தமிழகம் மட்டுமல்ல வட மாநிலங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய மத்தியப் பிரதேசமும் வறட்சியின் பிடியிலிருந்து தப்பவில்லை.
வற்றிப்போன கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் பிடிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் 30 மாவட்டங்களில் 23 மாவட்டங்கள் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் பாலைவனப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் மக்கள் ஒரு குடம் குடிநீருக்காகப் பல கிலோ மீட்டர் தொலைவு நடந்துசெல்கின்றனர்.
டேங்கர் லாரி எப்போது வருமென்று பாலைவனத்தில் பல மணி நேரம் வெயிலில் காத்துக் கிடக்கின்றனர்.
பல கிலோ மீட்டர் தொலைவு நடந்தாலும் ஆடு, மாடுகளுக்குக் குடிக்க தண்ணீர் கிடைப்பதில்லை.
இதனால், தாங்கள் மேய்த்து வரும் கால்நடைகளின் தாகம் தீர்க்க முடியாமல் அதன் உரிமையாளர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
மகாராஷ்ட்ர மாநிலம் நாசிக் அருகேயுள்ள திரிம்பேஷ்வர் அருகேயுள்ள சிறிய அணைக்கட்டு முற்றிலும் வற்றிவிட்டது.
ஆங்காங்கே தேங்கியிருக்கும் தண்ணீரை மோட்டார் வைத்து எடுக்கின்றனர். ராஜஸ்தானில் பொக்ரான் அருகே ஆயிரக்கணக்கான மாடுகள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் நாக்கு வறண்டு இறந்து கிடக்கின்றன.
இறந்து கிடந்த மாடுகளை மொத்தமாக வாகனத்தில் அள்ளிச் செல்லும் காட்சியை புருஷோத்தம் திவாகர் என்பவர் புகைப்படமாக எடுத்துள்ளார்.
இந்தப் புகைப்படம் வெளியாகி மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.