முஸ்லிம்களுக்கு கல் ஏறிய வேண்டும் என்றும் என்றும் முஸ்லிம் கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அவர்கள் வழங்கும் உணவுகளை உட்கொள்ளவேண்டாம் என்றும் இலங்கையின் அதி உயர் பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட சிறி ஞானரத்ன தேரர் சிங்கள மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாயந்த திஸ்ஸநாயகக்க கலந்துகொண்டிருந்த ஒரு நிகழ்வில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உரை ஆற்றியபோதே இவாறு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் மிக மோசமான கருத்துக்களை அவர் தெரிவித்தார் என்று அவரது பேச்சின் காணொளியை ஆதாரமாக வெளியிட்டு கொழும்பு ரெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
மிகவும் வெளிப்படையாக இவ்வாறு வன்முறையை தூண்டும் பேச்சை வரகாகொட சிறி ஞானரத்ன மகாநாயக்கர் தெரிவித்துள்ளமை அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை ( International Covenant on Civil and Political Rights) மீறுவதாக அமைந்துள்ளபோதிலும் அவருக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் கொழும்பு ரெலிகிராப் சுட்டிக்காட்டியுள்ளது.
” எவ்வாறு முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படவேண்டும் என்று மாயந்த இங்கு பேசினார்.
நானோ முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளுக்கு போகாதீர்கள், அவர்கள் வழங்கும் உணவுகளை உட்கொள்ளாதீர்கள் . முஸ்லிம்கள் எம் மீது அன்பு கொண்டிருக்கவில்லை என்று இப்பொழுது சொல்கிறேன் ” என்று சிறி ஞானரத்ன மகாநாயக்கர் கூறினார்.
” முஸ்லிம்கள் எமது (சிங்கள ) மக்களை நஞ்சூட்டி விட்டனர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. எமது மக்களை அழிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுவந்துள்ளனர்.
ஆகவே பௌத்தர்கள் தம்மை தாமே பாதுகாப்பது முக்கியமானது ” என்று அவர் மேலும் கூறினார்.
முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் மேலும் வன்மத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசிய அவர்,
முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளில் வாங்கும் உணவுகளை உண்பதால் இளம் சந்ததியினர் மலடுகளாக ஆகிவிடுவார் என்றும் கூறியதுடன், “மாத்தளையை சேர்ந்த ஒரு வைத்தியர் எமது நூற்றுக்கணக்கான சிறுவர்களை அழித்துவிட்டார் ” என்று குருநாகலை சேர்ந்த மருத்துவர் மொஹமட் சாபியை சுட்டிக்காட்டி பேசினார்.
“துரோகிகள் அமைதியாக இருக்க விடப்படக்கூடாது ” என்று மேலும் இனவாத தூபம்போட்ட வரகாகொட சிறி ஞானரத்ன மகாநாயக்கர் ” எவ்வாறு இத்தகைய வைத்தியர்கள் கல்லெறிந்து கொள்ளப்படவேண்டும் என்று இங்கு சிலர் பேசினார்கள்.
இது நடக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவ்வாறுதான் நடக்கவேண்டும். எமது மக்களில் எவராவது இவ்வாறு அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) எதிராக தவறு செய்திருந்தால், நாம் துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்டிருப்போம் ” என்று கூறினார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் திகதிகூட அறிவிக்காத நிலையில், வெற்றியாளரை தனது உரையில் அறிவித்த சிறி ஞானரத்ன மகாநாயக்கர் ” சாமல் ராஜபக்ஸ இந்த நாட்டின் எதிர்கால ஜனாதிபதி என்ற நல்ல செய்தி ஒன்றை கேள்விப்பட்டேன்.
இதனை நான் முதலில் கேள்விப்படவில்லை ஆனால் இப்போது கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன் ” என்று கூறியதுடன் ” நாட்டை மீள கட்டி எழுப்பவும் பாதுகாக்கவும் மாயந்தவும் கட்சி மாற வேண்டும் என்று நான் அழைக்கிறேன் ” என்று அவர் குறிப்பிட்டார்.