரணம் எதுவென நீங்கள் கருதுகின்றீர்கள்?
இவர்களிடையிலான ஒப்பந்ததே இது. யாரும் யாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரின் சொத்து விபரங்களையும் ஆராய்ந்து பார்க்கப் போனால் அனைவரும் சிக்கிக்கொள்வார்கள்.
கேள்வி: பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்பாக சர்ச்சையான பல விடயங்களை சாட்சியமாக வழங்கியிருந்தீர்கள். இதன் பின்னர் ஜனாதிபதியையும் அவசரமாக சந்தித்திருந்தீர்கள். சாட்சியம் வழங்கிய பின்னர் உங்களுக்கு உயர்மட்டங்களிலிருந்து அழுத்தம் ஏதும் பிரயோகிக்கப்பட்டதா?
இல்லை. மீண்டும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க உள்ளேன். சாட்சியத்துக்கு ஆதாரமான பல ஆவணங்களையும் கையளிக்க உள்ளேன்.
500மில்லியன் இலஞ்சம்
கேள்வி : தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு தொடர்பில் எதுவும் பேசக்கூடாது எனவும் அதற்காக 500 மில்லியன் ரூபா பேரம் பேசப்பட்டதாகவும் தெரிவுக்குழு முன் சாட்சியம் வழங்கியிருந்தீர்களே?
இல்லை. அங்கு தௌஹீத் ஜமாஅத் அமைப்பு தொடர்பாக கூறவில்லை. நான் அன்று கைது செய்யப்பட்ட இரவு வேளையில் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த சிலர் என்னிடம் வந்து, ‘உங்களுக்கு 500 மில்லியன் ரூபா பணம் தருகின்றோம்.
பணத்தை எடுத்துக்கொண்டு நாட்டை விட்டு தப்பிச் செல்லுங்கள். இல்லாவிட்டால் எங்களோடு இணைந்து அரசியல் செய்ய வேண்டும்.
அதற்காக 300 மில்லியன் ரூபாவை நீங்களே வைத்துக்கொண்டு 200 மில்லியன் ரூபாவை தேர்தல் செலவீனங்களுக்காக பயன்படுத்துங்கள்” என்று நிபந்தனை விதித்தார்கள்.
அவர்கள் கொண்டு வந்திருந்த உடன்படிக்கைகள் தொடர்பான ஆவணங்களை கிழித்தெறிந்து விட்டே சிறையிலிருந்து யாருடைய உதவியும் இன்றி வெளியில் வந்தேன்.
கேள்வி: சஹ்ரான் காத்தான்குடியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும் முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுடன் தொடர்புகளை பேணி வந்ததாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளீர்கள். இதுதொடர்பில் ஆதாரங்கள் உள்ளதா?
இல்லை. நான் அவ்வாறு கூறவில்லை.
தேரருக்கு நன்றி
கேள்வி: உங்களை இராஜினாமா செய்ய தூண்டியது யார்? ஏதேனும் அரசியல் பின்புலம் இருக்குமென கருதுகிறீர்களா?
யாருடைய அழுத்தத்திலும் நான் இராஜினாமா செய்யவில்லை. நானாகவே முடிவெடுத்து பதவியை இராஜினாமா செய்தேன். இதன் பின்னர் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டாக பதவி விலகினார்கள். இது மொட்டு சின்ன குழுவினருக்கு பாரிய அடியாக இருந்தது. எதிர்வரும் தேர்தலில் ரத்ன தேரரின் புகைப்படத்தை வைத்தே நாங்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவோம்.
எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியாக களமிறங்கவும் ஆலோசித்து வருகின்றோம். இதற்கு வழியமைத்து கொடுத்த ஞானசார தேரருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
கொள்ளையடித்த பணம் டுபாயில்
கேள்வி: அடிப்படை மதவாதமும் அரசியல் சக்திகளின் செயற்பாடும் நாட்டை சீரழிவை நோக்கி கொண்டு செல்வதாக கூறப்படுகின்றதே..?
நிச்சயமாக.., இந்த 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னர் நடப்பதை பாருங்கள். மொட்டு சின்னத்தை சேர்ந்த மஹிந்த அணியினர் இனவாதமே பேசி வருகின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஒரு சிறு உதவியை கூட செய்யவில்லை. ஆனால் உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
மஹிந்த ராஜபக் ஷ கொள்ளையடித்த பணமெல்லாம் டுபாயில் உள்ளது. இதனை மூடிமறைக்க ரணில் விக்கிரமசிங்கவே உதவி செய்தார். இதற்கு ஆதரவாக மைத்திரிபாலவும் உடன் இருந்தார்.
கேள்வி: இலங்கையில் முஸ்லிம் மக்கள் மிகுந்த அச்சமான சூழ்நிலையில் தமது அன்றாட கடமைகளை மேற்கொள்ள தள்ளப்பட்டுள்ளனர். இதனை எவ்வாறு சீர் செய்யலாம் என நினைக்கின்றீர்கள்?
இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் மக்கள் தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வருகின்றார்கள். இதனால் சாதாரண பொதுமகனையும் தீவிரவாதியாக மாற்றி விட வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றேன்.
கோத்தா களமிறங்க மாட்டார்
கேள்வி: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே..?
இல்லை. அவர் களமிறங்க மாட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லை. பசில் ராஜபக் ஷவே களமிறங்குவார் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மறுபக்கம் ஷிரந்தி ராஜபக் ஷவும் களமிறங்க முயற்சிப்பதாக தெரிய வருகின்றது.
கேள்வி : ஐக்கிய தேசியக் கட்சியில் யார் களமிறங்கலாம்?
சஜித் பிரேமதாஸவே களமிறங்க வேண்டும் என அனைவரினதும் விருப்பமாக உள்ளது. ஆனால் ரணில் தலைவராக இருக்கும் மட்டும் அது நடக்காது.
கேள்வி : ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக் ஷ, ரணில் விக்கிரமசிங்க, கோத்தபாய ராஜபக் ஷ அல்லது பசில் ராஜபக் ஷ ஆகியோரில் ஒருவர் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு கையாழுவார்கள் என நினைக்கின்றீர்கள்?
இவர்களின் நிலைப்பாடு தொடர்பில் யாராலும் அறிந்து கொள்ள முடியாது. ஆனால் முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்படவேண்டும்.
நேர்காணல் : எம்.டி.லூஸியாஸ்
செய்தி மூலம்: வீரகேசரி வாரவெளியீடு