புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான அமுதசுரபி பெட்ரோல் பங்கில் கடந்த வியாழக்கிழமை இரவு டீசல் நிரப்புவதற்காக சென்ற புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனின் காரில் டீசல் நிரப்ப பங்க் பணியாளர்கள் மறுத்துள்ளனர்.

இதனால் கார் ஓட்டுநருக்கும், பங்க் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அமைச்சரின் காரில் டீசல் நிரப்பாமலே அங்கிருந்து வெளியேறினார் காரின் ஓட்டுநர்.

இது குறித்து அமுதசுரபி பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கூறுகையில், “புதுச்சேரியில் உள்ள அமுதசுரபி பெட்ரோல் பங்குகளில் கடந்த நான்கு மாதங்களில் அரசு வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பியதில் 2.30 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதனால் பெட்ரோல் பங்குகளை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலுவை தொகையை உடனே திரும்ப செலுத்தாவிட்டால், டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு அரசு வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பப்படாது என அரசு துறைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது,” என தெரிவித்தார்.

கடன் பாக்கியால் அரசு வாகனங்களுக்கு பெட்ரோல் டீசல் நிரப்பப்படாது என்ற அறிவிப்பால் காரில் டீசல் நிரப்ப மறுத்த சம்பவம் அமைச்சர் கமலக்கண்ணனுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அமைச்சர் வியாழக்கிழமை இரவு தனது ஊரான காரைக்கால் சென்றுவிட்டார். அமைச்சர் கமலக்கண்ணன் அரசு பணிகளை செய்வதற்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் இடையே காரில் வந்து செல்வது வழக்கம். ஆனால் தனது காரில் டீசல் நிரப்ப மறுக்கப்பட்ட மறுதினம் (வெள்ளிக்கிழமை) அமைச்சர் வழக்கத்திற்கு மாறாக புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக பேருந்தில் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

_110393331_mநடந்த சம்பவம் குறித்து சம்பந்தம்பட்ட அமைச்சர் கமலக்கண்ணன் கூறுகையில், “எனது காரில் டீசல் நிரப்ப மறுக்கப்பட்டதற்கும், நான் பேருந்தில் வந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 10 வருடங்களாக காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்தில் வந்திருக்கிறேன். அமைச்சரான பிறகு நான் வருவது இதுவே முதல்முறை. கடந்த இரண்டு மூன்று தினங்களாக சென்னை, புதுச்சேரி என அதிகமாக காரில் பயணம் செய்தேன். அதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்தில் செல்லலாம் என்று விருப்பப்பட்டு நான் வந்தேன்,” என்றார்.

மேலும் “அரசு பேருந்தில் பொதுமக்களுக்கான சௌகரியங்கள் குறித்து தெரிந்துகொள்ள முடியும் என்பதால் பேருந்தில் பயணம் செய்தேன். பொதுவாக சொந்த ஊரில் இருக்கும்போது இரு சக்கர வாகனத்தில் பயணம் செல்வது வழக்கம், நெடுந்தூரம் பயணம் செல்லும்போது மட்டுமே காரில் பயணம் செய்வேன். ஒரு மாறுதலுக்காக புதுச்சேரிக்கு பேருந்தில் பயணம் செய்யலாம் என்று விரும்பியே வந்தேன்,” என தெரிவித்தார்.

Share.
Leave A Reply