நான்கு வயதான ஒரு சிறுவன், இனிப்பு வாங்குவதற்காக தனது வீட்டிலிருந்த கார் ஒன்றை 2 கிலோமீற்றருக்கு அதிகமான தூரம் தனியாகச் செலுத்திச் சென்ற சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
மினசோட்டா மாநிலத்தின், பிளெய்ன் நகரைச் சேர்ந்த செபஸ்டியன் எனும் 4 வயதான சிறுவனே சொகுசு கார் ஒன்றை சுமார் ஒன்றரை மைல் ( சுமார். 2.4 கிலோமீற்றர்) தூரம் தனியாகச் செலுத்திச் சென்றுள்ளான்.
பிளெய்ன் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சிறுவன், இனிப்பு வாங்குவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலுள்ள கடைக்குச் செல்ல தீர்மானித்தான்.
தனது பூட்டனாரின் கார் சாவி (திறப்பு) சுவரில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில், அதை எடுத்த சிறுவன், ஒருவருக்கும் தெரியாமல் மேற்படி Hyundai santa fe செலுத்திச் செல்ல ஆரம்பித்தான்.
சுமார் ஒன்ரை மைல் தூரம் அவன் பயணம் செய்திருந்த நிலையில், குட்டிப் பையன் ஒருவன் காரொன்றை செலுத்திச் செல்வதாக பஸ் சாரதி ஒருவர், பிளெய்ன் நகர பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார்.
அதற்குள் 4 வயதான செபஸ்டியன் எனும் சிறுவனைக் காணவில்லை என ஜென்னா ஸ்வென்சன் என்பவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
இரு தொலைபேசி அழைப்புகளிலும் கூறப்பட்ட விடயங்களை இணைத்துப் பார்த்த பொலிஸாருக்கு நிலைமை புரிந்தது.
அவர்கள் உடனடியாக பஸ் சாரதி கூறிய இடத்துக்குச் சென்றனர். அவ்வேளையில் பஸ் சாரதி மேற்படி காரை நிறுத்தி, காரின் சாவியையும் தன் வசம் வைத்துக்கொண்டிருந்தார்.
பின்னர், சிறுவனை அவனின் வீட்டு;க்கு அழைத்துச் சென்று குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
வளர்ந்தவர்களுக்காக தயாரிக்கப்பட்ட காரொன்றை மிகச் சிறிய சிறுவன் இயக்குவது கடினம். ஆனால், செபஸ்டியன், மேற்படி காரை வீட்டிலிருந்து பின்னோக்கி எடுத்து, அயல்வீடுகளைக் கடந்து, இடதுபுறமாக பல்கலைக்கழக வீதிக்குத் திருப்பி காரை செலுத்திச் சென்றிருந்தான்.
மணித்தியாலத்துக்கு 10 முதல் 14 மைல் வேகத்தில் அவன் சென்றுகொண்டிருந்தான், பரபரப்பான பிரதான வீதியொன்றை அவன் நெருங்கிக்கொண்டிருந்த நிலையில் அவன் தடுத்து நிறுத்தப்பட்டான் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சிறுவன் பாதூகாப்பாக திரும்பி வந்தமை குறித்து நிம்மதியடைந்துள்ள குடும்பத்தினர், இனிமேல் சிறுவனின் கைக்கு எட்டாத வகையில் கார் சாவியை வைத்திருப்பதற்கும். சிறுவன் மீது மேலும் கவனம் செலுத்தவும் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.