முதலிரவுக்குப் போவது முக்கியமா கணக்கு வழக்கு முக்கியமா ஒழுங்கு மரியாதையா கணக்க சொல்லிவிட்டுப் போடானு முதலிரவு செல்ல இருந்த மகனைத் தடுத்ததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையைக் கட்டையால் அடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆதிச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரின் மகன் இளமதி. இவருக்கு நேற்று முன்தினம் திருமணம் செய்து வைத்தார்.
திருமணத்தில் வந்த மொய்ப் பணம் மற்றும் திருமணதந்துக்கான வரவு செலவுகள் குறித்து அன்று இரவே தந்தையும் மகனும் கணக்குப் பார்த்தனர். கணக்கு பார்த்ததில் முன்னுக்குப் பின்னாக இருந்துள்ளது.
கடைசிவரையிலும் கணக்கு டேலியாகவில்லை. இது குறித்து அவரின் தந்தை, மகனிடம் கேட்க இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அதற்கு அவரின் மகன் காலையில் கணக்கைப் பார்த்துக்கொள்ளலாம் எனச் கூறிவிட்டு வீட்டினுள் செல்ல முயன்றுள்ளார்.
இதனால் கோபமடைந்த அவரின் தந்தை சண்முகம், `கணக்கை முடித்துவிட்டு வீட்டுக்குள் போ’ எனக் கூறியுள்ளார்.
`காலையில் கணக்குப் பார்த்துக்குவோம்’ என்று சொல்லியிருக்கிறார் இளமதி. அதற்கு அவரின் தந்தை, `முதலிரவுக்குப்போவது முக்கியமா, கணக்கு வழக்கு முக்கியமா.
ஒழுங்கு மரியாதையா கணக்க சொல்லிட்டுப் போடா’ என்று கூறி மகனின் தோளைப் பிடித்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதற்கு அவர், தந்தையின் கையைத் தட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். இதனால் கோபமடைந்த சண்முகம், அருகில் கிடந்த ரீப்பர் கட்டையை எடுத்து தன் மகனைத் தாக்கியிருக்கிறார்.
அந்த ரீப்பரை தந்தையிடமிருந்து பறித்து, அவரின் தலையில் அடித்ததோடு, அவரை இளமதி கீழே தள்ளியிருக்கிறார்.
மயக்க நிலையில் சண்முகம் கிடக்கிறார் என்று உறவினர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீர் தெளித்துப் பார்த்திருக்கிறார்கள்.
கடைசி வரையில் சண்முகம் எழுந்திருக்கவில்லை. பதற்றமடைந்த அவரின் குடும்பத்தினர், 108 ஆம்புலன்சுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து சண்முகத்தைப் பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் எனக் கூறி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சண்முகத்தின் தம்பி அண்ணாதுரை, உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ஆய்வாளர் பிரேமா வழக்கு பதிவு செய்து இளமதியைக் கைதுசெய்து விசாரித்து வருகிறார்