ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால், அவரது கட்சி அலுவலகத்துக்கு முன்னால், இன்று (02) காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தினாரால் முன்னெடுக்கப்பட்ட ஆட்கடத்தலில் ஈ.பி.டி.பிக்கும் துணையிருப்பதாகவும், அத்துடன், வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் சங்க இணைப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பிலுப்பதாகவும் கூறியே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராடடத்தில் ஈடுபட்டவர்கள், “டக்ளஸ் தேவானந்தா கைது செய்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும்”, “ஆட்கடத்தல்காரன் டக்ளஸ் அரச ஒட்டுக்குழு”, “தமிழரை அழிப்பதில் அரசுடன் இணைந்து தீவிரமாக செயற்பட்டது ஈ.பி.டி.பி”, வவுனியாவில் காணாமல் போனவர்கள் மீது தாக்குதல் நடத்திய அத்தனை ஈ.பி.டி.பியினரையும் கைது செய்”, ஈ.பி.டி.பி என்ற துணை இராணுவக் குழுவே கடத்தலில் ஈடுபட்டது”, “ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கடத்திவிட்டு, இப்போது எம்மிடம் வருகிறான் டக்ளஸ்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இதன்போது, குறித்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு, ஈ.பி.டி.பி கட்சி அலுவலகத்துக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.